சொந்த ஊரிலேயே அரசு வேலை: போஸ்ட் ஆபீஸ் ஜிடிஎஸ் பணிக்கு விண்ணப்பிக்கத் தயாரா?
தமிழகத்தின் மூலைமுடுக்குகளில் உள்ள கிராமங்களையும் நகரங்களையும் இணைக்கும் பாலமாக விளங்குவது அஞ்சல் துறை. கடிதங்கள் சுமந்து வந்த காலம் போய், இன்று வங்கிச் சேவைகள் முதல் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் வரை சாமானிய மக்களின் வீட்டு வாசலுக்கே கொண்டு வரும் ஒரு உன்னத சேவையை இத்துறை செய்து வருகிறது. இத்தகைய பெருமைமிக்க தமிழ்நாடு அஞ்சல் துறையில், சொந்த ஊரிலேயே அரசுப் பணியாற்றும் ஒரு பொன்னான வாய்ப்பு இப்போது இளைஞர்களுக்குக் கதவைத் தட்டியுள்ளது.
பணியின் விவரங்கள்: அஞ்சல் துறையில் கிளை அஞ்சல் அலுவலர் (Branch Postmaster), உதவி கிளை அஞ்சல் அலுவலர் (Assistant Branch Postmaster) மற்றும் டாக் சேவகர்கள் (Dak Sevaks) ஆகிய பதவிகளுக்காக இந்த ஆள்சேர்ப்பு நடைபெறுகிறது.

முக்கியத் தகுதிகள்:
-
கல்வி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
-
மொழித் திறன்: உள்ளூர் மொழியான தமிழில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
-
கூடுதல் தகுதிகள்: கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும் மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது அவசியம்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும் (16.02.2026 தேதியின்படி). அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
சம்பள விவரம்:
-
கிளை அஞ்சல் அலுவலர் (BPM): ரூ. 12,000 முதல் ரூ. 29,380 வரை.
-
உதவி கிளை அஞ்சல் அலுவலர் (ABPM) / டாக் சேவகர்கள்: ரூ. 10,000 முதல் ரூ. 24,470 வரை.
மாவட்ட வாரியாக காலியிடங்கள் (முக்கிய இடங்கள்): தமிழகம் முழுவதும் பரவலாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக திருவண்ணாமலையில் 99 இடங்களும், திருப்பூரில் 95 இடங்களும், புதுச்சேரியில் 75 இடங்களும், தாம்பரத்தில் 71 இடங்களும் காலியாக உள்ளன. சென்னை, கோவை, மதுரை, திருச்சி என அனைத்து முக்கிய மண்டலங்களிலும் கணிசமான இடங்கள் உள்ளன.
தேர்வு முறை: இந்தப் பணிகளுக்குத் தனியாகத் தேர்வுகள் எதுவும் கிடையாது. பத்தாம் வகுப்பில் நீங்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மெரிட் பட்டியல் தயார் செய்யப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பக் கட்டணம் ரூ.100 மட்டுமே. பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணம் செலுத்துவதில் முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ளவர்கள் https://indiapost.gov.in/gdsonlineengagement என்ற இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
கடைசி நாள்: 16.02.2026
அரசுத் துறையில் நுழையக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு, குறிப்பாகத் தங்கள் மாவட்டத்திலேயே பணியாற்ற விரும்புவோருக்கு இது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு.


