பேரிடர் காலத்து ஆபத்பாந்தவன்: உலக வானொலி தின சிறப்புப் பார்வை!

பேரிடர் காலத்து ஆபத்பாந்தவன்: உலக வானொலி தின சிறப்புப் பார்வை!

லகெங்கும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் இதயத் துடிப்போடு இரண்டறக் கலந்த ஒரு அற்புதக் கருவி வானொலி. அறிவியல் வளர்ச்சியில் எத்தனையோ டிஜிட்டல் மாற்றங்கள் வந்தாலும், இன்றும் அதன் மகுடம் குறையாமல் கம்பீரமாக வலம் வருகிறது. பிப்ரவரி 13-ஆம் தேதியான இன்று, அந்த மாயப் பெட்டியின் மகத்துவத்தைப் போற்றும் ‘உலக வானொலி தினம்’.

AI என்பது கருவிதான், குரல் அல்ல!

இந்த 2026-ஆம் ஆண்டு உலக வானொலி தினத்தின் கருப்பொருள் மிகவும் முக்கியமானது: “வானொலி மற்றும் செயற்கை நுண்ணறிவு” (Radio and AI). இதில் “AI என்பது ஒரு கருவி, குரல் அல்ல” என்ற ஆழமான சிந்தனை முன்வைக்கப்படுகிறது. தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும், ஒரு வானொலி அறிவிப்பாளரின் குரலில் இருக்கும் அந்த உணர்ச்சியையும், நேயர்களுடனான அந்தப் பிணைப்பையும் இயந்திரங்களால் தந்துவிட முடியாது என்பதே இதன் எதார்த்தம்.

வானொலியின் பிதாமகன் ஒரு இந்தியர்!

வானொலியைக் கண்டுபிடித்தது மார்க்கோனி என்றுதான் நாம் பாடப்புத்தகங்களில் படித்திருப்போம். ஆனால், உண்மை அதுவல்ல. இது பல அறிவியலாளர்களின் கூட்டு உழைப்பு. முக்கியமாக, இதற்கான அடித்தளத்தை அமைத்தவர் நம் மண்ணின் மைந்தர், மேற்கு வங்கத்தில் பிறந்த ஜெகதீஸ் சந்திரபோஸ். அலைக்கற்றை மூலமான தகவல் தொடர்புக்குப் பிதாமகனாக விளங்கிய இவரைப் பெருமைப்படுத்தும் விதமாகவே, ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 30-ஆம் தேதியை ‘தேசிய அமெச்சூர் வானொலி தினமாக’ நாம் கொண்டாடுகிறோம்.

அறிவியல் அறிஞர்களுக்கு முன்பே, “காசி நகர்ப் புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்குவோம்” என்று தீர்க்கதரிசனமாகப் பாடியவன் நம் மகாகவி பாரதி. அந்த ஆசைதான் இன்று வானொலியாக நம் கைகளில் தவழ்கிறது.

துரோகி அல்ல… ஆபத்பாந்தவன்!

டிவி, ஸ்மார்ட்போன், இணையம் என எத்தனை வந்தாலும், ஒரு நெருக்கடி நிலை என்று வரும்போது நம் அனைவரின் பார்வையும் வானொலியை நோக்கித்தான் திரும்புகிறது. அரசியல் பதற்றம், நிலநடுக்கம், பெருவெள்ளம், கொள்ளைநோய், காட்டுத்தீ போன்ற பேரிடர் காலங்களில், மற்ற தகவல் தொடர்பு சாதனங்கள் முடங்கிப்போகும் போது, வானொலி மட்டுமே உயிர்நாடியாகச் செயல்படுகிறது.

மின்சாரம் இல்லாத இடங்களிலும், கடலில் தவிக்கும் மீனவர்களுக்கும் புயல் மற்றும் கடல் கொந்தளிப்புத் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதில் குறுகிய அலை வானொலி, ஹாம் (HAM) வானொலி மற்றும் சமூக வானொலிகள் இன்றும் தன்னிகரற்ற சேவையைச் செய்து வருகின்றன. வதந்திகள் பரவும் சூழலில், உண்மைத் தகவல்களைத் தரும் நம்பகமான கருவியாகவும் இது திகழ்கிறது.

வாழ்க்கையை அழகாக்கிய மாயப் பெட்டி!

அப்போதெல்லாம் வாழ்க்கை இவ்வளவு விலை உயர்ந்ததாக இல்லை, ஆனால் வானொலி இருந்ததால் சலிப்பில்லாமல் இருந்தது. பெரிய வீடுகளில் மர்பி ரேடியோக்களும், சிறிய வீடுகளில் டிரான்சிஸ்டர்களும் ராஜாவாக வீற்றிருக்கும். சைக்கிளில் டைனமோ வைத்திருப்பதே பெரிய விஷயமாகக் கருதப்பட்ட காலத்தில், பிலிப்ஸ், பேனாசோனிக் வானொலிகள் வைத்திருப்பது ஒரு கௌரவ அடையாளமாக இருந்தது.

குரலால் கட்டிப்போட்ட வித்தகர்கள்!

“செய்திகள் வாசிப்பது செல்வராஜ்”, “மாநிலச் செய்திகள் வாசிப்பவர் சரோஜினி” என்ற குரல்கள் கேட்டால் வீடே நிசப்தமாகிவிடும். தென்கச்சி கோ. சுவாமிநாதனின் ‘இன்று ஒரு தகவல்’, இளையராஜா, எம்.எஸ்.வி, எஸ்.பி.பி, சித்ரா, ஜேசுதாஸ் போன்றோரின் தேன் சொட்டும் பாடல்கள் என வானொலி ஒரு காலத்தையே கட்டிப்போட்டு வைத்திருந்தது. இன்றும் இரவு நேரங்களில் அந்தப் பழைய பாடல்களைக் கேட்டுக்கொண்டே உறங்கச் செல்வது பலருக்கு ஒரு தவம் போன்றது.

யுனெஸ்கோ அமைப்பால் 2012 முதல் அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடப்படும் இந்தத் தினம், வெறும் கொண்டாட்டமல்ல; மனித உணர்வுகளையும், உலகையும் இணைக்கும் அந்தத் ‘தகவல் பாலத்தின்’ வலிமையை உணர்த்தும் ஒரு நாள். தொழில்நுட்பங்கள் மாறலாம், ஆனால் வானொலி தரும் அந்தத் தனித்துவமான சுகம் என்றும் மாறாது!

வாத்தீ அகஸ்தீஸ்வரன் 

Related Posts