‘ப்ராமிஸ்’ ஆடியோ லாஞ்ச்: விழாவில் வெடித்த விஜய் & ஜனநாயகன் சர்ச்சை!
சினிமா உலகில் பெரிய நட்சத்திரங்கள் இல்லாவிட்டாலும், அழுத்தமான கதையிருந்தால் மக்கள் கொண்டாடுவார்கள் என்பதற்கு மற்றுமொரு உதாரணமாக உருவாகி இருக்கிறது ‘ப்ராமிஸ்’ (Promise). சத்தியத்தின் சக்தியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு வந்திருந்த படக்குழுவினர் அனைவரும் தமிழர் பாரம்பரியப்படி வேட்டி-சட்டை அணிந்து வந்து விழாவிற்கு ஒரு கம்பீரத்தைக் கொடுத்தனர்.
ஆறு மாத யோசனை.. ஆகஸ்டில் பூஜை!
விழாவில் அனைவரையும் வரவேற்றுப் பேசிய தயாரிப்பாளர் N.நாகராஜன், இந்தப் படம் உருவான சுவாரசியமான கதையைப் பகிர்ந்துகொண்டார். “2023-ல் வேலூரில் ஒரு தம்பி கதையைச் சொன்னார். ஆறு மாதம் யோசித்தேன். என் மனைவி கொடுத்த ஊக்கத்தால் 2024 ஆகஸ்ட் 15-ல் இந்தப் படத்தைத் தொடங்கினோம். தலைப்பு ஆங்கிலத்தில் இருந்தாலும், படம் முழுக்கத் தமிழ் மணம் கமழும். இப்போது தேர்வு எழுதக் காத்திருக்கும் மாணவனைப் போல மக்கள் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறேன்” என்றார் உருக்கமாக.

பாடல்கள் ‘ஸ்பீடு பிரேக்கர்’ அல்ல.. ‘மைலேஜ்’!
பாடலாசிரியர் பாலா பேசும்போது ஒரு முக்கியமான கருத்தை முன்வைத்தார். “இப்போதெல்லாம் பாடல்களை வேகத்தடை என்கிறார்கள். ஆனால், அது தவறு. ஒரு நல்ல பாடல் படத்திற்கு மைலேஜ் கொடுக்கும். ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்திற்கு ஒரு பழைய பாடல் எப்படியொரு அடையாளத்தைத் தந்தது என்பதை நாம் பார்த்தோம். இந்தப் படத்திலும் நல்ல பாடல்கள் அமைந்துள்ளன” என்றார். எடிட்டர் ஸ்ரீராம் விக்னேஷ் பேசுகையில், “முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போல, ட்ரெய்லரில் பல ரகசியங்களை மறைத்து வைத்துள்ளோம், படம் பார்க்கும்போது அது புரியும்” என்று எதிர்பார்ப்பைக் கூட்டினார்.
இயக்குநர் அருண்குமார் சேகரனின் ‘உயிரோட்டமான’ உழைப்பு
ஊடகத்துறையில் அனுபவம் கொண்ட அருண்குமார் சேகரன், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகவும் கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார். அவர் பேசும்போது, “எங்களுக்கு எந்தப் பின்புலமும் இல்லை. 12 பேர் கொண்ட ஒரு சின்ன குழுவாகத்தான் இந்தப் படத்தை முடித்தோம். ஒரு கட்டத்தில் படம் நின்றுவிடுமோ என்று பயந்தபோது, கதாநாயகி நதியா கை கொடுத்து உதவினார். ஹெச்.வினோத் சாரிடம் உதவி கேட்டோம், அவர் உதவ முன்வந்தார். ஆனால் ‘ஜனநாயகன்’ பிரச்சினையில் அவர் இருந்ததால் எங்களால் அவரைத் தொந்தரவு செய்ய முடியவில்லை” எனச் சில கசப்பான உண்மைகளைப் பகிர்ந்துகொண்டார்.
ரீரிலீஸ் அரசியலும்.. ‘ஜனநாயகன்’ சர்ச்சையும்!
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இயக்குநர் பேரரசு வழக்கம்போல அதிரடியாகப் பேசினார்.
-
சத்தியம்: “முன்பெல்லாம் சத்தியத்திற்கு ஒரு பயம் இருந்தது. இன்று சத்தியம் என்றால் சர்க்கரைப் பொங்கல் ஆகிவிட்டது. இந்தக் கதையில் கதாநாயகன், கதாநாயகி தலையில் அடித்துச் சத்தியம் வாங்குவதைப் பார்த்தால் ஏதோ ஒரு பெரிய திருப்பம் இருப்பதாகத் தெரிகிறது.”

-
ரீரிலீஸ் சர்ச்சை: “இன்று பழைய படங்களை ரீரிலீஸ் செய்கிறார்கள். ‘மங்காத்தா’ ஹவுஸ்புல்லாக ஓடுவதால் ‘திரௌபதி 2’ போன்ற நேரடிப் படங்கள் வசூலில் திணறுகின்றன. ரீரிலீஸ் என்பது நடிகர்களுக்கு ஒரு ஃபேண்டஸி; ஆனால் புதிய படங்கள் தயாரிப்பாளர்களுக்கு வாழ்வாதாரம். இதைக் கட்டுப்படுத்த வேண்டும்.”
-
ஜனநாயகன் விவகாரம்: “விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் சென்சாரில் சிக்கி நீதிமன்றம் வரை செல்வது வேதனை அளிக்கிறது. மத்திய அரசு வாங்கும் வரிப்பணத்தில்தான் சென்சார் போர்டுக்குச் சம்பளம் கொடுக்கப்படுகிறது. அதை மறந்துவிட்டு ஒரு படத்தை இத்தனை நாள் முடக்குவது தவறு” எனச் சீறினார்.
தயாரிப்பாளர் கே.ராஜனின் காரசாரப் பேச்சு
தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “பழிவாங்கும் அரசியலுக்காகச் சினிமாவை பலிகடா ஆக்காதீர்கள்” எனத் தொடங்கினார். “‘ஜனநாயகன்’ படத்தின் கதாநாயகன் அரசியலுக்கு வந்ததால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி இது. கதாநாயகன் சம்பளத்தை வாங்கிவிட்டார், ஆனால் பணம் போட்ட தயாரிப்பாளர் அல்லவா இப்போது நடுத்தெருவில் நிற்கிறார்? ஒரு கூட்டணி அறிவிப்பு வெளியானால் ஒரு மணி நேரத்தில் சென்சார் சர்டிபிகேட் வந்துவிடும் என்கிற நிலை இருப்பது வேதனைக்குரியது. ‘ப்ராமிஸ்’ படத்தைப் பொறுத்தவரை ஒரு நல்ல தயாரிப்பாளர் கிடைத்துள்ளார், படம் நிச்சயம் வெற்றி பெறும்” என வாழ்த்தினார்.


