வங்காள விரிகுடா – விமர்சனம்!
சினிமாவில் மொத்தம் உள்ள 24 துறைகளில் (Crafts), கதை, திரைக்கதை, பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, கலை இயக்கம், சண்டை பயிற்சி, தயாரிப்பு மற்றும் இயக்கம் என சுமார் 21 பொறுப்புகளைத் தன் தோளில் சுமந்து கின்னஸ் சாதனை முயற்சியுடன் களமிறங்கியிருக்கிறார் குகன் சக்கரவர்த்தி. ஒரு நடிகராக அவர் கவனம் ஈர்த்தாலும், இயக்குநராகப் பார்வையாளர்களைக் கதற வைத்திருக்கிறார் என்பதே நிதர்சனம்.
கதைக்களம்
தூத்துக்குடி மாவட்டத்தின் செல்வாக்கு மிக்க தொழிலதிபர் குகன் சக்கரவர்த்தி. இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாமல் கடற்கரையில் தனிமையில் இருக்கும்போது, தற்கொலைக்கு முயலும் தனது முன்னாள் காதலியைக் காப்பாற்றுகிறார். இருவரது மணவாழ்க்கையும் கசப்பானதாக இருப்பதை உணரும் நாயகன், காதலியின் வாழ்வைச் சீரமைக்க ஒரு கொலையைச் செய்துவிட்டு அவருடன் வாழத் தொடங்குகிறார்.
ஆனால், கொலை செய்யப்பட்ட நபர் போனிலேயே மிரட்டத் தொடங்க, ‘செத்தவன் எப்படி பேசுவான்?’ என்ற குழப்பம் நாயகனுக்கும், பயம் காதலிக்கும் ஏற்படுகிறது. தங்களை மிரட்டும் அந்த மர்ம நபர் யார்? பின்னணியில் உள்ள சதி என்ன? என்பதைச் சொல்ல முயல்வதே வ.வி. படக் கதை.
நடிப்பு மற்றும் இயக்கம்
படம் முழுவதும் பட்டு வேட்டி, வண்ணமயமான சட்டைகளுடன் பவனி வரும் குகன் சக்கரவர்த்தி, ரஜினியின் ஸ்டைலில் ஒரு ‘வெள்ளை விஜயகாந்தாக’த் திரை முழுவதும் ஆக்கிரமிக்கிறார். ஏழைகளுக்கு உதவுவது, தவறு செய்பவர்களைத் தட்டிக்கேட்பது, காதல், மரியாதை எனத் தமிழ் சினிமாவின் அத்தனை மாஸ் ஹீரோக்களின் கலவையாகத் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகனின் மனைவி மற்றும் முன்னாள் காதலி என இரண்டு நாயகிகளும் வெறும் பொம்மைகளாக இல்லாமல், கதைக்குத் தேவையான பங்களிப்பைச் செய்துள்ளனர். பொன்னம்பலம், வையாபுரி, வாசு விக்ரம் போன்ற அனுபவக் கலைஞர்கள் இருப்பது படத்திற்குச் சற்றே பலம். ஏகப்பட்ட புதுமுகங்கள் அவ்வப்போது வந்து போகிறார்கள்.
தொழில்நுட்பம் மற்றும் அரசியல்
திராவிடத் தலைவர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களைப் புகழ்ந்து எழுதியுள்ள பாடல் கவனம் ஈர்க்கிறது. பின்னணி இசையும், ஒளிப்பதிவும் படத்திற்குத் தேவையான ‘ஓகே’ ரக உழைப்பைத் தந்துள்ளன.
மாஸ் ஆக்ஷன் படமாகத் தொடங்கி, பிறகு குடும்ப சென்டிமென்ட், இறுதியில் சஸ்பென்ஸ் த்ரில்லர் எனப் பல ஜானர்களில் திரைக்கதை பயணிக்கிறது. இதில் உச்சகட்டக் கூத்து என்னவென்றால், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களுக்குப் புதிய வடிவம் கொடுத்து, மெரினா கடற்கரை என்பதை ‘திராவிட கடற்கரை’ எனப் பெயர் மாற்ற வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை விடுத்திருப்பதே! இது சமூக வலைத்தளங்களில் ‘மீம்’ மெட்டீரியலாக மாறும் அளவுக்குக் காமெடியாக அமைந்துவிட்டது.
ஆந்தை ரிப்போர்ட்டர் தீர்ப்பு
“புதுமையான முயற்சி” என்று நம்பி உள்ளே போனால், “போதும் சாமி, ஆளை விடுங்க” என்று கதற வைக்கும் ஒரு கலவையைத் தந்திருக்கிறார் இயக்குநர். மொத்தத்தில், இந்த ‘வங்காள விரிகுடா’-வில் அலையுமில்லை, ஆழமுமில்லை!
மார்க்: 2.25 / 5


