தலைவர் தம்பி தலைமையில் – விமர்சனம்: பொங்கல் ‘சிரிப்பு’ விருந்து!

தலைவர் தம்பி தலைமையில் – விமர்சனம்: பொங்கல் ‘சிரிப்பு’ விருந்து!

டந்த சில ஆண்டுகளா தமிழ் சினிமாவுல காமெடிங்கிறது ஒரு ‘அரிய வகை’ பொருளா மாறிடுச்சு. திறமையான காமெடி நடிகர்களோ, வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கிற படங்களோ இல்லாம தமிழ் சினிமா ரசிகர்கள் வறட்சியில தவிச்சுட்டு இருந்தாங்க. அந்தக் குறையைப் போக்கி, இந்த பொங்கலுக்கு ரசிகர்களைச் சிரிப்பு மழையில நனைய வைக்க ‘தம்பி’ ஜீவா தலைமையில் ஒரு பட்டாளமே களமிறங்கியிருக்கு. வறண்டு கிடந்த தமிழ் சினிமாவுக்கு இந்தத் ‘தம்பி’ ஒரு ஜாலியான தீர்வுன்னு அடிச்சுச் சொல்லலாம்!

கதைக்களம்:

ஒரு சின்ன ஊரு, அருகருகே ரெண்டு வீடு. ஒண்ணு மணி (தம்பி ராமையா), இன்னொண்ணு இளவரசு. இளவரசு வீட்டுல அடுத்த நாள் கல்யாண ஏற்பாடு ஜரூரா நடக்குது. அதே நேரத்துல மணியோட அப்பா ‘திடீர்’னு மரணமடையுறாரு. ஏற்கனவே ரெண்டு பேருக்கும் ஆகாதுங்கிறதால, கல்யாணத்தையும் துக்கத்தையும் ஒரே நேரத்துல நடத்த ரெண்டு பேரும் பிடிவாதம் பிடிக்கிறாங்க. பஞ்சாயத்து தலைவர் ஜீவா சமாதானம் பண்ணப் பார்க்குறாரு, ஆனா மோதல் பெருசாகி கடைசியில ஒரு ‘கலாட்டா’ கிளைமாக்ஸோட முடியுது இந்தத் தம்பி புராணம்!

யார் யார் எப்படி?

  • ஜீவா: ஒரு கலகலப்பான, பொறுப்பான கேரக்டர்ல கச்சிதமா பொருந்திப் போறாரு. மொத்த படத்தையும் தன் தோள்ல சுமந்து, ஒரு ‘தலைவரா’ முத்திரை பதிச்சிருக்காரு மனுஷன்.

  • தம்பி ராமையா & இளவரசு: கதையோட மையப்புள்ளிகளே இவங்கதான். ரெண்டு பேரும் போட்டி போட்டு நடிச்சு சுவாரஸ்யத்தை ஏத்துறாங்க.

  • பிரார்த்தனா நாதன்: ‘பார்க்கிங்’ படத்துக்கு அப்புறம் இதுல மணமகளா வந்து எளிமையான அழகால மனசை அள்ளுறாங்க.

  • சிரிப்புப் பட்டாளம்: ஜென்சன் திவாகர், சர்ஜின் குமார்னு ஒரு பெரிய டீமே படம் முழுக்க நம்மள சிரிக்க வைக்கிற வேலையைச் செவ்வனே செஞ்சிருக்காங்க.

டெக்னிக்கல் கச்சேரி:

இயக்குநர் நிதிஷ் சகாதேவ் ஏற்கனவே மலையாளத்துல ‘ஃபேமிலி’னு ஒரு காமெடி படத்தை எடுத்தவர். ஒரு மலையாளப் படத்தை எப்படி எதார்த்தமா தமிழ்ப்படுத்த முடியும்னு இதுல நிரூபிச்சிருக்காரு. பப்ளு அஜுவோட கேமரா படம் முழுக்க ஒரு கலர்ஃபுல் ஃபீலை தருது. விஷ்ணு விஜய்யோட இசை கொண்டாட்ட ரகம்னா, அர்ஜுனே பாபுவோட எடிட்டிங் படத்தை ஜெட் வேகத்துல நகர்த்துது.

ஆந்தை அலசல்:

படம் முழுக்க நகைச்சுவை அலை அடிச்சாலும், அதுல சொல்லப்பட்டிருக்கிற சில விஷயங்கள் சிந்திக்க வைக்குது. குறிப்பா, கிளைமாக்ஸ் பக்கத்துல ‘பெரியார்’ வாய்ஸ்ல வர்ற அந்த வசனமும் வெடிச்சிரிப்பும் வேற லெவல் ‘ஹை’! பட்ஜெட் சிரமங்கள் இருந்தாலும், தமிழ்ல தன் முதல் படத்தை ஒரு திருப்தியான படைப்பா தந்திருக்காரு இயக்குநர்.

மொத்தத்தில் மலையாளப் படம் மாதிரித் தமிழ் படம் வராதான்னு ஏங்குற ரசிகர்களுக்கு இது ஒரு சரியான பதில். குடும்பத்தோட ஜாலியா தியேட்டருக்குப் போய் சிரிக்கணும்னு நினைக்கிறவங்களுக்கு இந்த ‘தலைவர் தம்பி தலைமையில்’ ஒரு தரமான பொங்கல் விருந்து!

மார்க்: 3.5 / 5

Related Posts