14 பில்லியன் ‘சயனைட்’ கொடுத்து ‘காலி’ செய்த ‘மெட்டா’!
ஒரு நிறுவனத்திற்கு 14 பில்லியன் டாலர் (சுமார் 1 லட்சம் கோடி ரூபாய்) முதலீடு கிடைத்தால் என்ன நடக்கும்? கொண்டாட்டங்கள் நடக்கும், ஊழியர்களுக்கு போனஸ் கிடைக்கும், நிறுவனம் விஸ்வரூப வளர்ச்சி அடையும். ஆனால், ‘ஸ்கேல் ஏஐ’ (Scale AI) என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் இதற்கு நேர்மாறான சோகம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான ‘மெட்டா’ (Meta) உள்ளே நுழைந்த பிறகு, அந்த நிறுவனமே ஒரு “வெடிக்கக் காத்திருக்கும் வெடிகுண்டாக” (Ticking Time Bomb) மாறியுள்ளது என பிசினஸ் இன்சைடர் அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியிட்டுள்ளது.
1. நடுரோட்டில் விடப்பட்ட நிறுவனம்:
செயற்கை நுண்ணறிவுத் துறையில் (AI) ஜாம்பவான்களாகத் திகழும் கூகுள் (Google), ஓபன் ஏஐ (OpenAI) போன்ற நிறுவனங்கள், தங்கள் AI மாடல்களைச் சோதிக்கவும் (Stress Testing), அதில் உள்ள பிழைகளைக் களையவும் நம்பியிருந்த ஒரே இடம் ‘ஸ்கேல் ஏஐ’. காரணம், அது ஒரு நடுநிலையான நிறுவனம்.

ஆனால், எப்போது மெட்டா நிறுவனம் 14 பில்லியன் டாலரை முதலீடு செய்து, ஸ்கேல் ஏஐ-யில் ஒரு பெரும் பங்கை வாங்கியதோ, அப்போதே அதன் ‘நடுநிலைத்தன்மை’ காலாவதியாகிவிட்டது. “எங்கள் போட்டியாளரான மெட்டாவுக்குச் சொந்தமான ஒரு நிறுவனத்திடம், எங்கள் ரகசியங்களை எப்படி கொடுப்பது?” என கூகுளும், ஓபன் ஏஐ-யும் ஸ்கேல் ஏஐ உடனான ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு வெளியேறிவிட்டன.
2. 28 வயது பவுண்டரை ‘திருடிய’ மெட்டா:
மெட்டா செய்த அடுத்த காரியம் இன்னும் அதிர்ச்சியானது. ஸ்கேல் ஏஐ-யின் மூளையாகச் செயல்பட்ட அதன் 28 வயது நிறுவனர் அலெக்ஸாண்டர் வாங் (Alexandr Wang)-ஐயும் மெட்டா தனது நிறுவனத்திற்கு இழுத்துக்கொண்டது (Poached). தலைவன் இல்லாத கப்பலாக அந்த ஸ்டார்ட்அப் தற்போது தத்தளிக்கிறது.
3. ஊழியரின் கேள்விக்கு ‘சாட்ஜிபிடி’ சொன்ன மரண வாக்குமூலம்:
நிறுவனத்தின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைவதைக் கண்ட ஸ்கேல் ஏஐ ஊழியர் ஒருவர், விரக்தியில் தான் அதுவரை சோதித்து வந்த சாட்ஜிபிடியிடமே (ChatGPT) ஒரு கேள்வியைக் கேட்டார். “எங்கள் நிறுவனத்தின் எதிர்காலம் என்ன?” என்பதுதான் அந்த கேள்வி. அதற்கு சாட்ஜிபிடி அளித்த பதில், அந்த ஊழியரை மட்டுமல்ல, ஒட்டுமொத்த டெக் உலகையும் அதிர வைத்துள்ளது.
சாட்ஜிபிடியின் கணிப்பு (அதிகாரப்பூர்வமானது அல்ல என்றாலும்):
-
“அடுத்த 24 மாதங்களில் ‘ஸ்கேல் ஏஐ’ என்ற ஒரு நம்பகமான தனி நிறுவனம் இருக்காது.”
-
“இதன் உள்கட்டமைப்பு அனைத்தும் மெட்டாவின் சொந்தத் தேவைகளுக்காக மாற்றப்படும்.”
-
“இதன் வாடிக்கையாளர் கூட்டம் ஆவியாகிவிடும்.”
-
“ஒரு நடுநிலையான ஆய்வாளர் (Neutral Red Teamer) என்ற அதன் பங்கு முடிவுக்கு வந்துவிட்டது.”
4. ஊழியர்களின் மனநிலை:
சாட்ஜிபிடியின் இந்த பதிலை அந்த ஊழியர் சக ஊழியர்களுடன் பகிர்ந்துள்ளார். “ஏற்கனவே நாங்கள் வெளியேறத் தயாராகிவிட்டோம். இந்த நிறுவனம் இப்போது ஒரு டைம் பாம் போல உள்ளது,” என ஒரு ஊழியர் கூறியதாக பிசினஸ் இன்சைடர் தெரிவிக்கிறது.
ஆந்தை ரிப்போர்ட்டர் பார்வை:
சில மாதங்களுக்கு முன்பு வரை டெக் உலகின் உச்சாணிக்கொம்பில் இருந்த ஒரு நிறுவனம், ஒரே ஒரு முதலீட்டு ஒப்பந்தத்தால் எப்படிச் சின்னாபின்னமானது என்பதற்கு ‘ஸ்கேல் ஏஐ’ ஒரு பாடம். மெட்டாவின் 14 பில்லியன் டாலர் என்பது முதலீடு அல்ல; அது போட்டியாளரை அழிப்பதற்கான ஒரு மூலோபாயம் (Strategy) என்பது இப்போது தெளிவாகிறது. மெட்டா எனும் திமிங்கலம், ஸ்கேல் ஏஐ எனும் சிறு மீனை விழுங்கிவிட்டது என்றே சொல்லலாம்!
ஈஸ்வர் பிரசாத்


