✈️ சிவில் விமானப் போக்குவரத்து நாள்: இண்டிகோ ஆதிக்கமும் மோடி அரசின் இயலாமையும்!

✈️ சிவில் விமானப் போக்குவரத்து நாள்: இண்டிகோ ஆதிக்கமும் மோடி அரசின் இயலாமையும்!

ண்டுதோறும் டிசம்பர் 7-ஆம் நாள் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினம்  (International Civil Aviation Day) கொண்டாடப்படுகிறது. விமானப் போக்குவரத்து கண்டுபிடிக்கப்பட்ட பிறகு பயண நேரம் குறுகி, உலகளாவிய சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டில் விமான சேவைகளின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், 1944-ல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு சர்வதேச அமைப்பின் வேண்டுகோளை ஏற்று, ஐ.நா. பொதுச்சபை இந்த தினத்தை அறிவித்தது. இந்த நாளில், உலகம் போக்குவரத்து வசதிகளின் வளர்ச்சியைப் பாராட்டுகிறது. ஆனால், வளரும் நாடான நம் இந்தியாவில், நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்த வேளையிலேயே, விமானப் போக்குவரத்துத் துறையில்  மூன்றில் இரண்டு பங்குக்கும் மேலான பகுதியை (சுமார் 64% சந்தைப் பங்கு) வைத்திருக்கும் தனியார் நிறுவனமான இண்டிகோ (Indigo), இரண்டு நாட்களாக மத்திய அரசுக்கும் பயணிகளுக்கும் வேண்டுமென்றே ஒரு செயற்கை நெருக்கடியை ஏற்படுத்திப் போக்கு காட்டியது.

சந்தைக் கடையான இந்திய விமான நிலைய

இன்றைய நவீன உலகில், பணி நிமித்தமாக, மருத்துவ அவசரத் தேவைக்காக, அல்லது பணத்தை விட நேரத்தின் மதிப்பு தேவைப்படுபவர்கள் என்று அதிகளவில் மக்கள் விமானப் போக்குவரத்தைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அத்தகையவர்களுக்கு, முறையான முன்னறிவிப்புகள் ஏதுமின்றி இண்டிகோ நிறுவனம் திடீரெனப் பல விமானச் சேவைகளை ரத்து செய்ததும், தாமதப்படுத்தியதும் அதிர்ச்சி அளித்தது. இது கிட்டதட்ட பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட போது நாடு எதிர்கொண்ட அசாதாரண சூழலைப் போலவே விமான நிலையங்கள் காட்சி அளிக்க வழிவகுத்தது. மக்கள் விமான நிலையங்களில் போராடத் தொடங்கினர்.

இண்டிகோ நிறுவனம் ஒருபுறம் அரசுடன் தங்கள் பேரத்தைப் பேசிக்கொண்டே, மறுபுறம் அந்த நிறுவனத்தை நம்பி விமானப் பயணச்சீட்டை வாங்கிய லட்சக்கணக்கான பயணிகளை அவதிக்குள்ளாக்கி பந்தாடிக் கொண்டிருந்தது. ஓர் அத்தியாவசிய பொதுச் சேவையை ஒரு நிறுவனம் இந்த அளவுக்குச் சீர்குலைத்தது, தனியார்மயமாக்கல் மற்றும் சந்தையில் உள்ள ஏகபோகத்தின் (Monopoly) அபாயத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.

மோடி அரசின் இயலாமை: ஏகபோக வளர்ச்சிக்கு உதவிய கைகள்

இந்தச் சூழலில், இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையை நிர்வகிப்பதில் மோடி அரசின் இயலாமை குறித்துக் கேள்விகள் எழுகின்றன. மத்தியில் முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில், இந்திய விமானப் போக்குவரத்துத் துறை பலதரப்பட்டோரின் பங்களிப்புடன் அருமையாகச் செயல்பட்டது. ஏர் டெக்கான் (Air Deccan), கிங்ஃபிஷர் (Kingfisher), ஜெட் ஏர்வேஸ் (Jet Airways) போன்ற பல தனியார் நிறுவனங்கள் போட்டியுடன் செயல்பட்டதால், பயணிகளுக்குத் தேர்வு செய்யும் வாய்ப்பு இருந்தது. எந்த ஒரு தனி நிறுவனமும் சந்தையில் ஆதிக்கம் செலுத்த முடியாத நிலை இருந்தது. அரசாங்கம், ஏர் இந்தியாவுக்குப் புத்துயிர் அளிக்கும் முயற்சிகளுடன், தனியார் துறைப் போட்டியையும் ஊக்குவித்தது.

ஆனால், கடந்த சில ஆண்டுகளில், அரசின் தவறான கொள்கைகள் மற்றும் போட்டி நிறுவனங்களின் தொடர்ச்சியான சரிவுகளுக்குப் பின்னால், இண்டிகோ நிறுவனத்தின் மோனோபோலிக்கு மத்திய அரசு மறைமுகமாக உதவிவிட்டது என்பது கசப்பான உண்மை. சந்தையில் இண்டிகோவின் 64% ஆதிக்கம் என்பது, ஒரு தனியார் நிறுவனம் விரும்பினால் நாட்டின் விமானப் போக்குவரத்துச் சேவையை முடக்கிப் போட முடியும் என்ற அபாயகரமான நிலையை உருவாக்கியுள்ளது. இவ்வளவு அதிக சந்தைப் பங்கைக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனம் நெருக்கடி கொடுத்தால், அதைச் சமாளிக்கவோ அல்லது பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யவோ அரசிடம் போதுமான சந்தை சமநிலை இல்லை. இந்த ஏகபோகப் போக்கைத் தடுக்காதது மோடி அரசின் விமானப் போக்குவரத்துக் கொள்கையின் மிகப்பெரிய தோல்வி ஆகும்.

சந்தைப் போட்டியே ஆரோக்கியமானது

சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினத்தில், நாம் பயணத்தின் வேகத்தைப் பற்றிப் பேசுவதை விட, பயணத்தின் பாதுகாப்பையும் நம்பகத்தன்மையையும் பற்றியே அதிகம் பேச வேண்டும். ஓர் அவசரத் தேவையின்போது பயணிகளின் நேரத்தையும், மருத்துவத் தேவையையும் பணயமாக வைத்து ஒரு நிறுவனம் அரசை மிரட்ட முற்படுகிறது என்றால், அது வெறும் வர்த்தகப் பிரச்சனை அல்ல; அது தேசியப் பொதுச் சேவையின் நம்பகத்தன்மை குறித்த பிரச்சனை.

இந்திய அரசு உடனடியாகச் செய்ய வேண்டியது:

போட்டியாளர்களை ஊக்குவித்தல்: ஏகபோகத்தைத் தடுக்கவும், இண்டிகோவின் ஆதிக்கத்தைக் குறைக்கவும், புதிய மற்றும் ஏற்கனவே உள்ள விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு (ஏர் இந்தியா உட்பட) அரசு முழு ஆதரவையும் ஊக்குவிப்பையும் அளித்து, சந்தைப் போட்டியைக் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும்.

பயணிகள் நலன் பாதுகாப்பு: இதுபோன்ற நெருக்கடியான காலங்களில், விமானச் சேவைகளை ரத்து செய்யும் நிறுவனங்களுக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கும் வகையிலும், பயணிகளுக்கு உடனடியாக மாற்றுப் பயணச் சீட்டுகள் அல்லது முழுமையான பணத்தைத் திரும்பக் கொடுப்பதற்கான சட்டத் திருத்தங்களை உடனடியாகக் கொண்டு வர வேண்டும்.

பயணிகளின் கண்ணீர் மற்றும் அவசரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, விமானப் போக்குவரத்துத் துறையில் ஆரோக்கியமான சந்தைப் போட்டியைக் கொண்டு வந்து, சேவையின் நம்பகத்தன்மையைக் காக்க வேண்டியது மத்திய அரசின் உடனடிக் கடமையாகும். இல்லையெனில், சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினம் வெறும் பெயருக்குரிய நாளாகவே இந்தியாவிற்கு இருக்கும்.

நிலவளம் ரெங்கராஜன்