நாடு தழுவிய அதிரடி வேட்டை: நைஜீரிய போதைப்பொருள் கடத்தல் கும்பல் கூண்டோடு கைது – முழு விவரம்
தெலுங்கானா காவல்துறையின் சிறப்புப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவான ‘ஈகிள்’ (EAGLE – Elite Action Group for Drug Law Enforcement), டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (NCB) அதிகாரிகளுடன் இணைந்து, இந்தியா முழுவதும் செயல்பட்டு வந்த மாபெரும் நைஜீரிய போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் கூண்டோடு பிடித்துள்ளது.
சோதனை மற்றும் கைது நடவடிக்கை: டெல்லி, நொய்டா, குவாலியர் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட இந்தத் கூட்டுச் சோதனையில், விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 50-க்கும் மேற்பட்ட நைஜீரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து சுமார் 3.5 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் மற்றும் கட்டுக்கட்டான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடத்தல் மற்றும் விநியோக முறைகள் (Modus Operandi): ஈகிள் படையினரின் விசாரணையில் இந்தக் கும்பலின் திடுக்கிடும் செயல்பாடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன:
-
பரந்த நெட்வொர்க்: இந்தக் கும்பல் இந்தியா முழுவதும் சுமார் 2000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மற்றும் சில்லரை வியாபாரிகளுக்கு (Peddlers) போதைப்பொருளை விநியோகம் செய்து வந்துள்ளது.
-
பினாமி கணக்குகள்: பணப் பரிவர்த்தனைக்காக நூற்றுக்கணக்கான ‘பினாமி வங்கிக் கணக்குகள்’ (Mule accounts) பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த வங்கிக் கணக்குகள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட போன் எண்கள் அனைத்தும் நைஜீரிய கையாளுபவர்களிடம் (Handlers) ஒப்படைக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டுள்ளன. இதில் தொடர்புடைய 107 வங்கிக் கணக்குகள் தற்போது முடக்கப்பட்டுள்ளன.
-
விநியோக மையங்கள்: வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் வந்ததும், டெல்லியின் முக்கியப் பகுதிகளான லாடோ சராய் (Lado Sarai), மெஹ்ராலி (Mehrauli), சந்த் கர் (Sant Garh), பிரதாப் என்கிளேவ், நிலோத்தி மற்றும் முனிர்கா (Munirka) போன்ற காலனிகளில் இருந்து போதைப்பொருள் பார்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
கூரியர் நிறுவனங்கள் மூலம் கடத்தல்: போலீசாரின் சந்தேகத்தைத் தவிர்க்க, காலணிகள் (Shoes), ஆடைகள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் செருப்புகளுக்குள் மறைத்து வைத்து போதைப்பொருட்களை அனுப்பியுள்ளனர். இதற்காகப் பின்வரும் முன்னணி கூரியர் நிறுவனங்களை இவர்கள் பரவலாகப் பயன்படுத்தியுள்ளனர்:
-
ஸ்ரீ மாருதி கூரியர் (Sree Maruthi Couriers)
-
DTDC
-
புரொபஷனல் கூரியர் (Professional Couriers)
-
ஷிப் ராக்கெட் (Shiprocket)
-
இந்தியா போஸ்ட் (India Post)
-
டெலிவரி (Delhivery)
-
ப்ளூ டார்ட் (Blue Dart)
-
ட்ராக் ஆன் (TrackOn Couriers)

பறிமுதல் செய்யப்பட்டவை: நான்கு முக்கிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்டவை:
-
5340 எக்ஸ்டஸி (Ecstasy) மாத்திரைகள்
-
250 கிராம் கோகைன் (Cocaine)
-
109 கிராம் ஹெராயின் (Heroin)
-
250 கிராம் மெத்தாம்பேட்டமைன் (Methamphetamine)
பின்னணி: கைது செய்யப்பட்ட நைஜீரியர்கள் பலர் மாணவர் விசாவில் இந்தியா வந்துள்ளனர். ஆனால், கல்லூரிக்குச் செல்லாமல் போதைப்பொருள் விற்பனை மற்றும் பாலியல் தொழில் மூலம் பணம் சம்பாதித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். சோதனையின் போது பல இடங்களில் இவர்கள் கதவைத் திறக்காமல், போதைப்பொருட்களைக் கழிவறையில் கொட்டி அழித்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் கைதானவர்கள் அனைவரும் மேல் விசாரணைக்காக டெல்லி குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நொய்டா மற்றும் விசாகப்பட்டினத்தில் இவர்களுக்கு உதவிய முக்கியப் புள்ளிகள் மற்றும் பினாமி கணக்குகளைக் கையாண்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பார்த்தசாரதி


