💥அமேசான் vs. பெர்ப்ளெக்சிட்டி: ‘எங்ககிட்ட நீங்க பொருள் வாங்க வேண்டாம்’ என்று சொன்னது ஏன்?? ஒரு டெக்-த்ரில்லர்!

💥அமேசான் vs. பெர்ப்ளெக்சிட்டி: ‘எங்ககிட்ட நீங்க பொருள் வாங்க வேண்டாம்’ என்று சொன்னது ஏன்?? ஒரு டெக்-த்ரில்லர்!

லகிலேயே மிகவும் வெற்றிகரமான மின் வணிக நிறுவனமான அமேசான், யாராவது தங்களது தளத்தில் பொருள் வாங்குவதைத் தடுக்க முயற்சிக்குமா? கேள்விக்கே இடமில்லை என்றுதான் தோன்றுகிறது! ஆனால், உண்மையில், அமேசான் தனது தளத்தில் நுழையும் ஒரு தரப்பினரைப் பார்த்து, “எங்ககிட்ட நீங்க பொருள் வாங்க வேண்டாம்” என்று நேரடியாகவே எச்சரித்துள்ளது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், தொழில்நுட்ப உலகிலும் பெரும் குழப்பத்தையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த எதிர்மறையான எச்சரிக்கைக்குப் பின்னால் இருப்பது என்ன? இது ஒரு போட்டியாளர் மீதான வெறுப்பா? அல்லது AI தொழில்நுட்பத்தின் புதிய அச்சுறுத்தலா? அமேசானின் கோபத்துக்கு இலக்கானது, பெர்ப்ளெக்சிட்டி AI நிறுவனத்தின் சாமர்த்தியமான AI ஏஜென்டான ‘கோமெட்’ தான். ஒரு AI ஏஜென்ட் ஷாப்பிங் செய்தால் அமேசானுக்கு ஏன் இவ்வளவு பெரிய சிக்கல்? இந்தச் சட்டப் போராட்டமும், AI-மின் வணிக மோதலும் எதிர்கால ஷாப்பிங் முறையை எப்படி மாற்றப்போகிறது என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

💥எச்சரிக்கை & சவால் விடுத்தது யார்?

இந்த ஒற்றை வரியை அமேசான் சொன்னது, சாமானியர்களிடமோ அல்லது பொதுப் போட்டியாளர்களிடமோ அல்ல. இது, நம்மில் பலர் பெருமையுடன் “நம்ம அரவிந்து!” என்று சொந்தம் கொண்டாடும் அரவிந்த் ஶ்ரீநிவாஸ் தலைமையிலான AI ஸ்டார்ட்அப் நிறுவனமான பெர்ப்ளெக்சிட்டி AIக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை.

பெர்ப்ளெக்சிட்டியின் சூப்பர் AI: கோமெட் (Comet)

பெர்ப்ளெக்சிட்டி அறிமுகப்படுத்திய புதிய கருவிதான் இந்தச் சர்ச்சையின் நாயகன்: ‘கோமெட்’ என்ற AI உலாவி ஏஜென்ட்.

இந்த ஏஜென்ட்தான் அமேசானின் கோபத்திற்குக் காரணம். ஏன்?

🛒 வாங்கும் பெருமாள்களும், கிட்டுமணி கோமெட்டும்!

கோமெட்டின் சிறப்பு என்னவென்றால், அது வெறும் தேடல் கருவி அல்ல; அது ஒரு திறமையான கிட்டுமணி ஏஜென்ட்.

“எனக்கு 20,000 ரூபாய்க்குக் கீழ, கேமரா நல்லா இருக்கிற, இந்த எட்டு கண்டிஷனுக்குப் பொருந்துற ஒரு ஃபோனைப் பார்த்து, நீயே கார்ட்டில் சேர்!”

நாம் இடும் இந்த அடுக்கடுக்கான கட்டளைகளை, கோமெட் சிரமேற்கொண்டு செய்யும்.

  1. அது அமேசான் தளத்திற்குள் நுழையும்.

  2. விவரங்களை நோட்டமிடும்.

  3. நம் எட்டுக் கட்டளைகளுக்கும் சரியாகப் பொருந்தும் ஒரு பொருளைத் தேர்ந்தெடுக்கும்.

  4. நம் ஷாப்பிங் கார்ட்டில் அதைச் சேர்த்துவிடும்!

நமது பணி மிகவும் எளிது: செக்-அவுட் மட்டும் செய்தால் போதும். தினந்தோறும் விலை மாறும் டிஜிட்டல் உலகில், பார்த்துப் பார்த்துப் பொருள் வாங்க இந்த ஏஜென்ட் உதவுகிறது.

💔 அமேசானின் கண்ணீர்: ஏன் கோபம்?

சரி, நிறையப் பேர் பொருள் வாங்கினால் அமேசானுக்கு லாபம் தானே? அப்படியென்றால், கோமெட்டால் அமேசானுக்கு என்ன சிக்கல்?

இங்கேதான் ஒரு நுட்பமான தொழில்நுட்ப இடைவெளி (Technical Gap) உருவாகிறது.

1. மனிதனுக்காக அமேசான், பாட்களுக்காக அல்ல!

அமேசான் கோடிக்கணக்கான டாலர்களைச் செலவழித்து தனது தளத்தை வடிவமைத்ததற்கான ஒரே நோக்கம்: மனிதப் பயனர்களின் அனுபவத்தை (User Experience) மேம்படுத்துவது.

  • நாம் ஒரு பொருள் வாங்க வந்தால், விளம்பரங்களைக் காட்டலாம்.

  • “இதையும் பாருங்க… இது உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்” என்று ஆசையைக் கூட்டி, கூடுதலாகப் பொருளை விற்கலாம்.

  • நம்மைத் தளத்திற்குள் நீண்ட நேரம் வைத்திருக்கலாம்.

ஆனால், கோமெட் ஏஜென்ட் என்பது ஒரு பாட் (Bot).

பாட்களின் இயல்பு விளைவுகள்
மொழி: பைனரி (0, 1) விளம்பரங்கள், ஆசை வார்த்தைகள் பாட்களிடம் வேலை செய்யாது.
நோக்கம்: கட்டளை நிறைவேற்றம் ‘உள்ளதைச் சொல்வேன், சொன்னதைச் செய்வேன்’ என்று முடித்துக்கொண்டு, ஒரு பொருளை மட்டும் வாங்கிவிட்டுச் செல்லும்.
சிக்கல்: அமேசானின் விளம்பர வருவாயும், அதிகப்படியான விற்பனை உத்திகளும் பாதிக்கப்படும்!

2. கணினி மோசடி (Computer Fraud) குற்றச்சாட்டு!

அமேசானைப் பொறுத்தவரை, ஒரு பாட், தான் ஒரு பாட் என்பதை மறைத்து, மனிதனைப் போலச் செயல்பட்டு, அதன் தளத்தின் தரவுகளைத் திரட்டுவதும், வாங்குதல்களைத் தொடர்வதும் கணினி மோசடி.

அமேசானின் வாதம்: இந்த நிலை தொடர்ந்தால், தளத்தின் வேகம் குறையும், உள் கட்டமைப்புக்குச் சுமை கூடும். எதிர்காலத்தில் அமேசானின் தளத்துக்கு பாட்கள் மட்டுமே வந்து, வர்த்தக முறையே மாறிவிடும்.

இதுதான் அமேசான் கொதித்தெழுந்து, “எங்ககிட்ட வாங்காதீங்க!” என்று பெர்ப்ளெக்சிட்டிக்கு எச்சரிக்கை விடுத்து, “கோர்ட்டில் சந்திப்போம்” என்று கிளம்ப ஒரு முக்கியக் காரணம்.

⚔️ அடுத்து என்ன?

  • அரவிந்த் ஶ்ரீநிவாஸ் தரப்பு, “இந்தப் பூச்சாண்டிக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம்” என்று சவால் விடுத்துள்ளது.

  • அமேசானின் தளத்திலேயே ‘ரூஃபஸ்’ (Rufus) என்றொரு AI அசிஸ்டென்ட் இருக்கிறதே, அது மட்டும் சரியா என்று உரிமைக் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன.

சுருக்கமாகச் சொன்னால்: இது வெறுமனே அமேசானுக்கும் பெர்ப்ளெக்சிட்டிக்கும் நடக்கும் தனிப்பட்ட சண்டையல்ல. இது, வரவிருக்கும் காலத்தில் மின் வணிகம் (E-Commerce) என்ற துறை எவ்வாறு இருக்க வேண்டும், AI ஏஜென்ட்களுக்குச் சுதந்திரம் உண்டா என்று நிர்ணயம் செய்யவிருக்கும் ஒரு வரலாற்று வழக்கு!

பில்லியன் டாலர்கள் புரளும் மின்வணிக உலகம் இதை உற்றுக்கவனித்து வருகிறது.

இப்போதைக்கு நாம் என்ன செய்யலாம்? நமது கோமெட் ஏஜென்ட் முடங்குவதற்குள், அமேசானில் அடுத்த கிரேட் இண்டியன் ஃபெஸ்டிவெல் எப்போது வரப்போகிறது என்று காத்திருந்து, நமது ஷாப்பிங்கை முடித்துக்கொள்ளலாம்!

கே.எஸ்.குப்புசாமி

Related Posts