உலகச் சுற்றுலா தினமின்று

உலகச் சுற்றுலா தினமின்று

சுற்றுலாச் செல்வது  என்பதே ஒரு கலை. கிணற்று தவளையாக ஓரிடத்தில் வாழ்வது எப்போது இன்பம் தராது. பல புதிய இடங்களுக்குச் செல்வதும், பல்வேறு மக்களை காண்பதும் நம் உணர்வை மட்டுமில்லாது உடலுக்கும் புத்துணர்ச்சி தரும்.புதிய புதிய அனுபவங்களை பெற்றிடுவது தான் மனித பிறப்பின் மகத்துவம். அறிவியல் வளர்ச்சி காரணமாக இன்றைய உலகம் மிகவும் சுருங்கி விட்டது. இது பல இடங்களில் பலம் தான் என்றாலும், அனுபவத்தின் மூலம் பாடம் படிக்கும் மனிதனின் கற்றலுக்கு ஒரு தடை கல்லாக அமைந்துவிட்டது. ஆனாலும் உலகை சுற்றிவரவேண்டும் என்ற ஆசை இல்லாத நபரே இருக்க முடியாது. மன அழுத்தம், தீராத சோகம் என எல்லாவற்றுக்குமான மாமருந்து சுற்றுலா செல்வதுதான் என்பதை யாராலும் மறுக்கவே முடியாது.இயற்கையில் படைப்பில் இருக்கும் அழகுகள், உயிரினங்கள் ஆகியவை கண்ணையும் கருத்தையும் கவரும் தன்மையிலானவை. பாய்ந்து செல்லும் ஆறுகள், பரந்து விரிந்த கடல்கள், மலைக்காட்சிகள், மண்ணின் வளங்கள், குகைகள் போன்றவை என்றும் நம்மை ஆச்சர்யப்படுத்துபவை.

கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் ஆண்டு முழுவதும் கடினப்பட்டு உழைத்து சேர்த்து வைத்த பொருள்களைக் கொண்டு புத்தம் புது இடங்களைப் பார்க்க ஆசை கொண்டு அவற்றைச் சுற்றி உலா வருவதாலே சுற்றுலா என்று பெயர் பெறுகின்றது. சுற்றுலா என்றாலே அது அருகில் இருக்கும் இடமானாலும் சரி, அயல்நாட்டில் இருக்கும் இடமானாலும் சரி. எது எல்லாருக்கும் மிகவும் விருப்பமான ஒன்று. நாம் இருக்கும் இடத்தில் இருந்து அகன்று வேறு ஓர் இடத்திற்குத் தனியாகவோ அல்லது போக்குவரத்து வாகன உதவியுடனோ செல்வது அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. உள்ளூர் அதிசயம் முதல் உலக அதிசயம் வரை சிறப்பான இடங்கள் எதுவென்று அறியும் ஆவலும் அவ்விடத்திற்குச் சென்று வரவேண்டும் என்ற எண்ணமும் நம் எல்லார் மனதிலும் இருக்கும். பயணம் செய்வது மனிதனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. நாடோடிகளாக வாழ்ந்த மனிதர்கள் தானே, சமூக கலாச்சார மாற்றத்தின் காரணமாக ஓரிடத்தில் தங்கி வாழ்ந்து வருகின்றனர். ஆக பயணம் எல்லார் வாழ்விலும் முக்கியமான இடத்தினைப் பிடித்த ஒன்று. இத்தகைய பயணமாகிய சுற்றுலாவை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் உலக சுற்றுலா தினம் ஆனது செப்டம்பர் மாதம் 27ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இப்போது சுற்றுலா என்பதுதான் உலகின் மிகப்பெரிய தொழில்துறையாக உள்ளது, உலக பொருளாதாரத்தில் இரண்டாவது பங்களிப்பு சுற்றுலாவினால்தான் கிடைக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். உணவகம், தங்குமிடம், பொழுதுபோக்கு தளங்கள், போக்குவரத்து, வணிக விற்பனையகங்கள் என 5 முக்கிய துறைகளை உள்ளடக்கியது சுற்றுலாத்துறை. உலக அளவில் பல கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்குவதும் சுற்றுலாதான். சுற்றுலாவை மேம்படுத்தி பொருளாதாரத்தை அதிகளவு ஈட்டிய நாடுகளில் ஸ்பெயின் முதலிடமும், பிரான்ஸ், ஜெர்மனி 2, 3வது இடத்தையும் பிடிக்கின்றன. உலக அளவில் சுற்றுலாவில் இந்தியா 40வது இடத்தில்தான் இருக்கிறது, சீனா 13வது இடத்தில் இருக்கிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு மிகப்பெரிய பலமாக இருப்பது சுற்றுலா . வெறும் பாலைவனத்தை மட்டும் வைத்துக் கொண்டு துபாய் சுற்றுலாவில் அதிக வருவாய் ஈட்டி வருகிறது. சின்னஞ்சிறிய நாடான சிங்கப்பூர், எந்தவிதமான பெரிய வளமும் இல்லாமல் சுற்றுலாவில் உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் மிளிர்கிறது.சில நாடுகளில் சுற்றுலா துறையை நம்பி தான் நாட்டின் பொருளாதாரமே இருக்கிறது.

நம் வாழ்வின் கடினமான காலங்களில் சரியான முடிவை எடுக்கவும், சிந்தனையை விரிவுபடுத்தவும் பயணங்கள் துணைபுரிகின்றன. மேலும், உங்களின் படைப்பாற்றல் திறனும் அதிகரிக்கும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்பவர்களால் பயணத்தில் காண்பதை வரையவும், எழுதவும் முடியும் என்பது முற்றிலும் உண்மை.அடிக்கடி பயணம் மேற்கொண்டு மனதை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொண்டால் இதய நோய் வருவதைத் தடுக்கலாம். சுற்றுலா செல்வது வெறும் பொழுதுபோக்குக்காகவும், மகிழ்ச்சியாக இருப்பதற்கும் மட்டுமே என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால், கவலைகளை மறக்கச் செய்து மனதையும், உடல் வலியை மறக்கடித்து உடலையும் புத்துணர்ச்சி அடையச் செய்கிறது இந்தச் சுற்றுலா.

உலகிலேயே சிறந்த 3 சுற்றுலா தளங்கள் உள்ளன. 2024ஆம் ஆண்டில் கோடைக் காலத்தில் சுற்றுலா செல்வதற்கான சிறந்த இடங்கள் குறித்த அறிக்கையை ஃபோர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டது. அதில் கிரீஸ்(Greece), மொரிசியஸ்(Mauritius) மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் உலகின் சிறந்த சுற்றுலா நாடுகளாக குறிப்பிடப் பட்டுள்ளன. தொடர்ந்து, இலங்கையில் (srilanka) இயற்கை அழகை கண்டுகளிக்கும் விதத்தில் 22 தேசிய பூங்காக்கள் உள்ளன. கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அண்மைய நிலைமைகளால் மீள எழுந்திருக்கும் இலங்கை 2024ஆம் ஆண்டில் சுற்றுலாவுக்கான சிறந்த நாடுகளுள் முன்னணியில் உள்ளது.

டிராவல் + லெஷர் இதழில் தரவரிசைப்படுத்தப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான சுற்றுலா மற்றும் ஓய்வு நேர கணக்கெடுப்பின் முதல் 25 நகரங்களின் பட்டியலில், உலகின் பல்வேறு நகரங்கள் அவற்றின் அழகு, கலாச்சாரம், கேளிக்கை, இடங்கள், விடுதிகள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த சூழ்நிலைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் ஜெய்ப்பூர் 5வது இடத்தைப் பிடித்துள்ளது. ஜெய்ப்பூரைத் தவிர, இந்தியாவின் மேலும் 2 நகரங்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

தரவரிசையில் நான்கு நகரங்களுடன் மெக்சிகோ முன்னணியில் உள்ளது. இதில் சான் மிகுவல் டி அலெண்டே இரண்டாவது ஆண்டாக தனது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. மெக்சிகன் நகரம் அதன் காலனித்துவமான வசீகரம், மலிவு விலை, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் துடிப்பான கலைக் காட்சி ஆகியவற்றிற்காகப் பாராட்டப்படுகிறது. தாய்லாந்து முதல் 10 இடங்களில் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளது. அதில், சியாங் மாய் 2வது இடத்திலும், தலைநகர் பாங்காக் 4வது இடத்திலும், அதைத் தொடர்ந்து ஜப்பானின் டோக்கியோ 3வது இடத்திலும் மற்றும் கியோட்டோ 8வது இடத்திலும் உள்ளன.

மேலும், தொல்பொருள் அற்புதங்களுக்குப் பெயர் பெற்ற, பண்டைய வரலாறுகளைக் கொண்ட நகரங்களான குஸ்கோவின் பெரு நகரம் 10வது இடத்திலும், ரோமின் இத்தாலி நகரம் 18வது இடத்திலும், மெக்சிகோவின் மெரிடா நகரம் 25வது இடத்திலும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதுதவிர ஜெய்ப்பூர், மும்பை மற்றும் ஆக்ரா ஆகிய மூன்று இந்திய நகரங்கள் உலகளவில் முதல் 25 இடங்களில் இடம்பெற்றுள்ளன.

ஆண்டு முழுவதும் உழைக்கிறோம், உழைத்ததின் பலனைக் குடும்பத்தோடு கொண்டாடுவோம். சுற்றுலா சென்று ஆனந்தம் கொள்வோம். இல்லத்தில் இருப்பவர்களின் முகத்தில் இன்பம், குழந்தைகள் முகத்தில் குதூகலம், பெரியோர்கள் முகத்தில் பரவசம். ஆம் சுற்றுலா அனைவருக்கும் ஆனந்தம் தரும். பார்த்து வந்த இடங்களை பட்டியல் போட்டு அசை போட்டுக்கொண்டே அடுத்தடுத்த தினங்கலெல்லாம் அழகாய் செல்லும் மகிழ்ச்சியைக் காண்போம்.

நிலவளம் ரெங்கராஜன்