ஹேப்பி இன்டர்நாட் தினம்! இணையத்தால் இணைந்த உலக மக்கள்!
உலகளாவிய வலையின் (World Wide Web) கண்டுபிடிப்பைக் குறிக்கும் வகையில் சர்வதேச இன்டர்நாட் தினம் உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது. ‘இன்டர்நாட்’ என்பது இணையத்தைப் பயன்படுத்தும் மற்றும் அதன் வரலாறு குறித்து முழுமையான அறிவுள்ள ஒருவரைக் குறிக்கும் சொல். ஆகஸ்ட் 23, 1991 அன்றுதான் உலகளாவிய வலை, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதன்முறையாகத் திறக்கப்பட்டது. அதன் கண்டுபிடிப்பாளரான டிம் பெர்னர்ஸ்-லீ, சி.இ.ஆர்.என் (CERN) நிறுவனத்தில் இணையத்தை அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கும்படி அறிவித்தார். இணையத்தைப் பயன்படுத்த எந்தக் கட்டணமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

உலகளாவிய வலையின் வரலாறு
1989-ல், இங்கிலாந்தைச் சேர்ந்த கணினி விஞ்ஞானி டிம் பெர்னர்ஸ்-லீ, சி.இ.ஆர்.என்-ல் பணிபுரிந்தபோது உலகளாவிய வலையை உருவாக்கினார்.
மார்ச் 12, 1989 அன்று அவர் ஒரு தகவல் மேலாண்மை அமைப்பை முன்மொழிந்தார். அதே ஆண்டு நவம்பர் மாதத்தில், முதல் வெற்றிகரமான உலகளாவிய வலைத் தகவல்தொடர்பை இணையம் வழியாக செயல்படுத்தினார். அவரே முதல் வலை உலாவியையும் (Web browser) மற்றும் வலைச் சேவையகத்தையும் (Web server) உருவாக்கிச் செயல்படுத்தினார். இது உலகளாவிய வலை விரைவாக வளர்ச்சியடைய உதவியது. 1990-ல், ராபர்ட் கெலியோவுடன் (Robert Cailliau) இணைந்து, ‘வேர்ல்டு வைடு வெப்’ (WorldWideWeb) என்ற ‘ஹைப்பர்டெக்ஸ்ட் திட்டத்தை’ (hypertext project) உருவாக்கினார்.
1991-ல், டிம் உலகளாவிய வலை குறித்த ஒரு சுருக்கமான அறிக்கையை வெளியிட்டார். அதன்பிறகுதான் இணையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
2004-ல், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், கணினித் துறையில் அவரது முன்னோடிப் பணிக்காக அவருக்கு “சர்” பட்டம் வழங்கி கௌரவித்தார்.
டிம் பெர்னர்ஸ்-லீ தற்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பேராசிரியராகவும், மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (MIT) ஒரு பேராசிரியராகவும் உள்ளார்.
இன்று நாம் உள்ளங்கையில் வைத்திருக்கும் மொபைல் போன் வழியாகவோ அல்லது கணினி வழியாகவோ இந்தச் செய்தியைப் படிப்பதற்குப் பாலமாக இருப்பது இண்டர்நெட். ஆகஸ்ட் 23, 1991 அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்து இன்றுடன் 34 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.2024 ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, உலகெங்கிலும் சுமார் 540 கோடிக்கும் அதிகமான மக்கள் இண்டர்நெட்டைப் பயன்படுத்துகின்றனர்.
ஆண்டிப்பட்டியில் இருந்துகொண்டு அமெரிக்காவில் இருக்கும் ஒருவருடன் ஸ்கைப்பில் நொடிப்பொழுதில் முகம் பார்த்துப் பேசும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. இந்த அபார வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட நாள் ஆகஸ்ட் 23, 1991.
உலகளாவிய வலையின் (WWW) பிறப்பு
இங்கிலாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கணினி விஞ்ஞானி டிம் பெர்னர்ஸ்-லீ, World Wide Web (WWW) என்ற புரோட்டோகாலை உருவாக்கினார். இண்டர்நெட் பயன்பாட்டிற்கு ஒரு புதிய பரிமாணத்தை அளித்த இந்த புரோட்டோகால், 1991-ல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. அந்தப் புரோட்டோகாலுக்குத்தான் இன்று பிறந்தநாள்.
இண்டர்நெட்டின் சுருக்கமான வரலாறு
தொடக்கப்புள்ளி: 1960கள்
1960களில் கணினிகளின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது. ஆனால், ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்குத் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள அப்போது வசதி இல்லை. அமெரிக்காவில் இருந்த டார்ட்மவுத் மற்றும் பெர்க்லீ பல்கலைக்கழகங்கள், தாங்கள் பயன்படுத்திய ஐ.பி.எம். கணினிகளில் இந்தச் சிக்கலை எதிர்கொண்டன. அவர்கள் இந்தச் சிக்கலை ஐ.பி.எம். நிறுவனத்திடம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, ஒரு கணினியிலிருந்து மற்றொன்றுக்குத் தொடர்பை ஏற்படுத்தும் ‘கலெக்டிக் நெட்வொர்க்’ என்ற இணைப்பை ஜே.சி.ஆர். லிக்லைடர் என்பவர் உருவாக்கினார். இது பல்கலைக்கழகங்களில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டது.
பின்னர், இந்தத் தொழில்நுட்பம் அமெரிக்க ராணுவத்தில் ரகசியத் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள ‘ஆர்பாநெட்’ (ARPANET) என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து, தகவல்கள் அனுப்புவதில் பல்வேறு மேம்பாடுகள் செய்யப்பட்டன.
எலியின் வருகை
1968-ல், சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற கண்காட்சியில் டக்ளஸ் ஏங்கல்பெர்ட் என்பவரால் கணினி மவுஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. இது கணினியைப் பயன்படுத்துவதை எளிதாக்கியது.
மாபெரும் வளர்ச்சி
1991-ல், WWW எனப்படும் புரோட்டோகால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த பிறகு, இண்டர்நெட் பயன்பாடு அதிவேக வளர்ச்சி பெற்றது. இன்று கணினியில் மட்டுமல்லாமல், கையளவு மொபைல் போனிலும் இண்டர்நெட்டைப் பயன்படுத்தும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து நிற்கிறது.
இந்த 34 ஆண்டு காலத்தில் இண்டர்நெட், தகவல்களைப் பரிமாறும் ஒரு கருவியாக மட்டுமல்லாமல், நமது தினசரி வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது.


