தேசிய கைத்தறி நாள்!
இந்தியா முழுவதும் உள்ள கைத்தறி நெசவாளர்களின் வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் கைவினைத்திறனைக் கொண்டாடும் வகையில், ஆகஸ்ட் 7 ஆம் தேதி இந்தியாவில் தேசிய கைத்தறி தினம் National Handloom Day அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள், உள்நாட்டு கைத்தறித் தொழிலை மேம்படுத்துவதையும், நெசவாளர்களுக்கு ஆதரவு அளிப்பதையும், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இப்போது சகல மாடல்களிலும் ஃபேன்சி ஆடைகள் வந்தாலும், கைத்தறியின் க்ளாஸிக்' தோற்றத்துக்கு இணை வேறெதுவும் இல்லை. இன்றும்கூட, தான் உடுத்திய திருமணப் புடவையை மகள் அவளின் திருமணத்துக்கு உடுத்தும் உணர்ச்சிமிக்க தருணம் அன்றாடம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. தலைமுறை தலைமுறையாய் கடந்து வரும் பாரம்பர்ய பொக்கிஷங்களில் ஒன்று கைத்தறி’யும்தான்.

கைத்தறி உருவான கதை
கைத்தறி நெசவு என்பது மிகத் தொன்மையான ஒரு கலை மற்றும் தொழில். மனிதன் தன் உடலை மறைக்கத் தொடங்கிய காலத்திலேயே, இலை தழைகளைப் பயன்படுத்தி ஆடைகளை உருவாக்கினான். பின்னர், பருத்தி போன்ற இயற்கை இழைப் பொருட்களைக் கொண்டு துணிகளை உருவாக்கும் முறையை கண்டறிந்தான். இந்த முறையில், நூல் கொண்டு துணிகளை உருவாக்கும் கருவியே “தறி” எனப்படுகிறது.
கைத்தறி என்பது மனிதர்களால் இயக்கப்படும் ஒரு தறி ஆகும். இது, விசைத்தறியிலிருந்து வேறுபட்டது. இப்படி இந்திய நாட்டில் வாழும் பல இடங்களில் தனித்துவமான கைத்தறி நெசவும், நெசவாளர்களும் இருக்கின்றனர். இந்த தனித்துவமான கலை மற்றும் கலாச்சாரத்தைப் போற்றும் விதமாக, இந்தியா முழுவதும் தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது.
வரலாற்றுப் பின்னணி:
1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி கொல்கத்தாவில் சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம், பிரிட்டிஷ் பொருட்களையும் மேற்கத்திய கலாச்சாரத்தையும் எதிர்த்து, இந்தியத் தயாரிப்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் கொண்டாடும் விதமாக, 2015 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் ஆகஸ்ட் 7 ஆம் தேதியை தேசிய கைத்தறி தினமாக அறிவித்தது.
கைத்தறியின் முக்கியத்துவம்:
- பொருளாதாரம்: விவசாயத்திற்குப் பிறகு, கைத்தறித் தொழில் இந்தியாவின் மிக முக்கியமான தொழில்களில் ஒன்றாகும். ஏறத்தாழ 50 லட்சம் மக்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். உலகளவில் 95% கைத்தறி ஆடைகள் இந்தியாவில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன.
- பாரம்பரியம்: கைத்தறி ஆடைகள் தலைமுறை தலைமுறையாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பாரம்பரிய பொக்கிஷங்கள். கைத்தறி நெசவு ஒரு பழங்கால கலை மற்றும் தொழில்.
- சுகாதாரம்: கைத்தறி ஆடைகள் பருத்தி போன்ற இயற்கை இழைகளால் நெய்யப்படுவதால், உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. இவை கோடைக்கால வெப்பத்திலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகின்றன.
- பிராந்திய முக்கியத்துவம்: கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் போன்ற கொங்கு மண்டலங்கள் கைத்தறி நெசவுத் தொழிலுக்குப் பெயர் பெற்றவை. இந்த பகுதிகளில் இருந்து தயாரிக்கப்படும் ஆடைகள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

சவால்கள் மற்றும் தீர்வுகள்: கைத்தறித் தொழில் சில சவால்களை எதிர்கொள்கிறது:
- விசைத்தறிகளின் ஆதிக்கம்: விசைத்தறிகளின் (power loom) உற்பத்தி அதிகரித்ததால், கைத்தறி ஆடைகளின் விலை அதிகமாகி, அவற்றின் விற்பனை குறைந்துள்ளது.
- போலி தயாரிப்புகள்: தரமற்ற மற்றும் போலி கைத்தறி ஆடைகள் சந்தையில் விற்கப்படுகின்றன, இதனால் மக்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.
இந்தச் சவால்களை எதிர்கொள்ள சில நடவடிக்கைகள் அவசியம்:
- விழிப்புணர்வு: மக்கள் கைத்தறி ஆடைகளின் மதிப்பையும் தரத்தையும் புரிந்துகொள்ள வேண்டும்.
- அரசு நடவடிக்கைகள்:
- கைத்தறி மற்றும் விசைத்தறி ரகங்களை அடையாளம் காணும் சட்டங்களை மேம்படுத்த வேண்டும்.
- போலி தயாரிப்புகளை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பாரம்பரிய கைத்தறி நெசவுத் தொழிலை இளைஞர்களிடையே அறிமுகப்படுத்த பயிற்சிப் பட்டறைகளை நடத்த வேண்டும்.
மொத்தத்தில் மகாத்மா காந்தி போன்ற தலைவர்களால் ஆதரிக்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் கொள்கை, உள்நாட்டு கைத்தறித் தொழிலை ஆதரிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்பதாகும். தேசிய கைத்தறி தினத்தின் முக்கிய நோக்கம், இந்த பாரம்பரியத் தொழிலைப் பாதுகாத்து, அதனைச் சார்ந்திருக்கும் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதாகும்.
நிலவளம் ரெங்கராஜன்


