நெல்சன் மண்டேலா பன்னாட்டு நாள்!

நெல்சன் மண்டேலா பன்னாட்டு நாள்!

வ்வோர் ஆண்டும் ஜூலை 18 ஆம் நாள், உலகெங்கிலும் நெல்சன் மண்டேலா பன்னாட்டு நாள் ( Nelson Mandela International Day)கொண்டாடப்படுகிறது.ஆம்.. மோதல்களைத் தீர்ப்பதற்கும், இன உறவுகள், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் போராடி, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் நெல்சன் மண்டேலா பிறந்த நாளை, ‘பன்னாட்டு நெல்சன் மண்டேலா நாள்’ எனக் கொண்டாட, 192 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் 2009 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் நாளன்று நிறைவேற்றப் பட்டது.  அந்தத் தீர்மானத்தில் இனங்களுக்கு இடையே நல்லுறவு ஏற்படவும், மனித உரிமைகளை மேம்படுத்தவும், ஆண்-பெண் சமம் என்ற நிலை ஏற்படவும் மண்டேலா பாடுபட்டார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது

.மண்டேலாவின் தன்னலமற்ற போராட்டம்

நெல்சன் மண்டேலா, நிறவெறிக்கு எதிரான போராட்டத்தின் ஒரு குறியீடாகத் திகழ்ந்தவர். தென்னாப்பிரிக்காவில் நிலவிய கொடூரமான நிறவெறி ஆட்சியை ஒழிப்பதற்காக அவர் மேற்கொண்ட தன்னலமற்ற தியாகங்களும், அவரது அசைக்க முடியாத உறுதியும் உலக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. அதாவது இவர் தலைமையில், வன்முறையற்ற போராட்டம் வளர்ச்சியடைவதைக் கண்ட வெள்ளையர் அரசு 1956 ஆம் ஆண்டில், அரசுக்கு எதிராகப் புரட்சி செய்தார் என கைது செய்தது. ஆனால் நான்காண்டு விசாரணைக்குப் பிறகு, அந்தக் குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து, மேலும் பல போராட்டங்களை முன்னெடுத்துச் செய்து வந்தார். 

அதனால் எரிச்சலுற்ற வெள்ளைக்கார அரசு 1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் நாளில்,  இவர் தங்கியிருந்த பகுதிக்குள் மாறு வேடமணிந்து புகுந்த காவல் துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டுக் கைதாகினார். ஏறத்தாழ 27 ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். உலக வரலாற்றிலேயே மண்டேலாவைப் போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் எவரும் கிடையாது. பல ஆண்டுகள் அவரைத் தனிமைச் சிறையில் அடைத்துக் கொடுமை செய்த தென்னாப்பிரிக்க அரசாங்கம், அவரது மனைவியைச் சந்திப்பதற்குக் கூட அனுமதி மறுத்தது. 1988 ஆம் ஆண்டு கடுமையான காச நோய் ஏற்பட்டு, மரணத்தின் எல்லைக்குச் சென்றார். அதனால் வீட்டுச்சிறைக்கு மாற்றப்பட்டார்.

மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்தது. ஆனால் தென்னாப்பிரிக்க நிறவெறி ஆட்சியின் தலைவராக இருந்த போந்தா, மண்டேலாவை விடுதலை செய்ய மறுத்து வந்தார். மண்டேலாவை விடுதலை செய்யும்படி வற்புறுத்தி, மண்டேலாவின் மனைவி தலைமையில் ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் தொடர்ந்து நடந்து வந்தன. ‘மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்’ என்று தென்னாப்பிரிக்கா அரசு ஆசை காட்டியது. ஆனால் மண்டேலா மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.

தென்னாப்பிரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அதிபராக டெக்ளார்க் பதவிக்கு வந்தார். அவர் மண்டேலாவை விடுதலை செய்ய முன் வந்தார். அதனால் மண்டேலாவின் விடுதலை நாளை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தது. பிரடெரிக் வில்லியம் டி கிளர்க், ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரஸ் மீதான தடையை நீக்கி, மண்டேலா பெப்ரவரி 11, 1990 அன்று விடுதலைச் செய்யப்படுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மண்டேலா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். விடுதலை பெற்ற போது, அவருக்கு வயது 71. மண்டேலா விடுதலை செய்யப்பட்டதை உலகத் தலைவர்கள் பலரும் வரவேற்றனர். அதன் பிறகு, அரசியல் களத்தில் இறங்கி, 1994 ஆம் ஆண்டு மே 10 ஆம் நாளில் தென்னாப்பிரிக்காவின் குடியரசுத் தலைவரானார். தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் எனும் பெருமையையும் பெற்றார்.

உலக நாடுகள் பலவும் இவரது போராட்டத்தில் அடைந்த வெற்றியைப் பாராட்டிச் சிறப்பித்தன. இந்திய அரசு இவருக்கு, நேரு சமாதான விருது மற்றும் பாரத ரத்னா விருது என்று உயர்ந்த விருதுகளை வழங்கிச் சிறப்பித்தது. 1993 ஆம் ஆண்டில் இவருக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது.  இன்றளவும் அவரது பொறுமையும், மன்னிக்கும் குணமும், அமைதியான வழியில் மாற்றத்தை அடைய வேண்டும் என்ற அவரது பிடிவாதமும் உலகிற்கே ஒரு முன்மாதிரியாக அமைந்தன.

“67 நிமிடங்கள்” சேவை

நெல்சன் மண்டேலா பன்னாட்டு நாளின் முக்கிய நோக்கம், மண்டேலா தனது வாழ்நாளில் சமூக சேவைக்காகச் செலவிட்ட 67 ஆண்டுகளைப் போற்றும் விதமாக, ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 67 நிமிடங்கள் சமூக நலனுக்காகத் தங்கள் நேரத்தைச் செலவிட வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகும். இந்த 67 நிமிடங்கள், ஏழைகளுக்கு உதவுவது, சமூக மேம்பாட்டுப் பணிகளில் பங்கேற்பது, சுற்றுப்புறத்தைச் சுத்தம் செய்வது போன்ற எந்த ஒரு சமூக நலச் செயலிலும் ஈடுபடலாம். இது வெறும் ஒரு சடங்கு அல்ல; மண்டேலாவின் மதிப்புகள் மற்றும் கொள்கைகளை நமது அன்றாட வாழ்வில் பிரதிபலிப்பதற்கான ஒரு வழி.

மண்டேலாவின் கோட்பாடுகள் இன்றும் ஏன் பொருத்தமானவை?

அந்த மாமனிதர் பற்றி நினைக்கும்போது, அண்ணல் காந்தியும் நினைவுக்கு வருகிறார். இவர்கள் இருவரிடமும் இருந்த பல அரிய குணங்களுள் முன்னணியில் இருப்பது, உறுதியான நம்பிக்கையும் விடாமுயற்சியும். இனவெறிக்கு எதிராகப் போராடிய இவர்கள் இருவரும் தோல்விகளால் சோர்ந்து விடவில்லை, இவர்களை சிறைக்கம்பிகளால் முடக்க முடியவில்லை.

“விழாமலே வாழ்ந்தோம் என்பதல்ல பெருமை, விழும்போதெல்லாம் எழுந்தோம் என்பது தான் வாழ்வின் பெருமை” என்று கூறிய மண்டேலாதான், “எனது வெற்றிகளின் மூலம் என்னை மதிப்பிடாதீர்கள், எத்தனை முறை நான் கீழே விழுந்து மீண்டும் எழுந்தேன் என்பதன் மூலம் மதிப்பிடுங்கள்” என்று மற்றவர்களுக்கு ஊக்கமூட்டினார்.

மண்டேலாவின் கோட்பாடுகளான சமத்துவம், நீதி, மனித கண்ணியம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவை இன்றும் உலக அளவில் பொருத்தமானவையாகவே இருக்கின்றன. அவரது போராட்டம் நிறவெறிக்கு எதிராக இருந்தாலும், அவரது செய்திகள் இன, மத, பாலின வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவை. இன்றைய உலகில் நாம் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களான வறுமை, ஏற்றத்தாழ்வு, பாகுபாடு மற்றும் மோதல்கள் போன்றவற்றுக்கு மண்டேலாவின் சிந்தனைகள் வழிகாட்டிகளாக அமைகின்றன.

ஒரு பன்னாட்டு நாள் மட்டுமல்ல…

நெல்சன் மண்டேலா பன்னாட்டு நாள் என்பது வெறும் ஒரு நினைவு நாள் மட்டுமல்ல. இது நம் ஒவ்வொருவரையும் சுயபரிசோதனை செய்து கொள்ளவும், நாம் வாழும் சமூகத்தில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வர எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதைச் சிந்திக்கவும் தூண்டும் ஒரு அழைப்பு. மண்டேலாவின் வாழ்க்கை, “ஒருவர் ஏற்படுத்தும் மாற்றம் உலகையே மாற்றும்” என்பதை உணர்த்துகிறது.

நெல்சன் மண்டேலாவின் பொன்மொழிகள்

  1. “கல்விதான் நீங்கள் உலகை மாற்றப் பயன்படுத்தக்கூடிய வலிமையான ஆயுதம்.”
  2. “சுதந்திரமாக இருப்பது என்பது ஒருவரின் விலங்குகளைத் தூக்கி எறிவது மட்டுமல்ல, மற்றவர்களின் சுதந்திரத்தை மதிக்கும் மற்றும் மேம்படுத்தும் வகையில் வாழ்வதுமாகும்.”
  3. “நான் கற்றுக்கொண்டது என்னவென்றால், பயம் இல்லாதது துணிச்சல் அல்ல, பயத்தின் மீது வெற்றி பெறுவதே துணிச்சல். ஒரு தைரியமான மனிதன் பயம் இல்லாதவன் அல்ல, பயத்தைப் போக்கி வெற்றி பெற்றவனே.”
  4. “எளிதாக விழுந்து விடாதே, மிக உயரமாக ஏறினாலொழிய உன்னால் உயரத்தை உணர முடியாது.”
  5. “எல்லாமே சாத்தியமாகும் வரை எப்போதும் சாத்தியமற்றதாகவே தெரிகிறது.”
  6. “மற்றவர்களை நாம் எப்படி நடத்துகிறோம் என்பதுதான் நம் வாழ்வின் மிக முக்கியமான பகுதியாகும்.”
  7. “ஒரு பெரிய மலையேறிய பிறகு, இன்னும் பல மலைகள் ஏற வேண்டியிருப்பதை ஒருவர் கண்டறிகிறார்.”
  8. “உங்களுக்கு இருக்கும் உணர்வுகளைக் கொண்டு வாழ்பவராக இருக்காதீர்கள். உங்களுக்கு இருக்கும் உந்துதல்களைக் கொண்டு வாழ்பவராக இருங்கள்.”
  9. “ஒரு நல்ல தலைவரால் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்பி, தன் மக்களுக்காக சண்டையிட முடியும்.”
  10. “உலகில் நாம் காண விரும்பும் மாற்றமாக நாம் மாற வேண்டும்.”

இந்த நாளில், மண்டேலாவின் மரபை நாம் போற்றுவோம்; அவர் கற்றுக்கொடுத்த மதிப்புகளை நமது வாழ்வில் கடைப்பிடித்து, சிறந்த, சமத்துவமான உலகத்தை உருவாக்க உறுதிபூணுவோம்.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்