பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் அறிமுகம்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!
‘பள்ளிக்குழந்தைகளில் 68 சதவீதம் பேர் கொண்டுபோன குடுவைத்தண்ணீரை அப்படியே முழுவதுமாக வீட்டுக்குக் கொண்டுவருகின்றனர்; பள்ளிகளில் அவர்கள் தண்ணீர் குடிப்பதே இல்லை’ என்பது கண்டறியப்பட்டது.ஐந்து முதல் எட்டு வயதுவரையிலான குழந்தைகள் அன்றாடம் ஐந்து டம்ளர் தண்ணீராவது குடிக்கவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளபோதும், யதார்த்த நிலை கொஞ்சம் மாறுபட்டதாகவே இருக்கிறது. பள்ளி நேரத்தில் குழந்தைகளுக்கு நீர்த்தன்மைக் குறைவதால், அவர்களுக்கு அடிக்கடி தலைவலி வருவது, தலைசுற்றல், சோர்ந்துவிழுவது ஆகியற்றுடன் உடல்திறன் குறைபாடும் ஏற்படுகிறது.இவை இப்போதைக்கு இலேசான நீரிழப்பின் சாதாரண அறிகுறிகளாக இருக்கின்றன. ஆனால், அடுத்தகட்டமாக சிறுநீர்த்தாரைத் தொற்று, சிறுநீரகக் கற்கள் போன்ற நீடித்த நலப்பிரச்னைகளாக மாறக்கூடிய சாத்தியம் உள்ளது.உடலின் வெப்பநிலையை தண்ணீர் ஒழுங்குபடுத்துகிறது; செல் கட்டமைப்பைத் தக்கவைக்கிறது; ஊட்டச்சத்துகளை உடலில் சேர வைக்கிறது என்பதால், டெல்லி, பெங்களூரு, கேரளா மற்றும் புதுச்சேரி அரசுவைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் அடுத்த மாதம் முதல் வாட்டர் பெல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், இயக்குநர் கண்ணப்பன் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியிருக்கிறார்.
அதில் வகுப்புச் சூழல் பாதிக்கப்படாத வகையில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய ஜூலை மாதம் முதல் நாள் ஒன்றுக்கு காலை 11 மணிக்கும், பகல் 1 மணிக்கும், பிற்பகல் 3 மணிக்கும் 3 முறை வாட்டர் பெல் அடிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தண்ணீர் குடிக்க 2 முதல் 3 நிமிடங்கள் ஒதுக்கப்பட உள்ளது.
வெயிலின் தாக்கத்தால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுகிறது என்றும், மாணவர்களின் உடலில் ஏற்படும் நீர்ச்சத்துக் குறைபாடு கற்றல் திறனை பாதிக்கும் என்பதால் இந்த உத்தவு பிறப்பிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
மேலும் மாணவர்கள் வீட்டில் இருந்தே தண்ணீர் பாட்டில்கள் கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் உரிய நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் ’வாட்டர் பெல்’ திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஒசூரில் நடைபெற்ற பள்ளி விழாவில் நேற்று அறிவித்திருந்தார்.இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.


