உலக குருதிக் கொடையாளர் நாள்: “கொடுங்கள், பகிர்ந்திடுங்கள், உயிர் காத்திடுங்கள்”!

உலக குருதிக் கொடையாளர் நாள்: “கொடுங்கள், பகிர்ந்திடுங்கள், உயிர் காத்திடுங்கள்”!

மது உடல் நோய்களின்றி, ஆரோக்கியமாக இருக்க ரத்தம் என்பது அவசியமானது. ஒவ்வொரு மனிதனுக்கும் 6 லிட்டர் ரத்தம் தேவை. எதிர்பாராத விதமாக நிகழும் விபத்துகளாலோ, அறுவை சிகிச்சையின் போதோ, பிரசவத்தின் போதோ இரத்த இழப்புகள் ஏற்படும் போது உடலில் உள்ள இரத்தம் குறைகிறது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்படலாம். இன்றுவரை அறிவியல் வளர்ச்சியால் பல்வேறு சாதனைகளைப் படைத்த மனிதனால் இன்று வரை செயற்கையாக குருதியை உருவாக்க முடியவில்லை. அதனால்தான் இதை, ஒருவர் உடலில் இருந்து எடுத்து மற்றவர்களுக்கு பயன்படுத்த வேண்டியுள்ளது. இதையொட்டி இரத்த தானத்தின் தேவையை வலியுறுத்தவும், மற்றவர் உயிர் காப்பதற்காக தானாக முன் வந்து இரத்த தானம் செய்யும் நல்லோருக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும்  ஜூன் 14 ஆம் தேதி உலக குருதிக் கொடையாளர் நாள் (World Blood Donor Day) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ரத்தம் தேவைப்படும் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றும் தன்னலமற்ற குருதிக் கொடையாளர்களின் மகத்தான பங்களிப்பைப் போற்றுவதற்கும், பாதுகாப்பான ரத்தத்தின் தேவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள் “கொடுங்கள், பகிர்ந்திடுங்கள், உயிர் காத்திடுங்கள்” (Give blood, share life, give often) என்பதாகும்.

ஜூன் 14 ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?

மனித ரத்த வகைகளைக் கண்டறிந்த நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் (Karl Landsteiner) பிறந்த நாள் ஜூன் 14 ஆகும். அவரது கண்டுபிடிப்புகள், பாதுகாப்பான ரத்தப் பரிமாற்றத்திற்கு அடித்தளமிட்டன. இந்த கண்டுபிடிப்புக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், கொடையாளர்களின் பங்களிப்பைப் போற்றும் விதமாகவும், உலக சுகாதார அமைப்பு (WHO), சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பு (IFRC), சர்வதேச ரத்தக் கொடையாளர் அமைப்புகளின் கூட்டமைப்பு (FIODS), மற்றும் சர்வதேச ரத்தப் பரிமாற்ற சங்கம் (ISBT) ஆகிய அமைப்புகள் இணைந்து 2004 ஆம் ஆண்டு முதல் இந்த நாளைக் கொண்டாடி வருகின்றன.

ரத்த தானத்தின் முக்கியத்துவம்:

ரத்தம் என்பது உயிர்காக்கும் திரவம். செயற்கையாக ரத்தத்தை உருவாக்க முடியாது. மனிதர்கள் தானமாக வழங்கும் ரத்தம் மட்டுமே, உயிரைக் காப்பாற்ற உதவும் ஒரே வழியாகும்.

  • அவசரத் தேவைகள்: விபத்துகள், அறுவை சிகிச்சைகள், பிரசவக் கால சிக்கல்கள் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு அவசரமாக ரத்தம் தேவைப்படுகிறது.
  • நீண்டகால நோய்கள்: இரத்த சோகை, தலசீமியா, ஹீமோபிலியா, புற்றுநோய் போன்ற நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தொடர்ந்து ரத்தம் தேவைப்படுகிறது.
  • பல்லாயிரம் உயிர்கள்: ஒவ்வொரு ரத்த தானமும் மூன்று உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று கூறப்படுகிறது. இது ஒரு அரிய, விலைமதிப்பற்ற கொடையாகும்.

“கொடுங்கள், பகிர்ந்திடுங்கள், உயிர் காத்திடுங்கள்” – இந்த ஆண்டு கருப்பொருளின் பொருள்:

இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ரத்த தானத்தின் தொடர்ச்சியான தன்மையையும், அதன் சமூகப் பங்களிப்பையும் வலியுறுத்துகிறது:

  • கொடுங்கள் (Give blood): இது ஒரு தன்னார்வ, தன்னலமற்ற செயல். ஒரு ரத்த தானம் செய்வதன் மூலம், ஒரு தனிநபர் நேரடியாக மற்றொருவரின் உயிரைக் காப்பாற்ற பங்களிக்கிறார்.
  • பகிர்ந்திடுங்கள் (share life): ரத்தம் என்பது வாழ்க்கையைப் பகிர்வதைக் குறிக்கிறது. உங்கள் ரத்தம் இன்னொருவருக்கு புதிய வாழ்க்கையை அளிக்கிறது. இது மனிதநேயத்தின் உச்சக்கட்ட வெளிப்பாடு.
  • உயிர் காத்திடுங்கள் (give often): ரத்த தானம் என்பது ஒரு முறை மட்டும் செய்வதல்ல. ஒருவர் தொடர்ந்து, பாதுகாப்பான இடைவெளியில் ரத்தம் வழங்குவதன் மூலம், ரத்த வங்கிகளில் ரத்தப் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்கலாம். வழக்கமான கொடையாளர்களின் அவசியம் குறித்து இது வலியுறுத்துகிறது.

யார் ரத்தம் கொடுக்கலாம்?

  • 18 முதல் 65 வயதுக்குட்பட்டவர்கள்.
  • குறைந்தது 50 கிலோ எடை கொண்டவர்கள்.
  • நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள்.
  • எந்தவொரு தொற்றுநோய்களாலும் பாதிக்கப்படாதவர்கள்.

ரத்த தானம் செய்வதற்கு முன், ஒரு மருத்துவர் கொடையாளரின் உடல்நிலையை பரிசோதித்து, தகுதி இருப்பதை உறுதிசெய்வார். ரத்த தானம் என்பது ஒரு பாதுகாப்பான செயல்முறையாகும்.

சமூகத்தின் பங்களிப்பு:

ரத்த வங்கிகளில் போதுமான ரத்த இருப்பு இருப்பதை உறுதி செய்வது ஒரு சமூகப் பொறுப்பாகும். அரசாங்கங்கள், சுகாதார அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் கூட்டு முயற்சியே ரத்த தான இயக்கங்களை வலுப்படுத்தும். ரத்த தானம் பற்றிய தவறான கருத்துக்களை நீக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.

மொத்தத்தில் உலக குருதிக் கொடையாளர் நாள் என்பது ரத்தம் கொடுத்தவர்களைப் போற்றுவதற்கும், ரத்தம் கொடுக்காதவர்களை ஊக்குவிப்பதற்கும் ஒரு வாய்ப்பு. உங்கள் ஒரு சில நிமிடங்கள், இன்னொருவரின் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். ஒவ்வொரு ரத்தத் துளியும் ஒரு புதிய நம்பிக்கையை, ஒரு புதிய வாழ்வை, ஒரு புதிய தொடக்கத்தை அளிக்க வல்லது. “கொடுங்கள், பகிர்ந்திடுங்கள், உயிர் காத்திடுங்கள்” என்ற கருப்பொருளை மனதில் கொண்டு, ரத்த தானம் செய்து, உயிர்களைக் காக்கும் இந்த மகத்தான மனிதநேயப் பணியில் பங்கெடுப்போம்.

நிலவளம் ரெங்கராஜன்

Related Posts