டாஸ்மாக் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை!

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு  சுப்ரீம் கோர்ட் தடை!

டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.1000 கோடி ஊழல் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை நடத்தி வந்த விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் . அத்துடன் அமலாக்கத்துறை “அனைத்து வரம்புகளையும் மீறிவிட்டது, கூட்டாட்சி நடைமுறையை மீறியிருக்கிறது” என்றும் சுப்ரீம் கோர்ட் கடுமையான கருத்து தெரிவித்துள்ளது.

வழக்கின் பின்னணி

டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை கடந்த மார்ச் மாதம் சென்னை, விழுப்புரம் உட்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தியது. இந்தச் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், டாஸ்மாக் பொது மேலாளர் சங்கீதா மற்றும் துணைப் பொது மேலாளர் ஜோதி சங்கர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் பலருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.இந்நிலையில் மே 16 அன்று டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன், திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் ரத்தீஷ் உள்ளிட்ட 12 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தினர்.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

இதை அடுத்து அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிராகத் தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. ஆனால், ஐகோர்ட் அமலாக்கத்துறைக்கு விசாரணை நடத்த அனுமதி அளித்தது. இதை எதிர்த்துத் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கவாய் மற்றும் நீதிபதி ஏ.ஜி. மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். அப்போது “அமலாக்கத்துறை அனைத்து விதிகளையும் மீறுகிறது, வரம்பு மீறி செயல்படுகிறது. முறைகேடு நடந்தது என்றால் சம்பந்தப்பட்ட தனிநபர்கள் மீது விசாரணை நடத்தலாம். ஆனால், ஒட்டுமொத்த அரசு நிறுவனத்தையும் எப்படி விசாரிக்கலாம்? நாட்டின் கூட்டாட்சி நடைமுறைகளை அமலாக்கத்துறை மீறுகிறது” என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதை மறுத்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், விரிவான பதில் மனு தாக்கல் செய்வதாகக் கூறினார்.

தி.மு.க.வின் கருத்து

சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பின்னர் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை தி.மு.க. வரவேற்பதாகத் தெரிவித்தார். “முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் செல்வாக்கு உயர்ந்து வருவதைப் பொறுக்காமல், அரசுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பா.ஜ.க. தலைவர்கள் பேசி வந்தனர். அதற்குச் சம்மட்டி அடி தரும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது. எங்களது அனைத்து முடிவுகளும் நியாயமானது என்பதற்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஒரு அங்கீகாரம்” என்று அவர் கூறினார்.

மேலும், “அமலாக்கத்துறையின் அராஜகங்களுக்கு முடிவுகட்டும் வகையில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை ஒரு பிளாக்மெயில் அமைப்பைப் போல் செயல்படுகிறது. அமலாக்கத்துறையைத் தவறாகப் பயன்படுத்துவதை மத்திய அரசு இனிமேலாவது நிறுத்த வேண்டும். சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. தி.மு.க. அரசுக்குக் களங்கம் கற்பிக்கும் வகையில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது” என்றும் ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார். இந்தத் தீர்ப்பால் டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறையால் தலையிட முடியாது என்றும் அவர் கூறினார்.

Related Posts