ஈகைப்பெருநாள்/ரமலான் பெருநாள் – கொஞ்சம் விளக்கம்!

ஈகைப்பெருநாள்/ரமலான் பெருநாள் – கொஞ்சம் விளக்கம்!

“ஈதுல் ஃபித்ரு”
“ஈகைப் பெருநாள்”
பிரதி இஸ்லாமிய வருடமும் ரமளான் என்ற மாதத்தின் தொடக்கம் முதல் நிறைவு வரை ஆகிய இந்த நாட்களில் உலகில் வாழும் இஸ்லாமியர்கள் வைகறைப் பொழுது முதல் பகலவன் மறையும் வரை உண்ணா நோன்பு இருப்பர் என்பது அனைவரும் அறிந்ததே

“நோன்பு” என்பது இஸ்லாத்தின் ஐந்து கடமைகளுள் ஒன்று. கடமை என்றால் Obligatory Duty என்று அர்த்தம். ஏன் இந்த மாதம் நோன்பு நோற்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது?

இந்த சங்கை பொருந்திய மாதத்தில் தான் இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குர்ஆன் இறைவனால் அருள ஆரம்பிக்கப்பட்டது. நான் இங்கு அருள ஆரம்பிக்கப்பட்டது என்று கூற காரணம் திருக்குர்ஆன் ஒரே நாளிலோ ஒரே மாதத்திலோ அனுப்பபட்டது அல்ல. இருபத்தி மூன்று வருட கால இடைவெளியில் சிறிது சிறிதாக இறக்கப்பட்டது.

ரமலான் மாதத்தின் சிறப்பு யாதெனில் குர்ஆனின் முதல் இறக்குதல் இந்த மாதத்தில் தான் தொடங்கியது என்பது தான்.இந்த மாதத்தில் வணக்க வழிபாடுகளில் கவனம் செலுத்தும் இஸ்லாமியர்களுக்கு “ஃபித்ரா” எனும் தர்மம் கட்டாய கடமையாக்கப்பட்டுள்ளது.

அது என்ன ஃபித்ரா?

ஃபித்ரா என்றால் தர்மம் அல்லது ஈகை என்று பொருள்ஒரு பெருநாள் என்று வந்து விட்டால் பணம் இருப்பவன் தன்னிடம் இருக்கும் பணத்தை செலவு செய்து கொண்டாடிவிடுவான் ஆனால் ஏழைகள் என்ன செய்வார்கள்? அவர்களும் பெருநாளை கவலையின்றி கொண்டாட ஏற்படுத்தப்பட்டதே இந்த ஃபித்ரா.

ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று பெருநாளன்று இறைவனுக்கு நன்றி செலுத்தும் கடமையான தொழுகைக்கு செல்வதற்கு முன் இந்த ஃபித்ரா வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்த தர்மத்தை நாம் நமக்கு தெரிந்த நம் சுற்றத்தில் உள்ள ஏழை எளியவர்களுக்கு செலவு செய்ய வேண்டும்

அவர்களும் பெருநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்

முக்கியமாக பசியின்றி அந்த பெருநாள் அன்றாவது மூன்று வேளை உணவையும் ஏழைகள் உண்ண வேண்டும் என்பதே நோக்கம்.

இதுவே ஈதுல் ஃபித்ரு எனும் ஈகைப்பெருநாள் கொண்டாடப்படுவதின் நோக்கம்

Dr.A.B.ஃபரூக் அப்துல்லா