இஸ்ரேலுக்குத் தொழில்நுட்ப உதவி :எதிர்த்துப் போராடிய 28 ஊழியர்கள் நீக்கம் & பலர் கைது- கூகுள் சர்ச்சை!
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கான எதிரான அழுத்தங்கள் சமீப காலமாக அதிகரித்துக் கொண்டே வருகின்றன. ஏற்கெனவே கூகுளின் பிரத்யேக ஏஐ மற்றும் படங்களை உருவாக்கும் தொழில்நுட்பம் ஆகியவை கடும் விமர்சனத்துக்கு ஆளாயின. அடுத்த தலைமுறைக்கான மாற்றங்களை உள்வாங்கி செயல்படுத்துவதில் சுந்தர் பிச்சை தடுமாறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவை அனைத்துமாக சுந்தர் பிச்சைக்கான அழுத்தங்களை அதிகரிக்க, அவர் விரைவில் மாற்றப்படுவார் என்றெல்லாம் பேச்சுக்களும் வலம் வந்தன. இவற்றின் மத்தியில், ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதும், அவர்கள் கைது மற்றும் பணி நீக்கத்துக்கு ஆளாவதும், கூகுள் நிறுவத்தின் சுந்தர் பிச்சையை மையமாகக் கொண்ட சர்ச்சைகளை அதிகரிக்கச் செய்துள்ளன.

கூகுள் மற்றும் அமேசான் நிறுவனம் இஸ்ரேல் அரசுக்கு ஏஐ மற்றும் கிளவுட் தொழில்நுட்பச் சேவை வழங்குவது தொடர்பாக 1.2 பில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் போர்த் தாக்குதல் நடத்தி வருகிற நிலையில், இஸ்ரேல் ராணுவத்துக்குத் தொழில்நுட்ப ரீதியாக உதவிகள் வழங்குவது நியாயமற்றது என்று கூறி, இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக கூகுள் நிறுவன ஊழியர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
நியூயார்க், கலிஃபோர்னியாவில் உள்ள கூகுள் அலுவலகங்களில் சில ஊழியர்கள் 2024 ஏப்ரல் 16 அன்று 10 மணி நேரத்துக்கும் மேல் தர்ணா செய்தனர். இது தொடர்பாக கூகுள் நிறுவனத்தின் புகாரையடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 50க்கும் மேற்பட்ட பேரைக் காவல் துறை கைது செய்தது.
இந்நிலையில், மறுநாள் 17.04.2024 அன்று கூகுள் நிறுவனம் அதன் 28 ஊழியர்களைப் பணியிலிருந்தும் நீக்கியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் சர்வதேசப் பாதுகாப்புப் பிரிவின் தலைவர் கிரிஸ் ராக்கோ இது குறித்து ஊழியர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், “நிறுவனத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்தப் போராட்டத்தில் தொடர்புடைய 28 பேரும் நிறுவனத்திலிருந்து நீக்கப்படுகின்றனர். இத்தகைய செயல்பாடுகளை கூகுள் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையும் தனியாக எச்சரிக்கை வெளியிட்டார். ’நிறுவனத்திற்கு என திறந்த கலாச்சாரம் உள்ளது. அங்கு விவாதங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. ஆனால் அதற்கும் வரம்புகள் உண்டு’ என்று ஊழியர்களை எச்சரித்தார். “எங்களிடம் திறந்த விவாதத்துக்கான கலாச்சாரம் உள்ளது. இவை அற்புதமான தயாரிப்புகளை உருவாக்கவும் சிறந்த யோசனைகளை செயலாக மாற்றவும் உதவக் கூடியது. அதைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம்.
ஆனால், சக ஊழியர்களை சீர்குலைக்கும் வகையில் நிறுவனத்தை தனிப்பட்ட தளமாக பயன்படுத்த முயற்சிப்பதோ, அரசியல் விவாதங்களை உருவாக்குவதோ, அவர்களுக்கு பாதுகாப்பற்றதாக உணரும் வகையில் செயல்படுவதற்கான இடமாக மாற்ற முயல்வதோ கூடாது. அதற்கான இடம் கூகுள் அலுவலகம் அல்ல” என்று காட்டமாக மெயில் அனுப்பி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .


