அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் – சொந்தக் கட்சியினராலேயே வெளியேற்றம்!
234 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதுவும் அமெரிக்கா அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், சொந்த கட்சியினரே சபாநாயகருக்கு எதிராக வாக்களித்து அவரை வெளியேற்றி இருப்பது அமெரிக்க அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் தற்போது ஜனநாயக கட்சி ஆட்சியில் இருக்கிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற இருப்பதால், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் அதிபர் பதவிக்கு போட்டியிட இருக்கிறார். ஆனால் அவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. பாலியல் குற்றாட்டு தொடங்கி அதிபர் மாளிகையின் ரகசிய ஆவணங்களை வீட்டிற்கு எடுத்து சென்றது வரை பல்வேறு புகார்களுக்கு ஆளாகி நீதிமன்றங்களுக்கு டிரம்ப் ஏறி வருகிறார். கடந்த முறை தேர்தலில் தோல்வியுற்றபோது அவரது ஆதரவாளர்கள் பெரும் கிளர்ச்சியை உருவாக்கினர்.

வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டனர். அமெரிக்க வரலாற்றில் அதுபோன்ற ஒரு போராட்டத்தை நாடு இதற்கு முன்னர் சந்திக்காத வகையில் டிரம்ப் ஆதரவாளர்கள் அராஜகத்தில் ஈடுபட்டனர். இப்படி இருக்கையில், அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி தொடர்ந்து ஜனநாயக கட்சியுடன் இணக்கமாக செல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. . இதையடுத்து கெவின் மெக்கார்த்திக்கு எதிராக அவர் சார்ந்துள்ள குடியரசு கட்சியே பதவி நீக்க தீர்மானத்தை கொண்டுவந்தது.
விவாதத்தின் பின் நடைபெற்ற வாக்கெடுப்பில் 216 வாக்குகள் பெற்று தீர்மானம் வெற்றிபெற்றதை அடுத்து பிரதிநிதிகள் சபை சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி, பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஆளுங்கட்சிக்கு சாதகமான கெவின் மெக்கார்த்தியின் நடவடிக்கைகள் குறித்து பலமுறை எச்சரிக்கப்பட்டதாகவும், ஆனால் அவற்றை அவர் மதிக்காததே பதவி நீக்க தீர்மானம் கொண்டுவர முக்கியமான காரணம் என்றும் குடியரசு கட்சி தலைவர்கள் கூறினர்.
மெக்கார்த்தி பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் அவர் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறினார். வெளியேறும்போது எந்த கருத்துக்களையும் அவர் கூறவில்லை. அவரை யாரும் நம்பாததே இந்த முடிவுக்கு காரணம் என்று குடியரசு கட்சியினர் கூறியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


