எல்.ஜி.எம் – விமர்சனம்!
சென்னை சூப்பர் கிங் ஜாம்பவான் தோனி மனைவி சாக்ஷி தோனி தயாரித்திருக்கும் முதல் தமிழ் படம் எல் ஜி எம். கதை கருவும் அவர் சொன்னதுதானாம்.. அதாவது இந்த மாமியார் மருமகள் பிரச்சனை என்பது உலகம் முழுக்க காலம் காலமாக இருந்து வருகிறது. இருந்தாலும் இன்றைய நவீன கால நிலையில் இந்த பிரச்சனை இன்னும் அதிக பாதிப்பை உண்டாக்குகிறது. மாமியார் மருமகளிடையே ஒரு இணக்கமான சூழல் அமையும் வீடுகள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாக உள்ளதை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.. நவீன கால பெண்கள் சுதந்திரமாக வாழ நினைக்கின்றனர். நிறைய சம்பாதிக்கின்றனர். நிறைய படித்திருக்கின்றனர். அவர்கள் நிதி நிலைமையை கையாளும் அளவிற்கு அவர்களுக்கு வருமானம் வருகிறது. இதற்கிடையில் அதிகரித்து வரும் மாமியார் மருமகள் பிரச்சனைகள், பல விவாதங்களையும் தோற்றுவிக்கின்றன. பொது இடத்தில் சண்டை சச்சரவுகளுக்கு வழி விடுத்து, சட்ட தலையீடு அவசியமாகிறது. இப்படியான சூழலில் குடும்பப்பாங்கான படம் எடுக்க வேண்டும் என்று எண்ணிய சாக்ஷி, அதற்கு ஏற்ப ஒரு கதையைத் தேர்வு செய்திருக்கிறார். ஆனால் அந்த ஒன்லைனை அழகான கோட்டை வீடாக மாற்றிக் காட்டுவதில் டைரக்டர் ரமேஷ் தமிழ் மணி சொதப்பி விட்டார். என்றாலும் இன்றைய யூத்களுக்கு தேவையான படமிது.

அதாவது ஒரே நிறுவனத்தில் பணிபுரியும் ஹரிஸ்கல்யானும், எவானாவும் லவ்வுடன் 2 வருடமாக டேட்டிங் செய்து வருகிறார்கள். ஒருகட்டத்தில் எவானாவிடம் ஹரிஸ் காதல் சொல்லி மேரேஜ் புரொபோசல் செய்ய அவரும் ஏற்கிறார். இதை அடுத்து அம்மா நதியாவுடன் எவானாவை ஃபார்மாலிட்டிபடி பெண் பார்க்க ஹரிஸ் வருகிறார். ஆனால் நதியா.சொல்லும் ஒரு வார்த்தையை கேட்டு ஹரிசை மணக்க மறுக்கிறார் எவானா. பின்னர் ஒரு ஐடியா சொல்கிறார் எவானா. அதன்படி இரு குடும்பமும் ஒரு டூர் சென்று அப்போது நதியாவுடன் பழகிப் பார்த்து அவரது செயல்பாடு. பிடித்திருந்தால் ஹரிசை மேரேஜ் செய்து கொள்வதாகச் சொல்கிறார். நதியாவிடம் இதை கூறாமல் சுற்றுலாவுக்கு அழைத்து வருகிறார் ஹரிஸ். ஒரு கட்டத்தில் இந்த விஷயம் நதியாவுக்கு தெரிய வர அவர் கோபம் ஆகிறார். திரும்பி சென்று விடலாம் என்று ஹரிஸ் எண்ணும்போது நதியாவும், எவானாவும் மட்டும் தனியாக சுற்றுலா சென்று பழக முடிவு செய்து ஜூட் விட்டு விடுகிறார்கள்..அவர்களை ஹரிஸ் எப்படி கண்டுபிடித்தார்?, நதியா, எவானா இருவரும் மனம் ஒத்துப்போனார்களா , ஹரிஸ், எவானா கல்யாணம் செய்ய முடிந்ததா என்ற கேள்விகளுக்கு பதில் சொல்வதே எல்ஜிஎம் படக் கதை.
நாயகன் ஹரிஷ் கல்யானுக்கு சாக்லேட் பாய் லுக்கில் கேரக்டரில் வாழ்ந்து இருக்கிறார். ஆனால் இரண்டாம் பாதியில் இவருக்கு கொஞ்சமும் வேலை இல்லை. இவானா – நதியாவையே சுற்றி கதை நடப்பதால், ஹீரோ இரண்டாம் பாதியில் காணாமல் போய்விடுகிறார். எனக்கு ஒரு ஐடியா இவானா லவ்லியாக அவருக்கு பொருத்தமான ரோலாக கிடைத்திருக்கிறது. அதை அவர் சிறப்பாகவே செய்திருக்கிறார். அம்மாவாக நடித்திருக்கும் நதியா முதல் பாதியில் சற்று முதிர்ச்சியாகவும், இரண்டாம் பாதியில் இளமையாகவும் காட்சிப்படுத்தியிருக்கும் விதமும், அவருடைய எதார்த்தம் நடிப்பும் ரசிக்க வைக்கிறது. யோகி பாபு, ஆர்ஜே விஜய், இன்ஸ்டாகிராம் ‘விக்கல்ஸ்’ ரீல்ஸ் போன்றோர் முழுசாக காமெடி கொடுக்க தவறி விட்டார்கள்
கேமராமேன் விஸ்வஜித்தின் ஒளிப்பதிவு படத்திற்கு சற்று ஆறுதல், ரமேஷ் தமிழ்மணி இசையில் பாடல்கள் எடுபடவில்லை என்றாலும், பின்னணி இசை பரவாயில்லை என்று மட்டுமே சொல்ல வைக்கிறது.
பேமிலி சப்ஜெக்ட் எடுக்கும் போது பொதுவாக பல குடும்பங்களில் நடக்கும் நிகழ்வுகளையே கவனத்தில் கொள்ள வேண்டும். மாறாக ஹைகிளாஸ் சொசைட்டி பழக்க வழக்கத்தை எடுத்து ஆர்டினரி யூத்களின் வாழ்க்கைக் கதை என்று சொல்வதால் முழுமையாக ஈடுபாடு இல்லாமல் போய் விட்டது.
என்றாலும் இன்றைய இளசுகளுக்கு பிடிக்கும் என்றே நம்பலாம்!
மார்க் 3/5


