பிரதமர் மோடியை பேச வைக்கவே நம்பிக்கையில்லா தீர்மானம்!
ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசின் மீது மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத் தலைவர் அசாம் மாநில எம்.பி. கவுரவ் கோகோய் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருமாறு நோட்டீஸ் ஒன்றை இன்று (ஜூலை 26) காலை 9.20 மணியளவில் தாக்கல் செய்தார். அவருடன் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் மக்களவைத் தலைவர் நாகேஸ்வர் ராவும் தனியாக ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்தார். காங்கிரஸ் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை இண்டியா கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளன. ஆனால், மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசுக்கு மக்களவையில் 332 எம்.பி.க்கள் ஆதரவு இருக்கும் சூழலில், இந்தத் தீர்மானத்தில் ஆட்சி எந்த பாதிப்பும் இல்லை என்ற நிலையில் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் நாங்கள் வெற்றி பெறுவது குறித்து சிந்திக்கவில்லை, மாறாக பிரதமர் மோடியை பேச வைக்க வேறு வழியில்லை என்று இந்தியா கூட்டணி தெரிவித்துள்ளது.

மணிப்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக, பிரதமர் மோடி பதில் அளிக்க கோரி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 4-வது நாளாக நேற்றும் முடங்கியது. இந்நிலையில் பிரதமரை நாடாளுமன்றத்தில் பதில் அளிக்க வைக்கும் வியூகமாக, அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது பற்றி ‘இண்டியா’ கூட்டணி உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினர்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தால் எண்ணிக்கையில் பலம் வாய்ந்த பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பாஜக கிண்டல் செய்த நிலையில், ”மணிப்பூர் சம்பவம் குறித்து பதில் அளிக்க பிரதமர் மோடி மறுத்து வருகிறார். எனவே, எங்களது கேள்விகளுக்கு பிரதமர் பதில் கூற, நம்பிக்கையில்லா தீர்மானம் நல்ல வாய்ப்பாக இருக்கும். மக்களவையில் எதிர்க்கட்சிகளின் பலம் என்ன என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும், பிரதமரை பேசவைக்க வேறு வழி இல்லை” என்று எதிர்க்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மோடி அரசு மீது காங்கிரஸ், பிஆர்எஸ் கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் அளித்த நிலையில், அதனை விவாதத்துக்கு ஏற்றுக் கொண்டதாக மக்களவை சபாநாயகர் உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர், “நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு ஏற்கப்பட்டது. அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசித்து விவாதத்துக்கான நேரம் குறிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.


