தக்காளி விலை உயர்வுக்கு காரணம் இதுவா?
பதப்படுத்துதல் என்பது உணவுப் பாதுகாப்பில், விவசாயப் பாதுகாப்பில் மிக முக்கிய இடம் வகிப்பது. அரிசி திடீரென ஐந்து மடங்கு விலை உயர்ந்து அல்லது ஐந்து மடங்கு விலை வீழ்ச்சியடைந்து பார்த்துள்ளோமா? தக்காளியைப் போல அரிசி கிலோ இரண்டு ரூபாயில் இருந்து இருநூறு ரூபாய் வரை ஏறி இறங்காது.

அமெரிக்காவில் ஆயிரம் டன்களில் விளையும் ஆரஞ்சுப் பழங்கள் பழச்சாறாக மாறி உலகம் முழுவதும் செல்கின்றன. ஆரஞ்சுப் பழங்கள் விலை அதிகமாகும் போது பழச்சாறு நிறுவனங்கள் கொள்முதலைக் குறைத்துக் கொள்ளும். தேவை குறைந்து விலை உயர்வு தடுக்கப்படும். விலை வீழ்ச்சியடையும்போது பழச்சாறு நிறுவனங்கள் கொள்முதலை அதிகரிக்கும். தேவை அதிகரித்துப் பெரிய விலை வீழ்ச்சி தடுக்கப்படும்.
உணவுப் பதப்படுத்துதல் என்பது உணவுப் பொருட்கள் விலையில் buffer போல, shock absorber போலச் செயல்பட்டு விவசாயிகளுக்கும் நன்மை விளைவித்து, நுகர்வோருக்கும் பயன் அளித்து win-win சூழ்நிலையை உருவாக்கும் அறிவியல் முறை.
ஆனால், சமீப காலங்களில் உலகம் முழுவதும் இயற்கை ஆதரவு எனும் பெயரில் இயங்கும் உணவுத் தீ*விரவாதி*களின் பொய்ப் பிரச்சார மெசின்கள் தொடர்ச்சியாகச் செயல்பட்டு வருவதால் பதப்படுத்துதல் எனும் சொல்லே ஏதோ கெட்ட சொல்லாக மாறிவிட்டது. அன்றாட உணவிற்கு உத்தரவாதம் இல்லாமல் ஆதி மனிதன் குகைகளில் வசித்த காலம் தொட்டு உணவைப் பதப்படுத்திப் பயன்படுத்தி வந்துள்ளான். ஆனால் அது இன்றைக்குப் பழமையை முன்வைத்தும், இயற்கையை முன்வைத்துமே எதிர்க்கப்படுகிறது.
இதன் விளைவு, திடீர் விலை உயர்வு, திடீர் விலை வீழ்ச்சி. இரண்டு ரூபாய்க்குத் தக்காளி விலை வீழும் போது ரோட்டில் கொட்டிப் போராட்டம் நடக்கிறது. 200 ரூபாய்க்குச் செல்லும் போது தக்காளி இல்லாத உணவுக்கு உலகம் தள்ளப்படுகிறது.
உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காத எத்தனையோ பதப்படுத்தலை, நவீனத்தைத் தக்காளி விவசாயத்தில் அறிமுகப்படுத்தலாம். ஆனால் பதப்படுத்துதல் என்றாலே நஞ்சு, காலையில் பறித்து அப்படியே தின்றால் ஆயிரம் வருடம் வாழ்வோம் எனும் மூட நம்பிக்கையில் இருக்கும் உலகத்திடம் இதைப் பற்றிப் பேசுவதே வீண்.
தக்காளி விலை உயர்வைப் பற்றி இரண்டு வாரங்களில் ஆயிரக்கணக்கான செய்திகளைப் படித்திருப்போம். ஆனால் உணவுப் பதப்படுத்துதல் தீர்வைப் பற்றி ஒரு செய்தியும் அதில் வந்திருக்காது. அந்த அளவு உணவுத் தீ*வீரவா*திகளால் மூளை மழுங்கடிக்கப்பட்டுள்ளோம். இந்தச் சூழ்நிலையில் அறிவியல் ரீதியிலான தீர்வுகளைப் பற்றி இங்கு பேசுவது, செண்டினல் தீவு மக்களுக்கு ஷேர் மார்க்கெட் சொல்லிக் கொடுப்பதைப் போன்ற செயல்.
ஒவ்வொரு தவறான கொள்கைக்கும், ஒவ்வொரு மூட நம்பிக்கைக்கும் நாம் ஒரு விலை தந்தாக வேண்டும்.
திடீர் காய்கறி விலை உயர்வு, மூட நம்பிக்கைக்காகப் பயனாளிகள் கொடுக்கும் விலை. திடீர் விலை வீழ்ச்சியின் போது அடையும் நட்டம் விவசாயிகள் கொடுக்கும் விலை.
எது எப்படியோ, உணவுப் பஞ்சம் ஏற்படுத்துவதிலும், உணவைக் கிடைத்தற்கரிய பொருளாக மாற்றுவதிலும் இயற்கைத் தீ*வீர*வாதிகள் வெற்றி பெற்றுக் கொண்டே வருகின்றனர். விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதையும் வெற்றிகரமாகத் தடுத்து வருகின்றனர்.
இதை உரக்கப் பேச வேண்டிய இந்தச் சமூகத்தின் சிந்தனையாளர் அடுக்குகளோ வெண் பொங்கல் எச்.ஐ.விக்கு நல்லதா என விவாதித்துக் கொண்டுள்ளனர்.
நல்ல உலகம்.


