யோகிபாபு படத்துக்கு தூக்கு துரை டைட்டில் ஏன்?- டைரக்டர் விளக்கம்!

யோகிபாபு படத்துக்கு தூக்கு துரை டைட்டில் ஏன்?- டைரக்டர் விளக்கம்!

டைரக்டர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் கலகல காமெடிப் படமாக உருவாகியிருக்கும் படமே ‘தூக்குதுரை’. ‘ட்ரிப்’ படத்திற்குப் பிறகு டென்னிஸ் இயக்கியிருக்கும் இரண்டாவது படம் இது. ‘ஓபன் கேட் பிக்சர்ஸ்’ சார்பில் அரவிந்த் வெள்ளைபாண்டியன், அன்புராசு கணேசன் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் டைட்டிலான ‘தூக்கு துரை’என்பதைக் கேட்டவுடன் விஸ்வாசம் படத்தில் அஜித் ஏற்றிருந்த பாத்திரத்தின் பெயர் ஞாபகத்துக்கு வருகிறதா..? ஆனால் இந்தப் படத்தின் ஹீரோ யோகி பாபு. இப்படியோர் தலைப்புக்கான காரணம் குறித்து விவரித்த இயக்குநர், “பொதுவாகவே சில கிராமங்கள்ல சிறு, குறுநில மன்னர்களுடைய வகையறாக்கள் இன்னமும் வாழ்ந்துட்டு இருக்காங்க. ஒரு காலத்திலே பந்தாவா, ஆட்சி பீடத்திலே ஆட்சி செய்தவங்க. இன்னைக்கு பொது மக்கள்ல ஒருத்தங்களா, எல்லாரையும் மாமன், மச்சான்னு கூப்பிட்டுட்டு இருப்பாங்க.
ஆனாலும் கோயில் திருவிழா, ஊர் மரியாதை இதெல்லாம் இன்னைக்கும் மரியாதை நிமித்தமா அந்த குடும்பத்து சார்பா யாருக்கோ செய்திட்டு இருப்பாங்க. ஆரம்பத்திலே ‘மன்னர்’ சார்ந்த பெயர்தான் யோசிச்சோம். ஆனா, ‘மாமன்னன்’ ஏற்கனவே உருவாகிட்டு இருக்கறதால இந்தப் படத்துக்கு வேற பெயர் யோசிச்சோம். மன்னர்களை துரைன்னும் சொல்றதுண்டு. தனக்கான மரியாதையை தூக்கும் துரைதான் இந்த ‘தூக்குதுரை’.” என்றார்.

ஷூட்டிங் முழுவதுமாக முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாகியிருக்கும் ‘தூக்கு துரை’ படக்குழு சார்பாக இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் மற்றும் இப்படத்தின் இணை தயாரிப்பாளர் வினோத்ராஜ் இருவரும் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது டென்னிஸ் மஞ்சுநாத். “ஓர் இயக்குநரின் கரியர்ல இரண்டாவது படம் மிகவும் முக்கியம்… பொதுவா எந்த ஜானர்ல வேணும்னாலும் சுலபமா கதை சொல்லிடலாம். ஆனா, காமெடி மட்டும் பெரிய டாஸ்க். முதல் படம் ‘டிரிப்’ முடிச்சப்ப சில இடங்கள்ல அந்தப் படம் ஒர்க்அவுட் ஆச்சு, விமர்சன ரீதியா சில இடங்கள்ல ஒர்க்கவுட் ஆகல. அதனால இன்னும் சிறப்பா அடுத்த படம் செய்யணும்னு இந்தப் படத்தை எடுத்திருக்கேன். ஒரு காலத்தில், ராஜாவாக வாழ்ந்தவர்களின் பரம்பரையில் வந்த வாரிசுகள் இப்போது சாதாரண மக்களாக வாழ்ந்து கொண்டிருந்தாலும், ஊர் பழக்க வழக்கங்கள் அவர்கள் தலைமையில்தான் நடைபெறுவது வழக்கம். அப்படிப்பட்ட ஒரு அரச குடும்பத்தின் தலைமையில் அந்த ஊரில் உள்ள கோயில் திருவிழாவில் நடைபெறும் பலவித சம்பவங்களை உள்ளடக்கியது படத்தின் கதை. இதில் யோகி பாபு கதையைத் தாங்கும் கதாபாத்திரத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக இனியா நடித்திருக்கிறார். யோகி பாபு அண்ணன் நடிச்ச ‘கூர்க்கா’ல நான் அசிஸ்டென்ட். அந்தப் பட சமயத்திலேதான் நிறைய பேசினோம். அப்போதே நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் செய்யலாம்னு சொன்னார். அந்த வார்த்தைக்கேற்ப ‘ட்ரிப்’ படத்திலே நடிச்சார். அடுத்து இப்போ ‘தூக்குதுரை’ படத்திலும் அவர்தான் நாயகன்.

அந்த ஊரின் ராஜகுடும்பத்து வாரிசாக மாரிமுத்துவும், மரியாதைக்கு ஏங்கும் அவரது தம்பியாக நமோ நாராயணனும் நடித்திருக்கிறார்கள். அந்த ராஜ பரம்பரை பற்றிய 18 ஆம் நூற்றாண்டுக் கதையும் இதில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அதை முழுவதும் அனிமேஷன் முறையில் சொல்லியிருக்கிறோம். இது மட்டும் இல்லாமல் 1999 – திலும், தற்போது 2023 -லுமாக இரண்டு காலகட்டங்களில் நடக்கும் கதையைச் சொல்லி இருக்கிறோம்.

இதில் இனியாவுக்கு இளமையாகவும், நடுத்தர வயதுடனும் இரண்டு கெட்டப்புகள் இருக்கின்றன. இவர்களுடன் பால சரவணன், புதுமுகம் அஷ்வின், மொட்டை ராஜேந்திரன், சென்றாயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க குடும்ப உறுப்பினர்களை மையப்படுத்தி நகைச்சுவையை அடிப்படையாகக் கொண்ட படமிது… படத்தில் யோகி பாபு, இனியா ஜோடியின் கெமிஸ்ட்ரி அற்புதமாக வந்திருக்கிறது. இரண்டு பேருக்கும் இடையே காதல் காட்சிகள் இருந்தாலும் பாடல் காட்சிகள் இல்லை.யோகி பாபு – இனியா காதலால்தான் ஊருக்குள் பிரச்சனை வரும். அந்தப் பிரச்சனை எப்படி போய் முடிகிறது, என்பதுதான் முழுக் கதை..!” என்றார்.

ரவி வர்மா.கே ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு கே.எஸ்.மனோஜ் இசையமைத்திருக்கிறார். தீபக் எஸ்.துவாரக்நாத் படத்தொகுப்பு செய்ய, ஜெய்முருகன் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். மான்ஸ்டர் முகேஷ் மற்றும் ராம்குமார் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, அறிவுமதி மற்றும் மோகன்ராஜன் பாடல்கள் எழுதியுள்ளனர். ஓபன் கேட் பிக்சர்ஸ் சார்பில் அரவிந்த் வெள்ளைபாண்டியன், அன்புராசு கணேசன் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் இணை தயாரிப்பை வினோத் குமார் தங்கராஜு கவனிக்கிறார். தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகளில் பிஸியாகியிருக்கும் ‘தூக்குதுரை’ படக்குழு விரைவில் படத்தின் டீசரை வெளியிடுவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது

“படத்தின் வெளியீடு எப்போது..?” என்று இணை தயாரிப்பாளர் வினோத் ராஜிடம் கேட்டபோது, “படத்தை நாங்கள் பார்த்து விட்டோம். எங்களுக்குத் திருப்தியாக வந்திருக்கிறது. இந்தப் படம் குடும்ப ஆடியன்சைக் குறி வைத்திருப்பதால் வர இருக்கும் தேர்வுகளை அடுத்து வரும் விடுமுறையில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம்..!” என்றார்.

Related Posts