தமிழ் குரல் / AI Voice
உலக விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆர்வலர்களின் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி நடைபெறும் தேதி, இடம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டாலும், அறிவிப்புக்கு முன்பு ஏற்றப்படும் ஜோதியே போட்டி தொடங்குவதை உறுதி செய்யும். ஜோதி ஏற்றப்பட்டாலே ஒலிம்பிக் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன என்று தான் அர்த்தம். அந்த வகையில் வரும் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி கிரீசில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரும் விளையாட்டுத் திருவிழா எனக் கருதப்படும் ஒலிம்பிக் போட்டியின் மிக முக்கியமான ஒரு அம்சமாக ஒலிம்பிக் தீபம் விளங்குகிறது. ஒலிம்பிக் தொடங்குவதில் இருந்து போட்டி காலம் முழுவதும் இரவு, பகல் எந்நேரமும் பிரகாசமாகவும், கம்பீரமாகவும் ஒளிரும் இந்த ஒலிம்பிக் தீபம், நிறைவு விழாவின் போது அணைக்கப்படுகிறது.
விளையாட்டு வீரர்களால் மிகவும் புனிதமானதாகக் கருதப்படும் இந்த ஒலிம்பிக் தீபச்சுடர், ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியின் போதும் பழமையான பாரம்பரிய முறையில் கிரேக்கத்தில் ஏற்றப்படுவது வழக்கம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் பண்டைக்கால ஒலிம்பிக் போட்டிகளின் போது, குழியாடியின் மையத்தில் சூரிய ஒளி விழும்படி செய்து, அதனால் உண்டாகும் வெப்பத்தைக் கொண்டே ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது. இன்றுவரை அதே முறையிலேயே ஒலிம்பிக் தீபம் ஏற்றப்படுவதால், பழங்கால மற்றும் நவீன ஒலிம்பிக் போட்டிகளுக்கான தொடர்பை உணர்த்தும் ஒரு தனிச்சிறப்பு இந்த ஒலிம்பிக் ஜோதிக்கு உள்ளது.
ஒலிம்பிக் போட்டி எந்த நாட்டில் நடைபெற்றாலும், கிரேக்கத்தின் தென் பகுதி நகரான ஒலிம்பியாவில் பாரம்பரிய முறையில், நடனம், நாடகம் போன்ற கலைவிழாக்கள் நடத்தி இச்சுடர் ஏற்றப்படும். அப்போது நீளமான உடையணிந்த வீராங்கனை ஒருவர், ஒளிக்கான கிரேக்கக் கடவுள் அபோலோவிடம் பிரார்த்தனை செய்த பிறகு, நிலத்தில் மண்டியிட்டு சூரிய ஒளியால் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றுவார்.

அந்த வகையில் இந்த முதல் ஒலிம்பிக் ஜோதி, 1936 ம் ஆண்டு ஜூலை 20 அன்று கிரேக்கத்தின் ஒலிம்பியாவில், ஒரு கண்ணாடியால் சூரியக் கதிர்களைக் ஓரிடத்தில் குவித்து,ஒலிம்பிக் ஜோதி பற்றவைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இந்த ஜோதியை முதன் முதலில் கையில் ஏந்திச் சென்ற நபர், கிரேக்கத்தச் சேர்ந்த தடகள வீரர் கான்ஸ்டான்டின் கோண்டிலிஸ் தான். கிரீஸ், பல்கேரியா, யூகோஸ்லாவியா, ஹங்கேரி, ஆஸ்திரியா, செக்கோஸ்லோவாக்கியா என, பல வீரர்களால் ஏந்தப்பட்டு வந்த இந்த ஜோதி, 12 நாட்களுக்குப் பிறகு ஜெர்மனியை வந்தடைந்தது. ஜெர்மன் ஆயுத உற்பத்தி நிறுவனம் க்ரூப்பின் சின்னமானது அந்த ஜோதியில் பதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.அன்று தொடங்கிய ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் பழக்கம், அடுத்து வந்த ஆண்டுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டது.
இந்நிலையில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி அமைப்புக் குழுத் தலைவர் டோனி எஸ்டான்குவெட் இது குறித்து, “வரும் 2024-ல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 16-ம் தேதி, பழமையான கிரீஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் ஒலிம்பிக் ஜோதி, சூரிய கதிர்களைக் கொண்டு ஏற்றப்படும். பிறகு அந்த ஜோதி கிரீஸ் நாடு முழுவதும் ஜோதி எடுத்துச் செல்லப்பட்டு ஏதென்ஸ் நகரில் வழங்கப்படும்.

ஏதென்சில் இருந்து ஏப்ரல் 27-ம் தேதி புறப்படும் ஒலிம்பிக் ஜோதி, பெலேம் என்ற கப்பலில் ஏற்றப்பட்டு பிரான்ஸின் மார்செய்ல் துறைமுகத்துக்கு வந்து சேரும். அங்கிருந்து பழமையான நகரங்களுக்கு ஒலிம்பிக் ஜோதி எடுத்துச் செல்லப்பட்டு நார்மன்டி நகரிலுள்ள மான்ட் செயின்ட்-மைக்கேல், செயின்ட் எமிலியான், சாப்ளிஸ் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஒலிம்பிக் ஜோதி பயணமாகும்.”எனக் கூறி உள்ளார்.
பிரான்ஸில் உள்ள புராதன இடங்கள் உட்பட 400 நகரங்களுக்கு மொத்தம் 68 நாட்கள் ஒலிம்பிக் ஜோதி பயணமாகிறது. பிரபல விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் இந்த ஜோதியைச் சுமந்து செல்லவுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்கவுள்ளனர் என்று பாரீஸ் நகர மேயர் ஆன் ஹிடால்கோ தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் ஜோதி, இறுதியாகப் போட்டி நடைபெறும் இடத்துக்குக் கொண்டுவரப்பட்டு பெரிய கொப்பரையில் ஏற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
