விக்கிபீடியா இரண்டாம் முகம் வந்தாச்சாமில்லே!

விக்கிபீடியா இரண்டாம் முகம் வந்தாச்சாமில்லே!

ருவர் விக்கிபீடியாவை அதன் ஆதார கட்டற்ற தன்மைக்காக கொண்டாடலாம். அல்லது அதன் மீது அவநம்பிக்கை கொண்டு குறை கூறலாம், விமர்சிக்கலாம். விக்கிபீடியா மீது அவதூறு கூறுபவர்களையும், கல்லெறிபவர்களையும் விட்டுவிடலாம். விக்கிபீடியாவில் உள்ள குறைகள் அல்லது போதாமைகள் குறித்து ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் கொண்டவர் எனில் விக்கிபீடியாவில் பங்கேற்பதன் மூலமே அதை நிறைவேற்ற முடியும். ஏனெனில் விக்கிபீடியா கூட்டு முயற்சியால் உருவாவது, கூட்டு முயற்சியால் மட்டுமே அதை சரி செய்ய முடியும். அந்த விக்கிபீடியாவில் பங்கேற்பது அல்லது விக்கிபீடியாவுடன் இணைந்து செயல்படுவதற்கான அவசியத்தை உணர்த்தும் ஒரு உதாரணத்தை பார்க்கலாம்.

புதிய உலக கலைக்களஞ்சியம் என புரிந்து கொள்ளக்கூடிய நியூ வேர்ல்டு என்சைக்லோபீடியா தளம் தான் அது. இந்த புதிய இணைய களஞ்சியமும் விக்கிபீடியா போலவே தோற்றம் தருவது தான். ஆனால் விக்கிபீடிய போல பரந்து விரிந்தது அல்ல. அதே நேரத்தில் விக்கிபீடியாவை விட நம்பகமானது, ஆதாரபூர்வமானது என்று சொல்லக்கூடியது. விக்கிபீடியா ஒரு தகவல் சுரங்கம். அதில் காணக் கூடிய கூடிய கட்டுரைகளின் வகைகளுக்கும், எண்ணிக்கைக்கும் நிகரில்லை என்றாலும், விக்கிபீடியா தகவல்களின் நம்பகத்தன்மை சில நேரங்களில் பிரச்சனையாகலாம். உறுதிபடுத்தப்படாத விவரங்களும், சரி பார்க்கப்படாத தகவல்களும் விக்கிபீடியா கட்டுரைகளில் இடம்பெற்றிருக்கலாம். இதனால் மொத்த விக்கிபீடியாவையும் சந்தேகிக்க வேண்டியதில்லை. கட்டுரைகளை பயன்படுத்துவதில் கொஞ்சம் கவனமாக இருந்தால் போதும்.

இதற்கு மாறாக, நம்பகமான ஒரு இணைய களஞ்சியமாக அமைந்திருப்பதாக நியூ வேர்ல்டு என்சைக்லோபீடியா தெரிவிக்கிறது. எவரும் தகவல்களை சேர்க்கலாம், திருத்தலாம் என்பதே விக்கிபீடியாவின் பலம் என்றாலும், அதுவே அதன் பலவீனமாக அமைகிறது. இந்த குறையை போக்கும் வகையில், புதிய உலக இணைய களஞ்சியம், விக்கிபீடியா பாணியிலேயே கட்டுரைகளை அளிப்பதோடு, விக்கிபீடியா போல அல்லாமல், இதில் உள்ள கட்டுரைகள் எல்லாம் வல்லுனர் குழுவால் சரி பார்க்கப்பட்டு இறுதி செய்யப்படுகிறது. எனவே இந்த தளத்தில் உள்ள கட்டுரை தகவல்களை நம்பகமானதாக கருதலாம்.

தகவல்களுக்காக மட்டும் அல்லாமல் தகவல்களின் மதிப்பிற்காகவும் செயல்படும் தளம் என புதிய உலக இணைய களஞ்சியம் தெரிவிக்கிறது. கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கட்டுரைகளின் தொகுப்பாக விளங்குகிறது. ஆசிரியர். மாணவர்கள் தயக்கம் இல்லாமல் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கிறது.

இணையத்தின் திறவுமூல தன்மையோடு, பாரம்பரிய தகவல் சரிபார்ப்பின் தன்மையையும் இணைத்து இந்த களஞ்சியம் வழங்குகிறது. அட அப்படியா என வியப்பவர்களுக்காக இரண்டு முக்கிய தகவல்கள். இந்த இணைய களஞ்சியம் 2008 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. அதைவிட முக்கியமான தகவல், இதில் உள்ள கட்டுரைகள் எல்லாமே விக்கிபீடியாவில் இருந்து எடுத்தாளப்படுபவைதான்.

ஆம், விக்கிபீடியாவில் இருந்து கட்டுரைகளை தேர்வு செய்து, வல்லுனர் குழு மூலம் அதில் உள்ள தகவல்கள் சரி பார்க்கப்பட்டு திருத்தி எழுதப்பட்டு இதில் இடம்பெறுகிறது. விக்கி கட்டுரைக்கான நன்றி தெரிவித்தல் மற்றும் மூல கட்டுரைக்கான இணைப்பும் வழங்கப்படுகிறது.

விக்கிபீடியாவில் குறைகள் இருக்கலாம். அந்த குறைகளை களையும் வகையில் இந்த களஞ்சியம் செயல்பட்டு வருகிறது. ஆக, இந்த களஞ்சியம் போட்டி விக்கிபீடியா தான், ஆனால் அதற்கு ஆதாரம் விக்கிபீடியா தான்!

சைபர்சிம்மன்

error: Content is protected !!