ரோபோக்கள் மூலம் அணை கட்டும் சீனா!

திபெத்திய பீட பூமியில், உலகிலேயே முப்பரிமாண அச்சு இயந்திரங்களைக் கொண்டு, ரோபோக்கள் மூலம் சீனா அணை கட்ட உள்ளதாக, சீன அரசு ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
சீனாவில் முப்பரிமாண அச்சியந்திர பயன்பாடு பல துறைகளில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, சீன தனியார் கட்டுமான நிறுவனங்கள் அடுக்கு மாடி கட்டடங்களை, முப்பரிமாண அச்சியந்திரங்கள் வாயிலாக சாதனை வேகத்தில் கட்டி வருகின்றன. சீன முப்பரிமாண அச்சு இயந்திர தொழில்நுட்பம் சிறப்பானது என்பதால் தான், இந்த அணை திட்டம் சாத்தியமாகிறது என சீன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மஞ்சள் நதியின் மீது கட்டப்படும், 590 அடி உயரமுள்ள இந்த அணைக்கு, யாங்யூ நீர்மின் நிலையம் என்று பெயர். அணையின் பிற பகுதிகளும், ரோபோக்களால் கட்டப்படும் என்பது மேலும் ஆச்சரியமான செய்தி தான். அதாவது, புல்டோசர்கள், லாரிகள், தோண்டும் இயந்திரங்கள் என்று சகலத்தையும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளின் உதவியுடன் ரோபோக்களே இயக்கப் போகின்றன.
இதனால் அணையின் கட்டுமானச் செலவு குறைவதோடு, இரண்டே ஆண்டுகளுக்குள் அணை செயல்பட துவங்கிவிடும். இந்த அணையிலிருந்து உற்பத்தியாகும் நீர் மின்சாரம், ஹெனான் மாகாணத்தில் வசிக்கும் 5 கோடி மக்களுக்கு வினியோகிக்கப்படும் என்று கூறப்படுகிறது