அப்புறமென்ன..எரிபொருள் விலையேற்றமோ? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

அப்புறமென்ன..எரிபொருள் விலையேற்றமோ? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

ஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து அதிரடிக் காட்டி வரும் சூழ்நிலையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரிக்கத் துவங்கியுள்ளது. அதன் விளைவாக விலைவாசியும் அதிகரிக்கும் என்று கவலையுடன் எதிர் நோக்கப்படுகிறது. மத்திய அரசு இதுவரை கச்சா எண்ணெய் இறக்குமதி குறித்தும், விலைவாசி உயர்வைக் குறித்தும் ஏதும் தெரிவிக்கவில்லை. பன்னாட்டு அளவில் எண்ணெய் விலை அதிகரிக்கத்துவங்கியுள்ள நிலையில் மத்திய அரசு இறக்குமதி வரியைக் குறைத்தால்தான் விலைவாசி உயர்வும் தடுக்கப்படும். பொது முடக்கம் முடிந்து இயல்பு நிலை திரும்ப இனி இரண்டாண்டுகள் வரையில் ஆகும் என்று நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையின் போது தெரிவித்திருந்தார். இப்போது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் மேலும் பொருளாதார வீழ்ச்சி நிகழும் வாய்ப்புள்ளதாகவே நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக ஏற்றுமதி வாய்ப்புகள் தள்ளிப்போகலாம். உலகளவில் சூழலியல் மாசுபாட்டால் படிம எரிபொருளின் பயன்பாட்டைக் குறைக்க அனைத்து நாடுகளும் முனைந்து வருகின்றன. இப்பின்னணியில் காணும்போது படிம எரிபொருளைத் தவிர்த்து மாற்று எரிபொருளைத் தேர்வு செய்யும் நேரம் வந்து விட்டது என எண்ணுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே இந்த மோசமான சூழ்நிலை ஒரு நல்வாய்ப்பாகவே காணப்படுகிறது.

மாற்று எரிபொருளைத் தேர்வு செய்வதும், உற்பத்தி செய்வதும் காலம் எடுக்கக்கூடிய செயல்பாடுகள். இப்போதைய சிக்கல் விலையுயர்வு. எனவே இதைத் தடுக்க வரிக்குறைப்பு ஒரு வாய்ப்பாக இருக்கிறது. மாற்று வாய்ப்புகளும் உள்ளன. ஒருபுறம் உக்ரைன் மீது போர் தொடுத்தாலும் தனது அன்றாட 11 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை எப்படி விற்பது என்பது குறித்து உத்திகளை வகுத்து வருகிறது. அதன்படி இந்தியாவிடம் 25-30% தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்யை வாங்கிக் கொள்ள சலுகையை அளித்துள்ளது ரஷ்யாவின் அரசு எண்ணெய் நிறுவனம். அப்படி வாங்கினால் அமெரிக்காவின் சினத்திற்கு ஆளாக நேரிடும். ஏனெனில் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யாவிற்கு ஆதரவாக இந்தியா செயல்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் கருதுகிறார்கள். ஐநா வாக்கெடுப்பில் இந்தியா, சீனா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் உட்பட சில நாடுகள் நடுநிலை வகித்தன. இது ரஷ்யாவிற்கு ஆதரவான நிலை என்றே பரவலாக கருதப்படுகிறது. மேலும் இந்த அதிருப்தியை அதிகரிக்கும் விதமாக ரஷ்யாவின் எண்ணெய்யையும் குறைந்த விலையில் வாங்கிக் கொள்ள முன் வந்தால் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் எரிச்சல் அடைவதில் வியப்பில்லை. ஆயினும் அமெரிக்கா இந்தியா ரஷ்யாவுடன் பாராட்டும் நட்பை தடை செய்யும் நோக்கத்தில் கடும் போக்கை மேற்கொள்ளப்போவதில்லை என்றே தெரிகிறது.

அமெரிக்க அதிபர் பைடன் இந்தியா மீது பொருளாதார தடைகளை விதிப்பது தற்கொலை போன்றது என்றே கருதுகிறார் போல! அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறித்தான் எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு தளவாடங்களையும், ஏகே-47 ரைஃப்பிள்களையும் இந்தியா ரஷ்யாவிடமிருந்து வாங்குகிறது. சீனாவை எதிர்க்க இந்தியா மிக அவசியமாகத் தேவைப்படுகிறது என்பதால் அமெரிக்கா கண்டு கொள்ளவில்லை. மேலும் இது இருதரப்பு உறவு சார்ந்தது. அமெரிக்காவிடமிருந்தும் இந்தியா ஆயுதங்களை வாங்கலாம். அமெரிக்க கூட்டாளியான பிரான்ஸ் ரஃபேல் விமானங்களை இந்தியாவிற்கு அளித்துள்ளது. ஆக இந்தியாவிற்கு அமெரிக்க கூட்டாளிகளான, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவிடம் நல்ல நெருக்கமுள்ளது. இந்த நாடுகளில் ஏராளமான இந்தியர்கள் பணி புரிந்தும், கல்வி கற்றும் வருகிறார்கள். வணிகர்களும்,, இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களும் கூட செயல்பட்டு வருகின்றன. எனவே அமெரிக்கா எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செயல்படாது. இது தவிர அமெரிக்காவில் இந்தியர்களின் செல்வாக்கு அதிகரித்தே வருகிறது. பல முன்னணி அமெரிக்க நிறுவனங்களில் இந்திய தலைமைச் செயல் அதிகாரிகள் செல்வாக்கோடு பணி புரிந்து வருகிறார்கள். இப்போது அமெரிக்கா ஒருவேளை இந்தியாவிற்கு சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை விற்க ஓபெக் அமைப்பை வலியுறுத்தலாம். இதன் மூலம் ரஷ்யாவின் எண்ணெய்யை இந்தியா வாங்குவதைத் தடுக்கலாம். இதனால் எண்ணெய் விலை அதிகரிப்பு சிறிதளவேனும் கட்டுப்படலாம்.

இரண்டாவது இந்திய அரசு மாநில அரசுகளை துரித கதியில் க்ரீன் ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும்படி வலியுறுத்தலாம். ஏற்கனவே தமிழகம் உட்பட பல மாநிலங்கள் கதிரவ ஆற்றல் பேருந்துகளை வெளிநாட்டு வங்கி நிதியில் வாங்கியுள்ளன. இப்பேருந்துகள் சில வழக்குகளால் சாலைகளில் இயங்கவில்லை. விரைவில் வழக்குகள் முடிவடைந்து இப்பேருந்துகள் இயக்கப்படலாம். அரசுகளின் முன்னுள்ள மற்றொரு வாய்ப்பு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கழிவு நீரிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் தொழில்நுட்பமாகும். இந்தியாவின் பல நகரங்களில் கழிவு நீரை சுத்தப்படுத்தும் நிலையங்கள் உள்ளன. இவற்றிலிருந்து மாற்று எரிபொருளை பெற முடியும். இதுவும் தூய ஹைட்ரஜன் திட்டம்தான். குறைந்த விலையில் மாற்று எரிபொருள் கிடைத்தால் அரசுப் போக்குவரத்து முதல் ஆட்டோக்கள், சிற்றுந்துகள் மற்றும் இதர வாடகை வாகனங்களில் பயன்படுத்தி பொதுப் போக்குவரத்தை குறைந்த கட்டணத்தில் வழங்க முடியும். இது நிரந்தர ஏற்பாடாகும். எதிர்காலங்களில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் பெரிய பாதிப்புகள் வராது.

இந்தியா நேரடியாகவே எண்ணெய் உற்பத்தி நாடுகளிடம் பேசி விலையில் சலுகைக்கோரலாம். குறிப்பாக நல்ல நட்புறவிலுள்ள சவூதி, ஐக்கிய எமிரேட்ஸ், குவைத் மற்றும் ஈரானுடன் (அமெரிக்காவின் ஆட்சேபங்கள் இருந்தாலும்) சலுகை விலையில் எண்ணெய்யைப் பெற முடியும். ஏனெனில் இப்போது ஏற்பட்டிருப்பது உற்பத்தி சார்ந்த விலையேற்றமில்லை. சந்தையிலிருந்து எண்ணெய் வெளியேற்றம் நிகழ்ந்துள்ளதால் ஏற்பட்ட இடைவெளி விலையேற்றத்தைத் தோற்றுவித்துள்ளது. இதை விநியோகப் பற்றாக்குறை விலையேற்றம் என்பார்கள். போர் நடப்பது ஐரோப்பிய பகுதியில் என்பதால் வளைகுடாவிலிருந்து இந்தியாவிற்கு எண்ணெய் வருவதில் பாதிப்பில்லை. எனவே எண்ணெய் விலையேற்றத்தை இராஜதந்திர முறையில் இந்தியா தடுக்கலாம். இதையெல்லாம் விட சீனா மூலம் ரஷ்யாவின் எண்ணெய்யையும் பெற வாய்ப்புண்டு. ஏனெனில் இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்கா இணைந்த பிரிக்ஸ் அமைப்பு இந்த நாடுகள் இடையே வணிக ரீதியிலான ஒத்துழைப்பை சாத்தியமாக்கியுள்ளது.

இப்போதுள்ள நிச்சயமற்ற சூழ்நிலையில் இந்நாடுகள் (உலக மொத்த உற்பத்தியில் சுமார் 23%தைக் கொண்டவை) தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ளும் உதவிகளும், ஒப்பந்தங்களும் பரஸ்பரம் ஏற்படுத்திக்கொள்ளும்படியானவை. இதை யாரும் ஆட்சேபிக்க இயலாது. இதன் மூலம் ரஷ்ய சலுகை விலை எண்ணெய் இந்தியாவிற்குள் வரவும் வாய்ப்புண்டு. மேலும் வளைகுடா நாடுகள் மற்றும் பிரிக்ஸ் மூலமான எண்ணெய் என இரண்டு வகையிலும் சலுகை விலையில் எண்ணெய்யை இந்தியா பெறலாம். ஆகையால் ’மிஸ்டர் கூல் ஹெட்’டாக பிரதமர் நரேந்திர மோடி காணப்படுகிறாரோ எனக் கருதவும் இடமுண்டு. ஐந்து மாநிலத் தேர்தல்களில் நான்கில் பாஜக ஆட்சியமைக்க போகும் நிலையில் பிரதமரின் உள்நாட்டு செல்வாக்கு மங்காமல் இருப்பது தெரிகிறது. எனவே அவர் அடுத்ததாக உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கை நிலைநிறுத்தும்படியான செயல்பாடுகளை முன்னெடுப்பதைக் காணலாம். அதில் அவர் வென்றால் இந்தியாவிற்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

ரமேஷ் பாபு

error: Content is protected !!