கொரோனா வைரஸ் தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை!- பிரதமர் எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை!- பிரதமர் எச்சரிக்கை!

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிறு அன்று ரேடியோ மூலமாக மான் கி பாத் என்ற நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அவர் பிரதமராக பதவியேற்ற அன்று முதல் தற்போது வரை மன் கி பாத் நிகழ்ச்சியில் நாட்டில் நடைபெறுகின்ற நிகழ்வுகளை பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்வார். அது மட்டுமின்றி நல்லது செய்கின்ற அனைவரையும் தவறாமல் பாராட்டுக்களையும் தெரிவித்துவிடுவார். அந்த வகையில் மோடி இந்நிகழ்ச்சியின் 83வது எபிசோடில் இன்று பேசினார். அப்போது, கொரோனா வைரஸ் தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று எச்சரித்தார். மேலும், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் இயற்கையை பாதுகாப்பதில் தூத்துக்குடி மாவட்ட மக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என பாராட்டு தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்றைய வானொலி நிகழ்ச்சியில் பேசுகையில், “கொரோனா வைரஸ் தொற்று நோய் இன்னும் போகவில்லை என்பதை மறந்துவிடாதீர்கள். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்பது நம்முடைய பொறுப்பு” என்று கூறினார்.

பாகிஸ்தானுக்கு எதிரான 1971ம் ஆண்டு போரில் இந்தியா வெற்றி அடைந்த 50 வது ஆண்டு விழா அடுத்த மாதம் நடைபெறும் என்று பிரதமர் மோடி, ஆயுதப்படைகளுக்கு அஞ்சலி செலுத்தி தனது பேச்சைத் தொடங்கினார். “இரண்டு நாட்களில் டிசம்பர் மாதம் ஆரம்பமாகிறது. நாடு கடற்படை தினம் மற்றும் ஆயுதப்படைகளின் கொடி நாள் கொண்டாடுகிறது. டிசம்பர் 16ம் தேதி, நாடு 1971 போரின் பொன்விழா ஆண்டையும் கொண்டாடுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்தச் சந்தர்ப்பத்தில், நமது ஆயுதப் படைகள், நமது வீரர்களை நான் நினைவுகூர விரும்புகிறேன். குறிப்பாக, இந்த மாவீரர்களைப் பெற்றெடுத்த துணிச்சலான தாய்மார்களை நினைவுகூர விரும்புகிறேன்” என்று பிரதமர் கூறினார்.

பல ஆண்டுகளாக அரசின் பல்வேறு திட்டங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை பிரதமர் மோடி பாராட்டினார். மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரத் திட்டத்தின் கீழ் உயிர்காக்கும் சிகிச்சைகளைப் பெற்ற இரண்டு பயனாளிகளிடம் பேசினார்.

அம்பேத்கரின் நினைவு நாள் டிசம்பர் 6ஆம் தேதி வருவதால் அவருக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

“பாபாசாகேப் தனது முழு வாழ்க்கையையும் நாட்டிற்கும் சமூகத்திற்கும் தனது கடமைகளை நிறைவேற்றுவதற்காக அர்ப்பணித்தவர். நமது அரசியல் சாசனத்தின் அடிப்படை உணர்வு நம் அனைவரிடமிருந்தும் நமது கடமைகளை நிறைவேற்றுவதை எதிர்பார்க்கிறது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது” என்று பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் மோடி, தனது வானொலி நிகழ்ச்சியின் முந்தைய எபிசோட்களில் அவர் பாதுகாப்பு விவகாரங்களைத் தொடர்ந்து இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்று நாட்டு மக்களிடம் வலியுறுத்தினார். “நாம் அதன் சமநிலையை சீர்குலைக்கும்போது அல்லது அதன் தூய்மையை அழிக்கும்போது மட்டுமே இயற்கையால் நாம் அச்சுறுத்தப்படுகிறோம். இயற்கை ஒரு தாயைப் போல நம்மைப் பின்தொடர்கிறது, மேலும் நம் உலகத்தை புதிய வண்ணங்களால் நிரப்புகிறது.” என்று பிரதமர் மோடி கூறினார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, நம்மை சுற்றியுள்ள இயற்கை வளங்களை நாம் பாதுகாப்போம். அதன் பிரதிபலனாக இயற்கை நம்மை பாதுகாக்கும் என்று கூறினார். தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்ட மக்கள் இயற்கையை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். தூத்துக்குடியில் உள்ள சிறிய தீவுகள், தீவுத்திட்டுகள் கடலில் மூழ்காமல் இருக்க பனைமரங்களை மக்கள் நடுகிறார்கள் எனவும் கூறினார். புயல், சூறாவளியிலும் நிமிர்ந்து நின்று நிலத்துக்கு பனைமரங்கள் பாதுகாப்பாக இருக்கின்றன. எனவே, பனை மரங்களை நடுவது பாராட்டத்தக்கது என்று கூறினார்.

நாடெங்கிலும் உள்ள சமூகங்கள் தங்கள் இயற்கை பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் தீவிரமாகப் பணியாற்றிய நிகழ்வுகளை எடுத்துரைத்த பிரதமர், இயற்கையோடு இயைந்து வாழ்வதையும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதையும் ஊக்குவிக்கும் வாழ்க்கை முறைகளை மக்கள் பின்பற்றுவது அவசியம் என்றார்.

ஸ்டார்ட்அப் துறையில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றத்தைப் பாராட்டிய பிரதமர் மோடி, “இது ஸ்டார்ட் அப்களின் சகாப்தம், இன்று ஸ்டார்ட்அப் துறையில் இந்தியா உலகை வழிநடத்தி வருகிறது என்பது உண்மை. ஆண்டுதோறும் ஸ்டார்ட் அப்கள் சாதனை முதலீடுகளைப் பெறுகின்றன. இந்தத் துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. நாட்டின் சிறிய நகரங்களில்கூட ஸ்டார்ட் அப்களின் வரவு அதிகரித்துள்ளது. இப்போதெல்லாம் ‘யூனிகார்ன்’ என்ற வார்த்தை மிகவும் விவாதிக்கப்படுகிறது.” என்று தெரிவித்தார்.

error: Content is protected !!