’சபாபதி’ சந்தானத்தின் படம் அல்ல! – கூடவே நல்ல மெசெஜ் சொல்லும் படமிது!
சந்தானம் நாயகனாக நடித்துள்ள படம் ‘சபாபதி’. நாளை (நவம்பர்) 19ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படத்தில் சந்தானம் திக்கித் திக்கிப் பேசுபவராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரீத்தி வர்மா நடித்துள்ளார். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, முனீஸ்காந்த், மதுரை முத்து, ‘குக் வித் கோமாளி’ புகழ், வம்சி, சாயஜி சிண்டே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கியுள்ளார். சாம்.சி.எஸ். இசையமைத்துள்ளார். பாஸ்கர் ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்ய, லியோ ஜான் படத்தொகுப்பு செய்துள்ளார். ஆர்.கே.எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.ரமேஷ்குமார் தயாரித்துள்ளார். மதுரை அன்புவின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறது. பலத்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ’சபாபதி’ திரைப்படம் நாளை 19ஆம் தேதி திரைக்கு வருவதையொட்டி படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
இந்நிகழ்வில் நாயகன் சந்தானம் பேசியது.
’சபாபதி’ சந்தானத்தின் படம் அல்ல, சபாபதி என்ற கதாபாத்திரத்தின் படம். இதில் எங்கேயும் சந்தானம் என்ற நடிகர் தெரியவே மாட்டார், சபாபதி என்ற கதாபாத்திரம் தான் தெரியும். நான் இதில் திக்கித் திக்கிப் பேசும் குறைபாடுள்ள நபராக நடித்திருக்கிறேன். அந்த குறைபாடு உள்ளவர்கள் எப்படிப்பட்ட சிரமங்களை சந்திக்கிறார்கள் என்பதோடு, அவர்கள் முயற்சித்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பது போன்ற பல நல்ல விஷயங்களை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறோம்.
இந்த கதையை இயக்குநர் என்னிடம் சொன்னபோது, எனது அப்பா கதாபாத்திரத்திற்கான நடிகர் கிடைத்துவிட்டால் நிச்சயம் இந்த படத்தை பண்ணலாம், என்று கூறினேன். அந்த அளவுக்கு அப்பா கதாபாத்திரம் சிறப்பாக இருக்கும். அந்த கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர் சார் மிக சிறப்பாக நடித்துக் கொடுத்திருக்கிறார்.
இயக்குநர் தனது வாழ்க்கையில் பார்த்த கதாபாத்திரங்களை தான் படத்தில் வைத்திருக்கிறார். அதனால், எனது ஒவ்வொரு அசைவையும் அவர் சபாபதியை மனதில் வைத்து தான் செய்திருக்கிறார். திக்கித் திக்கி…பேசுவதைக்கூட மிக நுணுக்கமாக செய்ய வேண்டும், என்று என்னிடம் கூறிய இயக்குநர் அந்த விஷயத்தைக்கூட மிக நேர்த்தியாக செய்திருக்கிறார். எனக்கு மட்டும் அல்ல, ரசிகர்களும் இது ஒரு வித்தியாசமான நல்ல பொழுதுபோக்கு படமாக இருப்பதோடு, நல்ல மெசஜ் சொல்லும் படமாகவும் இருக்கும்.
திக்கித் திக்கி பேசி நடிப்பது சவாலான விஷயம். கமல் சார் உள்ளிட்ட பல நடிகர்கள் இதைவிட பெரிய விஷயங்களைச் செய்திருந்தாலும், எனக்கு திக்கித் திக்கி பேசி நடிப்பது ரொம்ப கஷ்டமாக இருந்தது. குறிப்பாக, டப்பிங் பேசும்போது ரொம்பவே கஷ்டப்பட்டேன். ஒரு கட்டத்தில் நரம்புகள் பாதித்து எனக்கு தலைவலியே வந்துவிட்டது. அப்போதுதான் கமல் சார் போன்றவர்களை நினைத்துக்கொண்டேன். அவர்கள் எப்படியெல்லாம் ஒரு கதாபாத்திரத்துக்காக கஷ்டப்பட்டு இருப்பார்கள் என்று நினைத்துப் பார்த்தேன். டப்பிங் முடிந்ததும் மருத்துவமனையில் சிறிது சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகு தான் தலைவலி சரியானது “என்று சந்தானம் பேசினார்.
இந்தச் சந்திப்பில் “ஜெய் பீம் பட விவகாரம் பற்றி உங்களது கருத்து என்ன..?” என்று கேள்வி சந்தானத்திடம் கேட்கப்பட்டது. அதற்கு சந்தானம் பதிலளித்தபோது, “ஜெய் பீம்’ படமென்று இல்லை, எந்தப் படமாக இருந்தாலும், நாம் ஏதோ ஒரு கருத்தை பேசுகிறோம் என்றால், உதாரணமாக நாம் இந்துக்களை பற்றி பேசுகிறோம் என்றால், எவ்வளவு உயர்த்தியும் பேசலாம்.. அதில் தப்பில்லை. ஆனால், கிறிஸ்துவர்கள் தவறானவர்கள்.. அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்றெல்லாம் பேசக் கூடாது.
யாரையும் உயர்த்தி பேசலாம். ஆனால் அடுத்தவர்களை தாழ்த்தி பேசக் கூடாது. அது தேவையில்லாத விஷயம். அடுத்தவங்களை புண்படுத்துற மாதிரி பேச கூடாது. இதுதான் என் கருத்து.
ஏனென்றால், சினிமா என்பது 2 மணி நேரம் எல்லா மதத்தினரும், ஜாதியினரும் ஒன்றாக அமர்ந்து பார்ப்பது. உங்கள் படத்தில் நீங்கள் யாரையும் உயர்த்தி பேசிக்கொள்ளுங்கள், ஆனால் அடுத்தவர்களை தாழ்த்தி பேசாதீர்கள். அது தேவையில்லாத விஷயம்.
இனி வரும் இளைஞர்கள் சமூதாயத்திற்கு நாம் நல்ல சினிமாவை தர வேண்டும். 2 மணி நேரம் செலவழித்து கவலைகளை மறந்து ஜாதி, மதம் கடந்து திரையரங்கு வருபவர்களுக்கு, அதற்கான விருந்தாகத்தான் திரைப்படம் இருக்க வேண்டும். நான் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். என் பக்கம் எதுவும் தவறு இருந்தால் சொல்லுங்கள்.. திருத்திக் கொள்ள வேண்டியதை திருத்திக் கொள்கிறேன்…” என்றார்.