இந்த உண்மை ‘ஷாக்’ அடிக்கலாம்!… -ரமேஷ் கிருஷ்ணன் பாபு!

இந்த உண்மை ‘ஷாக்’ அடிக்கலாம்!…  -ரமேஷ் கிருஷ்ணன் பாபு!

ந்தியாவின் வளர்ச்சிக்கு இன்றியமைதாதது எரிசக்தி வளம். நமது எரிசக்தி வளங்களில் முதன்மையாக இருப்பது நிலக்கரியாகும். அதற்குப் பிறகே நீர் மின்சாரம் முதல் மறுசுழற்சி வளங்கள் வரை எரிசக்தியை நமக்கு வழங்குகின்றன. சமீபத்தில் காப்-26 மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி வரும் 2070 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை மாசு வெளியிடாத நாடாக மாற்றுவோம் என உறுதிமொழி கொடுத்துள்ளார். இந்தியா உட்பட பல வளரும் நாடுகள் நிலக்கரியை நம்பியே உள்ளன. இதை நீக்கி விட்டு மாற்று எரிசக்தி வளங்களை முழுமையாக பயன்படுத்துவது என்பது உடனடியாக சாத்தியமில்லை. இதற்கு அதிக நிதி தேவைப்படுவதோடு தொழில்நுட்ப வசதிகளையும் நாம் பயன்படுத்த வேண்டும். எனவேதான் பிரதமர் 2070 ஆம் ஆண்டு வரை கால அவகாசம் கேட்டுள்ளார். வளர்ந்த நாடுகள் வரும் 2050 ஆம் ஆண்டிற்குள் மாசற்ற இலக்கை அடைய இலக்கு நிர்ணயித்துள்ளன. அவர்களிடம் தேவையான நிதி, தொழில்நுட்பம் மற்றும் அதற்கான ஆய்வு ஆகியன உள்ளன. அவற்றை அந்நாடுகள் வளரும் நாடுகளுக்கு அளிக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் வேண்டுகோளாக அமைந்தது.

இந்நிலையில் இந்தியா 2070 ஆம் ஆண்டிலாவது தனது இலக்கை அடைவதற்கு ஒரு தடை இருப்பதாக வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் மின் உற்பத்தி, விநியோகம் ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர். இம்மாநிலங்களின் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகங்கள் பெரும்பாலும் நஷ்டத்தில்தான் இயங்குகின்றன. இவற்றின் மொத்த இழப்பு ரூ $ 80 பில்லியன் (சுமார் 6 இலட்சம் கோடி) என்ற ‘ஷாக்’ அடிக்கும் செய்திதான் இப்போது வல்லுநர்களால் முன் வைக்கப்படுகிறது. மேலும், இந்த இழப்பைச் சரிகட்டாமல் இக்கழகங்களால் மாற்று எரிசக்தி வளங்களில் முதலீடு செய்ய இயலாது என்று வல்லுநர்கள் அடுத்த ‘ஷாக்’ செய்தியையும் சொல்கின்றனர். தற்போதுவரை மாநில மின் கழகங்கள் சுமார் $14 பில்லியன்களை (சுமார் 1.30 இலட்சம் கோடி) நிலுவையாக வைத்துள்ளன. இக்கடன்களில் ஐந்தில் ஒரு பங்கை மாற்று மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று சமீபத்திய புள்ளி விவரங்கள் எடுத்துரைக்கின்றன. தற்போதுவரை மாற்று மின் உற்பத்தி மொத்த மின் உற்பத்தியில் சுமார் 12% மட்டுமே. இதற்கான கட்டணத்தை மின் கழங்கங்களால் அளிக்க முடியவில்லை என்பது எதிர்காலத்தில் எப்படி 100% மின்சாரத்தை கொள்முதல் செய்ய முடியும் என்ற கேள்வியை எழுப்புகிறது.

வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் தற்போதைய படிம எரிசக்தி வளங்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்பது இலக்கு. இதை நோக்கி இந்தியாவும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. வரும் 2030 ஆம் ஆண்டில் இந்தியா 2.5 டிரில்லியன் கிலோவாட் எரிசக்தியை நுகரும். இந்தளவு இந்தப் பத்தாண்டின் துவக்கத்தில் இருந்த அளவை விட இரு மடங்காகும். இதனை எட்ட வேண்டுமென்றால் மின் கழகங்கள் இழப்புகள் ஏதுமின்றி தங்களது மின் பகிர்மானத்தை வைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக பகிர்மான இழப்பு சராசரியாக இந்தியா முழுதும் 20% மாகவுள்ளது. இந்த இழப்பு என்பது விவசாயத்திற்கான இலவச மின்சாரம், திருட்டு மின்சாரம் எடுத்தல் போன்ற செயல்பாடுகளால் ஏற்படுகிறது என்பதை பல காலமாக வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதைத் தடுக்க அதிகாரிகளாலும், அரசியல்வாதிகளாலும் இயலவில்லை. வாக்கு வங்கி அரசியலால் அரசியல்வாதிகள் விவசாயத்திற்கு இலவச மின்சாரத்தை விலக்க விரும்புவதில்லை. இலவச விவசாய மின்சாரம் தவறாக இலாபமீட்டும் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதை பலமுறை ஊடகங்களும், அரசின் அறிக்கைகளில் சுட்டிக்காட்டியிருந்தன.

கடந்த முறை பல மாநில மின் கழகங்கள் கடும் நிதி நெருக்கடியை சந்தித்தப் போது மத்திய அரசு உஜ்வல்-நிகாம் எனும் திட்டத்தைக் கொண்டு வந்தது. இதன் மூலம் ஓரளவு நஷ்டம் அடைபட்டது. மேலும் பகிர்மான நஷ்டமும் படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓரளவு நல்ல பலனும் கிடைத்தது. ஆனாலும் பகிர்மான நஷ்டம் தொடர்கதையாகி வருவதால் இத்திட்டத்தால் முழுப் பலனும் கிடைக்கவில்லை. பல மாநிலங்கள் நஷ்டத்தைச் சந்தித்தாலும் குஜராத் மாநிலம் இதிலிருந்து விடுபட்டு இலாபத்தை ஈட்டி வருகிறது. குஜராத்தைத் தவிர உ.பியும், ஹரியாணாவும் இவ்விஷயத்தில் முன்னேறி வருகின்றன. இதில் குறிப்பாக அனைத்து மாநிலங்களும் தங்கள் மின் பகிர்வை மீட்டர் வைத்து அளவீடு செய்கின்றன. இதில் தமிழ்நாடு மட்டும் விதிவிலக்காக மீட்டர் எதுவும் வைத்து அளவீடு செய்வதைத் தவிர்த்தே வருகிறது. இது விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கு இடைஞ்சலாக இருக்கும் என விவசாய சங்கங்களும், அரசியல் கட்சிகளும் கருதுவதால் மீட்டர் அளவீடு செயல்பாட்டில் இல்லை. ஆனாலும் மீட்டர் பொருத்தும் பணி பரவலாக நிகழ்ந்துள்ளதும், அதற்கு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்ததும் நடந்தேறியது. தமிழகத்தில் மின் பகிர்மான இழப்பு 18% மாக இருக்கிறது.

இலவச விவசாய மின்சாரத்திற்கும், மின் பகிர்மான இழப்புக்களும் நிறுத்தப்படாதவரை மாற்று எரிசக்தி வளங்களுக்கு மாறுவது என்பது கடினமான செயல்பாடாக இருக்கும். தற்போது மத்திய அரசு ரூ 3 டிரில்லியன்களை அளித்து மின் பகிர்மான கழகங்களை மீட்டு வருகிறது. இச்செயல்பாடுகள் தொடர்கதையாக இருக்க முடியாது என்பதால் மத்திய, மாநில அரசுகள் முறையான கொள்கை ஒன்றை வகுத்தும், எதிர்காலத்தில் கட்டணம் குறைவான மின்சாரத்தை உற்பத்தி வழிமுறைகளை கண்டறிந்தும் செயல்படுத்த வேண்டும். இந்தியாவில் கதிரொளி ஆற்றலுக்குப் பஞ்சமில்லை. அதே போல காற்றிற்கும் பஞ்சமில்லை. எனவே இவற்றை பயன்படுத்தி மலிவான மின்சாரத்தை உற்பத்திச் செய்யலாம். இது தவிர கதிரொளி ஆற்றலை அனைத்து வீடுகளிலும் அமைக்க பொது மக்களை ஆயத்தமாக்க வேண்டும். பேரளவு உற்பத்தியே கட்டணக் குறைப்பிற்கு வழியேற்படுத்தும். இரண்டாவதாக கிராமங்களில் சமுதாய கதிரொளி திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதன் மூலம் இலகுவாக மின் கட்டணப் பிரச்சினைகளை களையலாம். விவசாயிகளுக்கு கதிரொளி மின் சாரப் பம்புகளை மத்திய அரசு பி எம் – குசும் எனும் திட்டத்தின் கீழ் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு 30 விழுக்காட்டு மானியத்தையும், மாநில அரசு 40 விழுக்காட்டையும் வழங்குகின்றன. மீதமுள்ள 30 விழுக்காட்டு செலவை விவசாயி ஏற்க வேண்டும். இது போன்ற திட்டங்களால் நிலக்கரியை நம்பி மின்சாரம் தயாரிக்க வேண்டாம். மாசையும் உருவாக்க வேண்டாம். மின் கழகங்களை நஷ்டப்படத்தவும் வேண்டாம்.

ரமேஷ் கிருஷ்ணன் பாபு

Related Posts

error: Content is protected !!