இணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்!- ரமேஷ் கிருஷ்ணன் பாபு

இணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்!- ரமேஷ் கிருஷ்ணன் பாபு

தொழில்நுட்ப புரட்சியினால் இன்று செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்கிறோம். இதற்கு உறுதுணையாக இருப்பது இணையதள வசதி எனும் தகவல் தொழில்நுட்ப வசதியாகும். கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக இணையதளங்கள் கோலோச்சி வந்தாலும் கடந்த 1995 ஆம் ஆண்டிற்கு பிறகே உலகம் முழுதும் சாமான்யர்களுக்கு இணையதள வசதி அறிமுகமாகியது. அப்போது நகர்ப்புறங்களில் அதிகம் படித்த அல்லது விரைவான தகவல் பரிமாற்றத்தை விரும்பும் நபர்களே இணையதள சேவையை தேடிச் சென்றனர். இத்தொழில்நுட்ப சேவைத் துவங்கிய சில ஆண்டுகளிலேயே பிரவுசிங் செண்டர்கள் எனப்படும் மையங்களில் ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு ரூபாய் எனக் கட்டணம் விதிக்கப்பட்டு சேவைகள் வழங்கப்பட்டன. அப்போதே இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணைய இதழ்கள் வரத்துவங்கின. ஆயினும் வருவாய் ஆதாரங்கள் போதுமான அளவில் இல்லாததால் அவை குறுகிய காலங்களிலேயே மூடப்பட்டன.

இத்தொழில்நுட்பம் புதிது என்பதால் எதைக் கொண்டு இதன் வெற்றியை அளப்பது எனத் தெரியாமல் இருந்தது. அப்படியே அளந்தாலும் எதைக் கொண்டு விளம்பரக்கட்டணத்தை நிர்ணயிப்பது என்பதும் தெரியாமல் இருந்தது. ஏனெனில் இணையதளத்தைப் பயன்படுத்துவோர் ஆயிரணக்கணக்கில் இருந்தாலும் அச்சுப்பிரதிகள் போல் இத்தனை பேர் வாங்குகிறார்கள், இத்தனைப் பேர் படிக்கிறார்கள் என்று அறுதியிட முடியாது. ஒரேயொரு கணினியில் இருந்து பலரும் படித்தால் எல்லோரையும் ஒரே எண்ணிக்கையாகவே கருத முடியும். வெவ்வேறு கணினியில் ஒருவரே படித்தாலும் அப்போதும் எண்ணிக்கை மாறுமே தவிர நபர் ஒருவர்தான். ஆகையால் எண்ணிக்கை குறித்து உறுதியாக கூற இயலாது. எனவே புதியதாக வருவோர் எண்ணிக்கை அதாவது புதிய இணைய முகவரி (யூ ஆர் எல்) யிலிருந்து வரும் வாசகரை மட்டுமே எண்ணிக்கையில் சேர்க்க வேண்டும். ஒரே முகவரியிலிருந்து வருவோரை அடிக்கடி வருவோராக கருத வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கு யூனிக் விசிட்டர் என்ற பெயருமுண்டு. இதற்கு அடுத்தபடியாக அதிக வாசகர்களை சென்றடையும் வழியாக எ ஈ ஓ எனப்படும் செர்ச் இஞ்சின் ஆப்டிமைசேஷனும் முன்னே வந்தது.பல தளங்கள் சந்தா வசூலித்தன. சில தளங்கள் இலவசம் என்றாலும் நன்கொடைகளை கோரின. பொதுவாக விளம்பரம் என்பது அச்சிதழ்கள் போல கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கப்படவில்லை.

இதற்கு அடுத்த பிரச்சினையாக உருவெடுத்தது இவற்றை எப்படி அங்கீகாரம் செய்வது? அதாவது அரசு வணிக வரித் துறையிலிருந்து, வருமான வரி அலுவலகம் வரை பலத்துறைகளில், இணைய தளங்கள் எப்படி ஊடகமாகும்? அவற்றை எப்படி ஊடகம் என்று கருதுவது என்ற கேள்வி எழுந்தது. இதைத் தொடர்ந்து பல முன்னணி நாளேடுகளும், வார இதழ்களும் கூட இணையதளப் பிரிவுகளை உருவாக்கின. இதனால் டிஜிட்டல் ஊடகம் எனும் புதிய பிரிவு ஒன்று தோன்றியது. அச்சு இதழ்களில் காணப்பட்ட பல குறைபாடுகளுக்கு மாற்றாக இணையதளங்கள் காணப்பட்டதால் இவற்றிற்கு மக்களிடையே வரவேற்பு அதிகம் இருந்தது. இன்று மொபைல் ஃபோன்கள் இணையதளங்களுக்கு பேருதவியாக உள்ளன. அத்துடன் இல்லாமல், யூ டியூப் போன்ற காணொளித் தளங்களுக்கும் மிக ஆதரவாக இருப்பதாலும், வாட்ஸ் அப் போன்ற செய்தி செயலிகளுக்கு ஆதாரமாக இருப்பதாலும் மொபைல் ஃபோன்கள் தவிர்க்க முடியாதவை. இணையதளங்களின் வளர்ச்சிக்கு மொபைல் ஃபோன்களின் பெருக்கமே காரணமாகவுள்ளன.

இந்நிலையில் வருவாய் என்பது சிக்கலான விவகாரமாகி அதனைக் கணக்கிடுவதற்கு சில வடிவங்களையும் ஏற்படுத்தியுள்ளனர். இது தவிர மத்திய, மாநில அரசுகள் தங்களின் விளம்பரங்களை செய்தி இணையதளங்களில் வெளியிடவும் ஒரு ஏற்பாட்டை செய்யவுள்ளன. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. அதாவது அச்சு, தொலைக்காட்சி போன்று அரசின் தகவல்&ஒலிபரப்பு சட்டங்களின் கீழ் வழங்கப்படும் அடையாள அட்டை, சலுகைகள் ஆகியவற்றை இணையதளங்களும் பெறலாம். ஏற்கனவேயுள்ள அச்சு, தொலைக்காட்சி ஊடகங்களின் இணையதளங்களில் பணிபுரிவோர் இச்சலுகைகளைப் பெற்று வருகின்றனர். முன்னாள் இதழியலாளர்கள், எழுத்தாளர்கள், தொழில்நுட்பம் அறிந்த தனி நபர்கள், நிறுவனங்கள் ஆகியவை நடத்தும் தனி இணையதளங்களுக்கு இதுநாள் வரையில் ஏதும் சலுகைகள் இல்லை. இப்போதுதான் அது கிடைத்துள்ளது.

இந்நிலையில் எந்த அடிப்படையில் இணையதளங்களை தேர்வு செய்து சலுகைகளை வழங்குவது என்பதில் குழப்பம் இருக்கிறது. இதற்கு முன்னர் ரூ.20 இலட்சம் முதலீடு செய்து துவங்கப்பட்ட இணையதளங்கள் என்றால்தான் அங்கீகாரம் வழங்கப்பட்டது. தற்போது எந்த அடிப்படையில் அங்கீகாரம் வழங்குவது என்பதில் நிலையான வழிகாட்டு குறிப்புகள் இல்லை. சரி இதைத் தயாரிக்க அதிகாரிகளுக்கு எவ்வளவு கால அவகாசம் ஆகும் என்றால் அதுவும் தெரியவில்லை. மத்திய அரசின் செய்தி நிறுவனம் எந்தவிதமான விதிகளை வகுக்கிறதோ அதையே அடிமாறாமல் பின்பற்ற மாநில செய்தி தொடர்பு துறை முன் வரலாம்.

சரி எந்தவிதமான விதிகள் இணையதளங்களுக்கு சாதகமாக இருக்கும் என்றால், ஒரு நாளைக்கு புதிதாக எத்தனைப் பார்வையாளர்கள் வருகின்றனர், எத்தனைப் பக்கங்களைப் பார்க்கின்றனர், எவ்வளவு நேரம் செலவிடுகின்றனர் போன்றவையே தீர்மானிக்கும். தொடர்ந்து நிலைத்து செயல்பட்டு வரும் செய்தி தளங்களுக்கே முன்னுரிமை தரப்பட வேண்டும். ஆனால் இந்த அணுகுமுறை மீண்டும் பெரிய ஊடகங்களால் நடத்தப்பட்டு வரும் இணையதளங்களையே முன் நிலைப்படுத்தும். இதனால் சொந்த முறையில் சிறிய அளவில் செய்தி இணையதளம் நடத்துவோர்க்கு பலன் ஏதும் இருக்காது. எனவே பெரிய ஊடகங்களின் செய்தி இணையதளங்களை தனியாக கணக்கிடாமல் அவற்றை அந்தந்த ஊடகங்களின் அங்கமாக பார்க்க வேண்டும். அவற்றிற்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் சலுகைகளை மாற்றாமல் தொடர வேண்டும்.

யூ டியூப் சேனல்கள், செய்தி செயலிகள் வேறு வகையானவை. அவற்றை செய்தி இணையதள வகையின் கீழ் கொண்டு வர இயலாது. மேலும் செய்தி இணையதளங்களின் தரநிலையை அளப்பதற்கு சில தனியார் அளவை முறைகளும் (காம் கேர்) ஏற்படுத்தப்பட்டுள்ளன, அவற்றை பெரிய ஊடகங்கள் தங்கள் பயன்பாட்டின் கீழ் வைத்துள்ளன. இவற்றைப் பின்பற்றி அரசு செய்தி இணையதளங்களின் தரநிலையை நிர்ணயிக்கலாமா என்ற கேள்வியும் முன்னே உள்ளது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டால்தான் செய்தி இணையதளங்களுக்கும் அரசு அங்கீகாரம் முறையாக போய் சேரும் நோக்கம் சரியாக பொருந்தி வரும்.

ரமேஷ் கிருஷ்ணன் பாபு

Related Posts

error: Content is protected !!