கல்வியைக் குறித்துக் கவலை கொள்வதற்கு யாருக்கும் அக்கறை இல்லை!

கல்வியைக் குறித்துக் கவலை கொள்வதற்கு யாருக்கும் அக்கறை இல்லை!

வீட்டுக்குப் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்கள் குழந்தைகள், பூட்டப்பட்டிருந்த கடையின் பலகையில் அமர்ந்து அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன், குழந்தைகள் விளையாடுவதைப் பார்ப்பது மகிழ்ச்சி தரக்கூடியது, குறிப்பாக நகர்ப்புறங்களில் தெருக்களில் குழந்தைகள் விளையாடுவது அருகிப் போன கதையாகிவிட்டது, ஆட்டமும், பாட்டமுமாய் ஆடி முடித்த களைப்பில் அருகில் நின்ற ஒரு குழந்தையிடம் “உன் பெயரென்ன?” என்றேன், “நஸ்ரின்” என்று சிரித்தாள்.  “எந்தப் பள்ளியில் படிக்கிறாய்?, பள்ளிகள் திறப்பது குறித்து ஏதேனும் சொல்லி இருக்கிறார்களா?”. “ஆன்லைனில் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது, ஆனால், அப்பாவிடம் மட்டும்தான் ஆண்டிராய்டு மொபைல் இருக்கிறது, அவர் தள்ளு வண்டியில் காய்கறி வியாபாரம் செய்பவர் என்பதால் ஆன்லைன் பரிமாற்றங்களை ஏற்றுக் கொள்ள மொபைல் கட்டாயம் தேவை. என்னால் இப்போதைக்கு ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாது” என்று கொஞ்சம் கவலை தோய்ந்த முகத்தோடு சொல்லிவிட்டு நகர்ந்தாள். பெங்களூரைப் போன்ற ஒரு “காஸ்மோபாலிட்டன்” நகரத்தின் நிலையே இப்படி என்றால், இந்தியாவின் ஊரகப் பகுதிகளில், குக்கிராமங்களில், மலைப்பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் நிலை என்னவென்று நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது, பள்ளிகள் மூடப்பட்டு, கடந்த பத்தாண்டுகளில் கல்விக்கூடங்கள் எப்போதுமில்லாத அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது, அரசுப் பள்ளிகளில் கல்வி பயின்ற மாணவர்கள் மற்றும் கல்வி உரிமை மற்றும் இலவச கட்டாயக் கல்வி சட்டம் 2009 இன் கீழ் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் கல்வி பயின்ற குழந்தைகள் தான் இதில் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

சட்டப்பிரிவு 12(1), தனியார் பள்ளிகளில் பொருளாதார ரீதியில் பின்தங்கி இருக்கும் குழந்தைகளுக்காக 25 % இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது, இந்த ஒதுக்கீடு துவக்கக் கல்வியின் போது அறிமுகப்படுத்தப்படுகிறது, பின்னர் தொடரும் 8 ஆண்டுகளுக்கு இதற்கான செலவை அரசு ஏற்றுக் கொள்கிறது. கல்விக் கூடங்கள் மூடப்பட்டது நேரடியாக மாணவர்களின் பொருளாதார நிலையோடு இணைக்கப்பட்டிருக்கிறது, பணமிருப்பவர்கள், பணமில்லாதவர்கள் என்ற வேறுபாட்டை இது தொடர்ந்து சமூகத்தில் எதிரொலிக்கிறது, பெருந்தொற்று இரண்டாம் அலையின் போது இந்தியாவின் ஏழை மக்கள் சந்தித்த அவலத்தைப் போலவே இதுவும் இப்போது ஏழைகளை வதைக்கிறது, தனியார் மருத்துவமனைகளில் தங்கி தரமான சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டதும், இல்லாதவர்களை அரசு நடுத்தெருவில் விட்டதைப் போலவே தான் கல்வியிலும் இப்போது நிகழ்கிறது.

2020 இல் வல்லரசு என்று முழக்கமிட்ட இந்தியாவின் அரசுப் பள்ளிகளில் 54.2 % மட்டுமே மின்சார இணைப்புப் பெற்றிருக்கிறது, அதைவிடக் கொடுமை 3.9 % பள்ளிகளில் மட்டுமே இயங்கும் நிலையில் கணிப்பொறிகள் இருக்கிறது. சரியான வகுப்பறைகள் இல்லாத இடியும் நிலையில் இருக்கும் பள்ளிகள் 20 %, வாயில் நுழையாத பொருளாதாரக் குறியீடுகளைக் குறித்து வாய் கிழிய பேசும் நம்முடைய நிதி அமைச்சரோ, மாணவர்களிடம் “மன்கீ” பாத்தில் கதையளக்கும் பிரதமரோ இது குறித்து எங்காவது வாய் திறந்திருக்கிறார்களா என்று பார்த்தால்……..!

துரைமார்கள் செவ்வாய்க்கிரகத்தில் கார் ஓட்டுவது, இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் வானத்தில் பாலம் கட்டுவது , மாட்டுக்கறி உண்பவர்களைக் எப்படிக் கொல்வது போன்ற தலை போகிற விஷயங்கள் குறித்தும், பெருநிறுவனங்களுக்கு வரி விலக்குக் கொடுப்பது, பெட்ரோல், டீசல் விலையை ஏற்றி மக்களைக் கூண்டோடு அழிப்பது மற்றும் உத்திரப் பிரதேசத் தேர்தலில் வெற்றி பெற பாகிஸ்தானை எப்படிப் பயன்படுத்துவது குறித்து மட்டுமே பேசுவார்கள். கூலி வேலைக்குப் போகும் தொழிலாளர்களின் குழந்தைகள் பள்ளிக்குப் போய் கல்வி கற்பதில் பெரிதாக ஏதும் சிக்கல்கள் இல்லை, 5-6 கிலோமீட்டர்கள் சராசரியாக நடந்தும் கூட அவர்கள் பக்கத்தில் இருக்கும் பள்ளிகளுக்குப் போய் கல்வி கற்றார்கள், ஆனால், பள்ளிகள் பெருந்தொற்றுக் காலத்தில் மூடப்பட்ட பிறகு மூன்று குழந்தைகள் இருக்கும் ஒரு வீட்டில் ஒரே ஒரு நவீன அலைபேசி இருக்கிறது, ரீச்சார்ஜ் செய்யும்போது கிடைக்கும் இலவச “டாட்டா” ஆன்லைன் வகுப்புகளை எதிர்கொள்ளத் போதுமானது இல்லை.

அப்படி இருந்தாலும், ஒரே நேரத்தில் நடத்தப்படும் மூன்று குழந்தைகளின் ஆன்லைன் வகுப்புகளை ஒரு அலைபேசியில் எப்படி அவர்கள் படிப்பார்கள்? புதிய நவீன அலைபேசிகளை வாங்கும் நிலையில் குடும்பத்தின் பொருளாதாரம் இல்லை, வேலையிழப்பு, வருமானமில்லை என்று இக்கட்டான சூழலில் வாழும் பெரும்பாலான இந்தியக் குடும்பங்களின் நிலை இதுதான். விளைவு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வகுப்புகள் இல்லாமல் கல்வி வாய்ப்புகளை இழந்து எதிர்காலம் குறித்த கேள்விகளோடு இருக்கிறார்கள் குழந்தைகள்.

ஊரடங்கு காலத்தில் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு பல நகர்ப்புறக் குடும்பங்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பிப் போனார்கள், வட மாநில கூலித்தொழிலாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் நிலைதான் மிக மோசம், அவர்கள் திக்கற்றவர்களைப் போல இங்குமங்கும் அலைக்கழிக்கப்பட்டார்கள், பள்ளிகளால் அவர்களைத் தொடர்பு கொள்ள இயலவில்லை. வாய்ப்பிருக்கிற குழந்தைகள் இங்கே ஆப்பிள் மடிக்கணினிகளில் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்வார்கள், வாய்ப்பில்லாதவர்கள் தெருக்களில் விளையாடுவார்கள், இதுதான் இப்போதும் இந்தியாவின் உண்மையான நிலை, இங்கே இன்னும் தெளிவான கல்விக் கொள்கைகள் இல்லை, விளிம்பு நிலையில், பொருளாதார, சமூக ரீதியில் பின்தங்கிய குழந்தைகளின் கல்வியைக் குறித்துக் கவலை கொள்வதற்கு இங்கே யாருக்கும் உண்மையில் அக்கறை இல்லை.

இந்தப் பாகுபாடுகளின் பின்னால் வெறும் பொருளாதாரக் காரணிகள் மட்டுமில்லை, சாதி, மதம், நிலம், நிறம், மொழி என்று பல்வேறு காரணிகள் இருக்கிறது, பணமிருந்தாலும் கல்வியை நுகர முடியாத கிராமங்கள் இங்கே உண்டு, பட்டியலின ஆசிரியர்களைத் தங்கள் குழந்தைகளுக்கு பாடமெடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று சொல்கிற பெற்றோர்கள் இங்கே உண்டு. அந்தக் குழந்தை படிக்கும் பள்ளிக்கு எங்கள் குழந்தைகளை அனுப்ப மாட்டோம் என்று அடம்பிடிக்கிறவர்கள் ஒருபக்கம், இட ஒதுக்கீட்டின் அடிப்படைகளை, விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கைக்கு அது வழங்கும் பாதுகாப்புக்கு எதிராக நாடெங்கும் பரப்பப்பட்டிருக்கும் வன்மம் நிரம்பிய பிரச்சாரம் ஒருபக்கம் என்று இதில் சிக்கிக் கொண்டு இன்னலுக்கு ஆளாகி இருப்பவர்கள் குழந்தைகள் தான்.

இந்தியாவின் கல்வி முறை குறித்தும், அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கும் கல்வி வழங்கும் முறை குறித்தும் சிந்தித்த தலைவர்கள் மிகக் குறைவு, “சமச்சீர் கல்வி” என்ற பெயரில் அதுகுறித்து சிந்தித்து செயலாற்றியவர்களில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் முதன்மையானவர், இந்தியாவிலேயே அப்படி ஒரு சிந்தனையை (எல்லா மாணவர்களுக்குமான சமச்சீர் பாடத்திட்டங்கள்) முன்னெடுத்தவர் அவர்தான். ஆனால், ஏதாவது ஒரு பெயரில் ஊடகங்களும், பார்ப்பனீயமும் அதையெல்லாம் முடக்கி விடும், இந்தியாவின் வளங்களையும், பொருளாதாரத்தையும் முற்றிலுமாக சிதைத்து நாசமாக்கி தனியார் மயமாக்கி இருக்கும் மோடியின் அரசிடம் இருந்து அனைவருக்குமான கல்வி, இலவச கட்டாயக் கல்வி போன்ற விஷயங்களைப் பேசினால் சிறைப்படுத்தப்படும் வாய்ப்புகள் இருப்பதால் அதிகம் பேசாமல் நிறுத்திக் கொள்கிறேன்.

பல்வேறு மாற்றங்களையும், முற்போக்கான சிந்தனைகளையும் முன்னெடுக்கும் தமிழக முதல்வர் குறைந்தபட்சம் இந்த வேறுபாடுகளைக் குறித்தும், அனைத்துக் குழந்தைகளுக்குமான கல்வி உரிமை குறித்தும் கவனம் செலுத்துவார் என்று நம்புவோம். குறிப்பாக, ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளவியலாத குழந்தைகளின் மன உளைச்சலை, அவர்களின் எதிர்காலத்தைக் கட்டமைக்க ஒரு நாகரிக சமூகமாக நாம் ஏதாவது செய்தாக வேண்டும்.

அறிவழகன்

error: Content is protected !!