கலைஞரின் விசிறி நான் – பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை இன்றைய நேர்காணல்!

கலைஞரின் விசிறி நான் – பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை இன்றைய நேர்காணல்!

மிழ்நாடு பாரதிய ஜனதா தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அந்தக் கட்சியின் சார்பாக அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராகப் பொறுப்பேற்றதை அடுத்து கட்சியின் மாநிலத் தலைவர் பதவியில் அண்ணாமலையை நியமித்து பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்

இதை அடுத்து அண்ணாமலை குறித்து நம்ம கட்டிங் கண்ணையா அனுப்பி இருக்கும் செய்திக் குறிப்பு:

அண்ணாமலையின் அப்பா பெயர் குப்புசாமி. கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்திலுள்ள சொக்கம்ப்பட்டி கிராமம்தான் அண்ணாமலையின் பூர்வீகம். இப்போதும் அங்கே 72 ஏக்கர் நிலமிருக்கிறது.கரூர் மாவட்டம், சின்னதாராபுரம், கொட்டாம்பட்டி கிராமம். அப்பா பத்தாவது வரை படித்தவர். அம்மா ஆறாவது வரை படித்தவர். விவசாயக் குடும்பம். சின்ன வயதில் இருந்து கல்வி குறித்து மிகுந்த முயற்சி எடுத்தார்கள். கரூரில் ஏழாவது வகுப்பு வரை படித்தேன். பரமத்தி வேலூரில் ஒரு பள்ளியில் பிளஸ் 2 வரை படித்து முடித்து விட்டு கோவையிலுள்ள பிரபல கல்வி நிறுவனம் ஒன்றில் அண்ணாமலை தனது கல்லூரி படிப்பை முடித்துள்ளார். பின்னர் லக்னோவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் தனது மேல்படிப்பை படித்துள்ளார்.பலருக்கும் கனவாக இருக்கும் ஐ.பி.எஸ் தேர்வை தனது 25 வயதிலேயே எழுதி, ஜெயித்தவர் இந்த அர்ஜுன் அண்ணாமலை.

ஒன்பது வருடங்கள் கர்நாடக மாநிலத்தில் பணி. அங்கு தலைவலியை ஏற்படுத்திய மத மோதல் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தது, சிக்மங்களூரில் குடைச்சல் கொடுத்த 7 முக்கிய நக்சலைட்களை சரணடைய வைத்து அமைதி வாழ்க்கைக்குத் திருப்பியது, ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் பெற்ற காவல் நிலையங்களை உருவாக்கியது, சாமான்யர்கள் அளிக்கும் மனுக்களுக்கும் 7 நிமிடங்களில் எஃப்.ஐ.ஆர் போட வைத்து, ஒரே வாரத்தில் பிரச்னைகளைத் தீர்க்க உத்தரவாதம் ஏற்படுத்தியது என்று அங்கே இவர் சாதித்தவை ஏராளம்.

அவரிடம் ஒரு முறை எப்படி ஐபிஎஸ் ஆனீங்க-ன்னு என்று கட்டிங் கண்ணையா கேட்ட போது, “விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த நான். மொதல்ல, இன்ஜினீயராகணும்னு ஆசைப்பட்டு, 2007-ம் வருடம் கோவையில் இன்ஜினீயரிங் படிப்பை முடிச்சேன். ஆனால், அப்ப்டி படிக்கும் போதே ,`இன்ஜினீயர் ஆகி மத்தவங்கிட்ட அடிமையா இருக்கக் படாதுன்னு படாது; சொந்தமா புதுசா பிசினஸ் பண்ணணும்’னு தோணுச்சு. அதற்கு தோதா எம்.பி.ஏ படிக்க, லக்னோவில் உள்ள இந்திய மேலாண்மைப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தேன். 2008-ல் இருந்து 2010 வரை தங்கிப் படிச்சேன். அப்போது, நான் பார்த்த ரெண்டு சம்பவங்கள், `பிசினஸ் மேன்’ என்கிற என் லட்சியத்தை, `போலீஸ் மேன்’ அப்ப்டீன்னு மாத்திடுச்சு. அது 2008-ம் ஆண்டு மும்பை தாஜ் ஹோட்டல்ல நடந்த தீவிரவாதத் தாக்குதல் ஒன்று, மற்றொன்று உ.பியில 5 ரூபாய்க்கூட கொலை பண்ணும் சம்பவம். இதைப் பார்த்ததும், சிவில் சர்வீஸ்தான் நமக்குத் தேவைனு தோணுச்சு. உடனே, சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகி, எழுதினேன். முதல் முயற்சியிலேயே 2010-ம் ஆண்டு, ஐ.பி.எஸ்ஸாகத் தேர்வானேன். கர்நாடகம் கார்தலாவுல ஏ.எஸ்.பியா போஸ்ட் போட்டாங்க. ஒன்பது வருஷம் திட்டமிட்டு, அந்தத் துறையைக் காதலித்து, பல முன்முயற்சிகளைச் செய்தேன்.

அதனால், அந்த மக்கள் காவல்துறையைத் தங்களுக்கு நெருக்கமான துறையா உணர்ந்தாங்க. ஆனா, கடைசியா பெங்களூர்ல டி.சி.பியா பதவி உயர்வி கிடைத்தது. அதற்கு மேல், அந்த வேலையில் விருப்பமில்லை. மேலை நாடுகளில் ஒவ்வொரு ஐந்து வருடங்களிலும், அடுத்தடுத்த இலக்குகளை வச்சுக்கிட்டு அதற்கு ஏற்றவாறு மாறுவதுதான் இயல்பு. அதற்காக, உயர் பதவிகளைக் கூட அங்குள்ளவர்கள் உதறுவார்கள். அங்கே உயர்பதவிகளை ராஜினாமா செய்வது சாதாரணம். ஆனா, இங்கு நான் ஐ.பி.எஸ் பதவியைக் ராஜினாமா பண்ணியதை பலரும் ஆச்சர்யமா பேசி சர்ச்சையைக் கிளப்பினாங்க… நான் ஓடை போல தொடந்து ஓடிக்கொண்டே இருக்க விரும்பினேன்

இப்போ இருக்கின்ற இளைஞர்கள் எல்லோரும் மாற்றம் வேண்டும் என்று ஆசைப்படறாய்ங்கள். ஆனா, ரிஸ்க் எடுக்க விரும்பலை. காரணம் அவர்களின் வாழ்க்கை சூழல். அவர்களைச் சுற்றி இருக்கக்கூடிய எல்லாமே நெகட்டிவ் விஷயங்களாக இருக்குது. ஆனா நான் இதுபோன்ற இடங்களில் அவர்களைத் தலைமை ஏற்க விரும்பவில்லை. ஆனால் உங்களுடன் கூட இருக்கிறேன், சேர்ந்து போகலாம் என்று வரும்போது என்னைப் பொறுத்தவரை ஏதாவது நடக்கும் என்று நம்புறேன். சிம்பிளா சொல்றதான முட்டாள்கள்தான் உலகத்தை மாற்றுவார்கள் என்று அரிஸ்டாட்டில் சொல்வார். நிறைய பேர் நான் வேலையை விட்டு வெளியே வந்தபோது முட்டாள் என்று சொன்னார்கள். ஆனால் நான் இந்த உலகத்தை மாற்ற முடியும் என்று நம்புகிறேன்.

இப்பேர்ப்பட்டவர்தான் இப்போது தமிழக பாஜக தலைவர் ஆகி இருக்கிறார். தான் கடந்து வந்த பாதைகளில் ஏதேதோ சொன்னாலும் பாஜக அமைப்பில் முக்கிய இடத்தைப் பிடிப்பதற்கான அச்சாரத்தை அண்ணாமலை எப்போதோ போட்டுக் கொண்டே வந்திருக்கிறார் என்பதை பல தரப்பினரும் சுட்டிக் காட்டி வந்தார்கள். அதாவது ஐ பி எஸ் ஆக இருக்கும் போதே தொடங்கிய ‘யூத் திங்கர்ஸ் ஃபோரம் Youth Thinkers Forum’ என்ற அமைப்பு ஆர்.எஸ்.எஸ்-ஸால் மறைமுகமாக நிர்வகிக்கப்படும் அமைப்பாகும். இந்த அமைப்பில் பணியாற்றி, பல கூட்டங்களில் செற்பொழிவு ஆற்றியுள்ளார் அண்ணாமலை. அதேபோல், அண்ணாமலையால் செயல்படுத்தப்படும் ‘நல்லோர் வட்டம்’ ஆர்.எஸ்.எஸ். சார்பு அமைப்புதான். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை வேரூன்ற செய்தவர்களில் முக்கியமானவர் சிவராம் ஜோக்லோக்கர். இவர் மூலம் வந்தவர்தான் ஜெ.பிரபாகர். சிவராமன் தொடங்கிய நல்லோர் வட்டம் அவரைத் தொடர்ந்து பிரபாகர் நடத்திவருகின்றார். அந்த அமைப்பில் தான் அண்ணாமலை செயல்பட்டு வருகிறார். மேலும், ஹரே ராமா ஹரே, கிருஷ்ணா என்ற வலதுசாரி அமைப்பு அக்‌ஷயபாத்ரா என்ற பெயரில் நடத்திவரும் பள்ளிக்கூட மதிய உணவுத் திட்டத்துக்கு அண்ணாமலை நல்லெண்ண தூதுவராகவும் இருந்துள்ளார்.

ஆனால் அவரிடம் நம் கட்டிங் கண்ணையா ஒரு தலைமை, தலைவர் என்பது பற்றி என்ன நினைக்கிறீரகள்? என்று கேட்ட போது, ‘நான் சாதாரண மனிதன். எனக்குத் தனி மனிதனாக மாற்றம் கொண்டுவர வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். இதற்கு என்னுடைய வாழ்க்கையே ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக நான் நினைக்கிறேன். நம்முடைய எண்ணம் உயர்ந்ததாக இருக்கும்போது சாதிக்கலாம் என்பது என்னுடைய எண்ணம்.தலைவர், தலைமை என்பதெல்லாம் பிரிட்டிஷ் காலத்து விஷயங்கள். அவை எல்லாம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றன. உங்களிடம் ஒரு விஷயம் இருக்கிறது என்னிடம் ஒரு விஷயம் இருக்கிறது . நாம் இணைந்து செயல்பட்டு மாற்றத்தைக் கொண்டு வரலாம் என்ற விஷயங்கள் முன்னோக்கி வந்து கொண்டிருக்கின்றன. அனைவரும் வரவேண்டும் சேர்ந்து செயல்படுவோம் என்பதுதான் என்னுடைய வழிமுறை” என்றார்

மேலும் அவரிடம் தமிழக லைவர்களில் உங்களை மிகவும் கவர்ந்த தலைவர்கள் யார்? அப்படீன்னு கேட்ட போது ’எனக்கு காமராஜரைப் பிடிக்கும். அண்ணாவை நிரம்பப் பிடிக்கும். பெரியாரின் வாழ்வியல் முறை மிகவும் பிடிக்கும். கலைஞரின் மிகச்சிறந்த விசிறி நான். அவர் சமூக அக்கறையுடன் அந்தக் காலகட்டத்தில் செயல்பட்டது மிகவும் பிடிக்கும். இப்போது இருக்கின்ற தலைவர்கள் குறைவான அனுபவத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய காலம் கொடுத்தால் அவர்கள் மிகச் சிறந்த தலைவர்களாக வரலாம். அதனால் இப்போது அவர்களைப் பற்றி எதுவும் சொல்ல முடியாது. ஆனால், தமிழ்நாட்டினுடைய பாரம்பரிய, கலாச்சாரத்தைப் பார்த்தால் மிகவும் பிரம்மிப்பு உண்டாகும். மிகச் சிறந்த தலைவர்கள் அதிகம் பேர் உருவாகியிருக்கிறார்கள். ராஜாஜி காலத்திலிருந்து ஜெயலலிதா வரை சிறந்த தலைவர்கள் உருவாகியுள்ளனர்.” என்றெல்லாம் சொல்லி இருந்தார்

அதெல்லாம் சரி.. இப்போ தமிழ்நாடு பாஜக தலைவராகி விட்டீர்களே.. வீட்டில் எப்படி ரியாக்ட் என்று கேட்ட போது , ‘நான் எதைச் செஞ்சாலும் சரியாச் செய்வேன்’ என்ற நம்பிக்கை என்னைவிட என்மீது என் தந்தை குப்புசாமி, தாய் பரமேஸ்வரி, மனைவி அகிலா சுவாமிநாதன் ஆகியோருக்கு உண்டு. அதனால், என்னைத் தண்ணி தெளிச்சு இல்லை, ஆசீர்வாதம் பண்ணியே விட்டிருக்காங்க. எனக்குக் கிடைத்த இயற்கை வாழ்க்கை இப்போ உள்ள குழந்தைகளுக்கு இல்லை. கஷ்டத்தைப் புரியவைக்காம குழந்தைகளை வளர்க்கிறோம். உணவை நாமே உழுது சாப்பிட்ட காலம் போய், இப்போ ஏதேதோ ஆப் மூலமா உணவை ஆர்டர் பண்ணி, வீட்டுக்கு வரவழைச்சு சாப்பிடுறோம். பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கொடுக்கிறதா, நினைக்கிறோம். ஆனால், வாழ்க்கையில் சின்ன தடுமாற்றத்துக்குக்கூட தற்கொலை முயற்சியை மேற்கொள்ளும் இளைஞர்களைக் கண்கூடாகப் பார்க்கிறோம். இதைச் சரிபண்ணணும். நாம் மாறினால் சமூகம் மாறும். நாம் மாறவே இந்த முயற்சி.. அதுக்கு இந்த பொறுப்பு உதவும் என்று நம்புகிறேன்.. நீங்களும் நம்புங்க” என்றார்

நிலவளம் ரெங்கராஜன்

Related Posts

error: Content is protected !!