மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றியமைப்பு -எல். முருகன் இடம் பிடித்த பின்னணி!

மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றியமைப்பு -எல். முருகன் இடம் பிடித்த பின்னணி!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் புதிதாக 43 பேர் இன்று மாலை மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர். ஜனாதிபதி மாளிகையில் புதிய மத்திய அமைச்சர்கள் பதவியேற்பு விழா தொடங்கியது. அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புதிதாக பதவியேற்றவர்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

மத்திய அமைச்சர்களாக இன்று பதவியேற்ற 43 பேர்களின் பெயர் பட்டியல்.

1.நாராயன் தாட்டூ ரானே: மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர். மகாராஷ்டிரா எம்.எல்.ஏவாக 6 முறை பதவி வகித்தவர். அரசியலுக்கு முன் 1971 முதல் 1984 வரை வருமான வரித்துறையில் சேவையாற்றியவர்.

2. சர்பானந்த சோனாவால்: அசாமின் முதல்வராக 2016 முதல் 2021வரை பதவி வகித்தவர். அசாமில் இருந்து இரண்டு முறை எம்.பியாகவும் தேர்வானவர். மத்திய அமைச்சரவையில் விளையாட்டு துறை இணை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

3. விரேந்திர குமார்: மத்திய பிரதேசத்தை சேர்ந்த எம்.பி. மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை இணையமைச்சராக இருந்தவர்.

4. ஜோதிராதித்ய சிந்தியா: முந்தைய காங்கிரஸ் அரசில் மத்திய அமைச்சராக பதவி வகித்தவர். மத்திய பிரதேசத்தில் இருந்து ஐந்து முறை மாநிலங்களவைக்கு தேர்வானவர்.

5. ராமச்சந்திர பிரசாத் சிங்: பீகாரில் இருந்து மாநிலங்களவைக்கு 2வது முறையாக தேர்வானவர். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி.

6. அஸ்வின் வைஷ்ணவ்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி. அரசு – தனியார் பங்களிப்புக்கான உள்கட்டமைப்புகளை உருவாக்கியவர். ஒடிசாவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானவர்.

7. பசுபதி குமார் பராஸ்: பீகார் அரசில் அமைச்சராக பதவி வகித்தவர். பீகாரின் ஹாஜிபூர் தொகுதி எம்.பி.

8. கிரண் ரிஜ்ஜூ: மத்திய அமைச்சரவையில் விளையாட்டுத்துறை இணை அமைச்சராக இருந்தவர்.

9. ராஜ்குமார் சிங்: இந்திய முன்னாள் உள்துறை செயலாளராக இருந்தவர். 2014 முதல் பீகார் அர்ராவுக்கான இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.

10. ஹர்தீப் சிங் புரி: மத்திய அமைச்சரவையில் வீட்டுவசதி துறை இணையமைச்சராக இருந்தவர்.

11.மன்சுக் மாண்டவ்யா: மத்திய அமைச்சரவையில் கப்பல் போக்குவரத்து இணையமைச்சராக இருந்தவர்.

12. பூபேந்தர் யாதவ்: ராஜஸ்தானில் இருந்து 2வது முறையாக மாநிலங்களவைக்கு தேர்வானவர். உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிவர்.

13. பர்ஷோத்தம் ரூபாலா: மத்திய அமைச்சரவையில் வேளாண் துறை இணையமைச்சராக பதவி வகித்தவர்.

14. கிஷன் ரெட்டி:மத்திய அமைச்சரவையில் உள்துறை இணையமைச்சராக பதவி வகித்தவர்.

15. அனுராக் சிங் தாக்கூர்: மத்திய அமைச்சரவையில் நிதித்துறை இணையமைச்சராக பதவி வகித்தவர்.

16. பங்கஜ் சவுத்ரி: உத்தரப் பிரதேசத்தில் இருந்து 6வது முறையாக எம்.பியானவர். கோரக்பூரின் துணை மேயராகவும் பதவி வகித்தவர்.

17. அனுப்பிரியா சிங் படேல்: மத்திய அமைச்சரவையில் சுகாதாரத்துறை இணையமைச்சராக இருந்தவர்.

18. சத்யபால் சிங் பாஹேல்: உத்தரப் பிரதேசத்தில் இருந்து 5 முறை எம்.பி.யானவர். உத்தரப் பிரதேச அரசில் அமைச்சராக பதவி வகித்தவர்.

19. ராஜீவ் சந்திரசேகர்: கர்நாடகாவில் இருந்து 3 ஆவது முறையாக மாநிலங்களவைக்கு தேர்வானவர். நாடாளுமன்ற நிலைக்குழுவின் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.

20. ஷோபா கரண்லாஜே: கர்நாடகாவில் இருந்து 2 ஆவது முறையாக எம்.பி.யானவர். கர்நாடக அரசில் அமைச்சராக பணியாற்றியவர்.

21. பானு பிரதாப் சிங் வர்மா: உத்தரப் பிரதேசத்தில் இருந்து 5 ஆவது முறையாக எம்.பி.யானவர். வழக்கறிஞர், உத்தரப் பிரதேச எம்எல்ஏவாகவும் இருந்தவர்.

22. தர்ஷனா விக்ரம் ஜார்தோஷ்: குஜராத்தில் இருந்து 3 முறை எம்.பி.யாக தேர்வானவர். குஜராத்தின் சமூகநல வாரிய உறுப்பினராகவும் உள்ளார்.

23. மீனாட்சி லேகி: புதுடெல்லியில் இருந்து 2 ஆவது முறையாக எம்.பி.யானவர். உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞர், சமூக சேவகர்

24. அன்னபூர்ணா தேவி: ஜார்க்கண்டில் இருந்து முதல் முறையாக எம்.பி.யானவர். ஜார்க்கண்ட் மற்றும் பீகாரில் 4 முறை எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார்

25. நாராயணசாமி: கர்நாடகாவில் இருந்து முதல் முறையாக எம்.பி.யானவர். கர்நாடக எம்எல்ஏவாக 4 முறை பதவி வகித்துள்ளார்.

26. கவுசல் கிஷோர்: உத்தரப் பிரதேசத்தில் இருந்து 2 ஆவது முறையாக எம்.பி.யானவர். உத்தரப் பிரதேச அரசில் இணை அமைச்சராக பதவி வகித்தவர்.

27. அஜெய் பட்: உத்தராகண்டில் இருந்து முதல் முறையாக எம்.பி.யானவர். உத்தராகண்ட் அரசில் அமைச்சராக பதவி வகித்தவர்.அரசியலுக்கு வருவதற்கு முன் வழக்கறிஞராக இருந்தார்.

28. பி.எல். வர்மா: உத்தரப் பிரதேசத்தில் இருந்து முதல் முறையாக எம்.பி.யானவர்

29. அஜெய் குமார்: உத்தரப் பிரதேசத்தில் இருந்து 2 ஆவது முறையாக எம்.பி.யானவர். கான்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு படித்தவர்

30. சவுஹான் தேவுசின்: குஜராத்தில் இருந்து 2 ஆவது முறையாக எம்.பி.யானவர். குஜராத்தின் எம்எல்ஏவாகவும் 2 முறை பதவி வகித்துள்ளார். அரசியலுக்கு வருவதற்கு முன் அகில இந்திய வானொலியில் பொறியாளராக பணியாற்றியவர்.

31.பகவந்த் கூபா: கர்நாடகாவில் இருந்து 2 ஆவது முறையாக எம்.பி.யானவர்

32. கபில் மோரேஷ்வர் பாட்டீல்: மகாராஷ்டிராவில் இருந்து 2 ஆவது முறையாக எம்.பி.யானவர். கிராம பஞ்சாயத்துகளில் தலைவராக பதவி வகித்தவர்

33. பிரதிமா பவுமிக்: திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர். முதல்முறையாக எம்.பி. எளிய விவசாய குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வந்தவர். திரிபுரா பல்கலைக்கழகத்தில் உயிரி அறிவியல் பட்டப்படிப்பு படித்தவர்.

34. டாக்டர் சுபாஷ் சர்கார்: மேற்குவங்கத்தில் இருந்து முதல் முறையாக எம்.பி.யானவர். மேற்குவங்க எய்ம்ஸ் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர்.

35. டாக்டர். பகவத் கிஷண்ராவ் கராத்: மகாராஷ்டிராவில் இருந்து முதல் முறையாக மாநிலங்களவை எம்.பி.யானவர். அவுரங்கபாத் மாநகராட்சியில் மேயராக பதவி வகித்துள்ளார். குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர், பொது மருத்துவம் படித்தவர்.

36. டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்: மணிப்பூர் மாநிலத்தில் இருந்து முதல் முறையாக எம்.பி.யானவர். அரசியலில் நுழைவதற்கு முன் புவியியல் பேராசிரியராக பணியாற்றியவர்.

37. டாக்டர் பாரதி பிரவின் பவார்: மகாராஷ்டிராவில் இருந்து முதல் முறையாக எம்.பி.யானவர். அரசியலில் நுழைவதற்கு முன் மருத்துவராக பணியாற்றியவர்.

38. பிஷ்வேஸ்வர் துடு: ஒடிஷாவில் இருந்து முதல்முறையாக எம்.பி.யானவர். நீர்வளத்துறையில் மூத்த பொறியாளராக பணியாற்றியவர்.

39. சாந்தனு தாக்கூர்: மேற்குவங்கத்தில் இருந்து முதல் முறையாக எம்.பி.யானவர். மத்துவா சமூகத்தின் மூத்த தலைவர்

40.டாக்டர். முன்ஜபரா மகேந்திரபாய்: குஜராத்தில் இருந்து முதல் முறையாக எம்.பி.யானவர்.அரசியலில் நுழைவதற்கு முன் இருதய சிகிச்சை நிபுணராக பணியாற்றியவர். குஜராத்தில் ரூ.2 டாக்டராக மக்களுக்கு சேவையாற்றியவர்.

41. ஜான் பர்லா: மேற்குவங்கத்தில் இருந்து முதல்முறையாக எம்.பி.யானவர். தேயிலை தோட்ட பணியாளர்களின் உரிமைக்காக உழைத்தவர். எளிய குடும்பத்தில் பிறந்து தேயிலை தோட்ட தொழிலாளியாக வாழ்வை தொடங்கியவர்.

42. எல்.முருகன்: சென்னை உயர் நீதிமன்றத்தில் 15 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றியவர். தேசிய பட்டியலின ஆணையத்தின் துணைத் தலைவராக பதவி வகித்தவர். தமிழ்நாடு பாரதிய ஜனதாவின் மாநிலத் தலைவராகவும் பதவி வகித்தவர்.

43. நிஷித் பிராமணிக்: மேற்குவங்கத்தின் கூச் பீஹார் தொகுதி எம்.பி. ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர்.

எல். முருகன் – சில குறிப்புகள் By கட்டிங் கண்ணையா

1977ஆம் ஆண்டு பிறந்த எல்.முருகன், நாமக்கல் மாவட்டம் பரமத்தியை அடுத்த கோனூரைச் சேர்ந்தவர். தாய்மொழியாக தெலுங்கு பேசும் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர். சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில், இளங்கலை பட்டத்தையும் அறிவுசார் சொத்துரிமை குறித்து பட்டயப் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் சட்ட முதுகலை பட்டமும் பெற்றுள்ள சட்டக்கல்லூரி மாணவரான எல்.முருகன் சுமார் 15 வருசங்களுக்கும் மேலா வக்கீலாக பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்பேர்ப்பட்டவர் இப்போ மத்திய அமைச்சரவையில் இடம் பிடிச்சதை அடுத்து நம்ம ஆந்தை ரிப்போர்ட்டர் டாட் காம்- மிற்கு அனுப்பி இருக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் இதோ:

வக்கீலா இருந்தாலும் 1997-ல் தனது கல்லூரி பருவத்தின் போதே இந்துத்துவா சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) மாணவர் பிரிவின் உறுப்பினராக இணைஞ்சார். அதன் பிறகு, தேசிய தாழ்த்தப்பட்டோர் (எஸ்சி, எஸ்டி) ஆணைய துணைத் தலைவராக இருந்தார்.

தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் சரளமாகப் பேசக்கூடிய முருகன் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மாணவர் அணியில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டதால் ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர்கள் முருகனின் பெயரை பாஜக தலைமைக்குச் சிபாரிசு செஞ்சாய்ங்க. அதன் பேரில், பாஜக சார்பாகப் போட்டியிட முருகனுக்கு தலைமை வாய்ப்பளித்தது. முதன் முறையாக 2011 சட்டமன்றத் தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் வேட்பாளராகக் களமிறங்கிய முருகன் வெற்றி வாய்ப்பை இழந்தார். அந்த தேர்தலில் எல்.முருகனுக்கு 1730 வாக்குகள் மட்டுமே கிடைச்சுது

அதுக்கு பிறகு, கேரள மாநில பொறுப்பாளராக சில காலம் பதவி வகிச்சா. அதே போல், அம்பேத்கர் அறக்கட்டளையின் உறுப்பினராகவும் முருகன் இருந்தார். இந் நிலையில், டெல்லியில் முகாமிட்டு பாஜக தலைவர்களைச் சந்திச்சு பழகிய விதம் அவரை தமிழகத்தின் செல்லப் பிள்ளையா உருவகப்படுத்திச்சு. இச்சுழழலில்தான் ஒட்டு மொத்த தமிழக அரசியலே எதிரபாரா வகையில் எல்.முருகனைத் தமிழ்நாடு பாஜக தலைவராக அதிரடியாக அறிவிச்சுது.

கிட்டத்தட்ட 20 வருசமா டமில்நாடு பாலிடிக்கில் ஆடம் ஆடிக் கொண்டிருக்கும் முருகன் தனக்கு வழங்கப்பட்ட மாநில தலைவர் பதவியை மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதியதுடன் மட்டுமல்லாமல் அதற்கான பொறுப்புடனும் கட்சியைத் தமிழகத்தில் வழிநடத்தினார்.

குறிப்பா கருப்பர் கூட்டத்திற்கு எதிராக வேல் யாத்திரை நடத்திச்சு, கூடவே அதிமுக, திமுக கட்சிகளுக்கு இணையாக பாஜக சார்பாகப் பேரணி நடத்தியது, நிகழ்ச்சிகளை நடத்தியது என எல்.முருகன், கட்சியோடு தன்னையும் மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தார்.இதை எல்லாம் தாண்டி இம்புட்டு வருசமா தமிழகத்தில் காலூன்ற முடியாமல் தவிச்சுக் கிட்டிருந்த பாஜகவுக்கு 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 4 பாஜக எம் எல் ஏ-க்களை பரிசாக அளித்து தாமரையைத் தமிழகத்தின் தொகுதிகளுக்குள் மலர வைத்ததில் முருகனுக்கும் பெரும் பங்குண்டு.

இத்தனைக்கும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் முருகன் போட்டியிட்டு தோல்வியடைய நேரிட்டாலும், வெகு காலத்துக்குப் பிறகு சட்டசபைக்குள் பாஜக காலடி எடுத்து வைத்துள்ளது பாஜக தலைமையை வெகுவாகக் கவர்ந்துச்சு. இச்சூழலில்தான் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பா பேச்சு அடிபட்டதிலிருந்தே டெல்லியில் முகாமிடத் துவங்கிய எல்.முருகன், பாஜக சீனியர் தலைவர்களைச் சந்திச்சு தனது சாதனைகளைப் பட்டியலிட்டிருக்கிறார்.

அதே போல், தமிழக மூத்த தலைவர்களும் எல்.முருகனுக்கு எதிரான நிலைப்பாட்டில் இல்லை என்பதால் தமிழகத்தின் சார்பில் மத்திய அமைச்சரவையில் முருகனுக்கு வாய்ப்பு கிடைச்சிருக்குது

நிலவளம் ரெங்கராஜன்

Related Posts

error: Content is protected !!