வருகிறது புதிய காலனியம்! -ரமேஷ் கிருஷ்ணன் பாபு!

சீனாவின் வல்லாதிக்க விருப்பங்களை பல காலமாக பல பன்னாட்டு அரசியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். அவற்றை உண்மையாக்கும்படி இப்போது ஒரு நிகழ்வு நடந்தேறியுள்ளது. இலங்கையின் ஹம்பந்தோட்டா துறைமுகமும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளும் சீனாவின் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அங்குச் செல்வதற்கு சிறப்பு அனுமதி (விசா) யும் தேவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் ஹம்பந்தோட்டா துறைமுகம் சீனாவின் வல்லாதிக்க விரிவாக்கக் கொள்கைக்காகவே ஏற்படுத்தப்பட்டது என்பதும் பலகாலமாக உலாவி வரும் செய்தி. இந்தியாவிற்கு எதிராக ராணுவ ரீதியில் சீனா பல நாடுகளில் துறைமுகங்களை ஏற்படுத்தி வருகிறது. இதில் பாகிஸ்தானின் கவ்தார் துறைமுகமும் ஒன்று. இப்போது அப்பகுதி சீனாவின் ஒரு பகுதியாக மாறிய நிலையில் இந்தியாவிற்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் சீனாவுடன் நேரடிப் போருக்கே நாம் தயாராக முடியும். ஏனெனில் அப்பகுதி இலங்கையின் பகுதியல்ல. இலங்கையுடன் நாம் போர் தொடுக்க இயலாது. இனி இந்தியா மீதான அழுத்தங்களை சீனா வசதியாகச் செய்யலாம். இப்படி ஓர் இறையாண்மை உள்ள நாடு தனது இடத்தைப் பிறர்க்கு சிறப்புப் பிரதேசமாக வழங்குவது ஏற்புடையதா? இக்கேள்வியே இப்போது பன்னாட்டு அளவில் எழுந்துள்ளது.
சீனாவிடம் ஏராளமான செல்வம் குவிந்துள்ளதாகவும் அதைக் கொண்டு அவர்களால் அமெரிக்காவையே கேள்வி கேட்க முடியும் என்றும் நம்பப்படுகிறது. இருக்கலாம். ஆனால் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே எல்லைப்புறப் பிரச்சினையைத்தவிர வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகளில் இதை சீனாவே ஒப்புக்கொண்டுள்ளது. இந்நிலையில் திபெத்தை தனி நாடாக இந்தியா அங்கீகரித்துள்ளதும், என்றேனும் அது சீனாவின் ஆதிக்கத்திலிருந்து விடுபடும் என்றும் இந்தியா எதிர்பார்க்கிறது. இப்படி சீனா இந்தியாவைச் சுற்றி மாலை போடுவது போல் இராணுவத் துறைமுகங்களை அமைப்பதற்கு ஒரே பதிலடி திபெத்தை அதன் பிடியிலிருந்து விடுவிப்பதே. அதையும் போரின்றி ராஜதந்திர முறையில் செய்ய வேண்டும். அதற்கு உலக நாடுகள் ஒப்புக்கொள்ள வேண்டும். எப்படி ஒப்புக்கொள்வார்கள்?
சீனா உலகம் முழுதும் பல நாடுகளுக்கு கடும் வட்டியில் கடன் கொடுத்துள்ளது. அக்கடனுக்கு இணையாக எதையேனும் எதிர்பார்க்கிறது. அதாவது கடனையோ, வட்டியையோ அந்நாடு திரும்ப வழங்காவிட்டால் அதன் புவியியல் பரப்பில் ஒரு பகுதியை தன்னுடையதாக எழுதி வாங்கிக் கொள்ளும் திட்டத்தோடுதான் கடன் கொடுக்கிறது. ஐரோப்பிய நாடான மாண்டேநெக்ரோவுக்கும் இதே நெருக்கடி. இந்தியாவின் அருகிலுள்ள மாலத்தீவில் அரசியல் நிலையற்றத்தன்மையை உருவாக்கி அந்நாட்டிற்கு ஏராளமான திட்ட உதவிகளை சீனா செய்துள்ளது. அதற்குப் பதிலாக புவியியல் பரப்பை கேட்டு வருகிறது. இப்போது மாலத்தீவில் இந்திய ஆதரவு அதிபர் ஆள்கிறார். அதனால் அவ்வளவு அழுத்தம் கிடையாது. ஆனால் சீனா இந்த விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லலாம். இல்லையேல் தனது படைகளை அனுப்பி மாலத்தீவின் தனது திட்டம் அடங்கியப் பகுதியைக் கைப்பற்றிக் கொள்ளலாம்.
சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னால் இலங்கையின் தமிழ்ப்போராளிக்குழு மாலத்தீவில் புகுந்து துப்பாக்கி முனையில் அதைக் கைப்பற்றி அதிபரை சிறை வைத்தது. இந்தியா தலையிட்டு அவர்களை அங்கிருந்து விரட்டியது. இதனால் மாலத்தீவு இந்தியாவுடன் நட்புடன் இருந்தது. சீனாவின் தலையீட்டினால் பாதை மாறிப்போய் கடன் வலையில் வீழ்ந்துள்ளது. மாலத்தீவின் எதிர்காலம் இந்தியாவின் கைகளிலுள்ளது, கடனை இந்தியா கொடுக்குமா? சாத்தியமா? இதே கணக்கு இலங்கைக்கும் பொருந்துமே?
உலகில் பல நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் உட்பட சீனாவின் இந்தக் கடன் உறவு மூலம் சிக்கலைச் சந்திக்கின்றன. இதை கடன் காலனியாதிக்கம் என்றுதான் வர்ணிக்க இயலும். இதில் உலகின் 150 நாடுகள் வரை தொடர்புக்கொண்டுள்ளதாகவும், உலகின் மொத்த தேசிய வருமானத்தி 6% வரை உலக நாடுகள் சீனாவிற்கு கடனாகத் திருப்பித் தர வேண்டும் என்றும் சொல்கின்றனர். ஏன் அமெரிக்காவே சீனாவிடம் தனது அரசுக் கடன் பத்திரங்களை சுமார் $ 1 இலட்சம் கோடி அளவிற்கு கொடுத்துள்ளது. இக்கடன் பத்திரங்கள் சீன மைய வங்கியிடம் உள்ளன. அமெரிக்க சீனாவை அதிகம் பகைத்துக்கொள்ள இயலாதது அதனால்தான் என்கின்றனர். இக்கடன் பத்திரங்களை சீனா வைத்துக்கொண்டு என்னச் செய்யும் என்று தெரியாது. யாரிடம் விற்கும் என்றும் தெரியாது. எனவே அமெரிக்க அலட்டிக்கொள்வதில்லை. மேலும் அமெரிக்கப் பொருளாதாரம் சீனாவின் பொருளாதாரத்தை விடப் பெரியது. அமெரிக்க மொத்த தேசிய வருமானம் சுமார் $ 21 இலட்சம் கோடி, சீனாவினுடையது $ 14 இலட்சம் கோடி. இந்தியாவினுடையது $ 3 இலட்சம் கோடியை நெருங்குகிறது. இதை $ 5 இலட்சம் கோடியாக உயர்த்தவே மோடி அரசு விரும்புகிறது.
இப்படி சீனா நடந்து கொள்வது வியப்பிற்குரியதல்ல. ஏனெனில் அது 1962 ஆம் ஆண்டில் இந்தியா மீது படை எடுத்ததோ அப்போதே அதன் சுயரூபம் வெளிப்பட்டு விட்டது. திபெத் அமைதியான நாடு. சொல்லப்போனால் பௌத்தத்தையும், அமைதியையும் கடைபிடித்த நாடு. அதை தனது காலனியாதிக்க விரிவாக்கத்திற்கு விழுங்கியது சீனா. பின்னர் தைவானைக் குறி வைத்தது. மேலை நாடுகளின் ஆதரவால் தைவான் பிழைத்தது. நீண்டகாலப் போராட்டத்திற்குப் பிறகு உள்ளூர் மக்களின் விருப்பமின்மையையும் மீறி பிரிட்டன் ஹாங்காங்கை சீனாவிடம் ஒப்படைத்தது. இன்று ஹாங்காங்கில் அரசியல் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மியான்மார் (பர்மா) நாட்டில் இராணுவத்தை ஜனநாயக் உரிமைகளுக்கு எதிராக செயல்பட சீனா ஆதரவு வழங்குகிறது. அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பதவியேற்க அனுமதிக்கப்படவில்லை.
இதே போல தென் கிழக்கு ஆசிய நாடுகள், ஜப்பான், கொரியா (வட கொரியாவின் அதிபர் சீனாவின் பொம்மை என்பது தெரிந்த ரகசியம்) என பல நாடுகள் சீனாவின் சர்வதேச விருப்பங்களினால் எரிச்சலுற்று வருகின்றனர். அதே சமயம் சீனாவின் மலிவான உற்பத்தி முறைகளால் அந்நாடுகள் பலன் பெருகின்றன. சமீபத்தில் இந்தியா தவிர பெரியதொரு வர்த்தக் அமைப்பை சீனா இந்நாடுகள், ஆசிய நாடுகளுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ளது. ஏசியான் எனும் அமைப்பில் சீனா உட்பட பல தென் கிழக்கு ஆசிய நாடுகள் உறுப்பினர்கள். இந்த ஆசியான் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்தியாவும் பிரிக்ஸ் கூட்டமைப்பில் சீனா, ரஷ்யா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா கூட்டணியில் ஓர் அங்கம். உலகின் இரண்டாவது பெரிய வளர்ச்சித் திட்டங்களுக்கு கடன் வழங்கும் வங்கியை பிரிக்ஸ் உருவாக்கியுள்ளது. இது உலக வங்கிக்கு அடுத்த நிலையிலுள்ளது. எனவே சீனாவின் ஆரோக்கியமான வர்த்தக நடவடிக்கைகளை உலக நாடுகள் வரவேற்கின்றன. இந்தியாவும் கூட. ஆனால் சீனாவோ இதெல்லாம் தன்னை மேலாதிக்க சக்தியாக நினைத்துக் கொண்டு எல்லோரும் பணிகிறார்கள் என்று தவறாக எடைபோடுகிறது.
மோடி பிரதமரானப் பிறகு சீனாவிடம் இணக்கத்தை ஏற்படுத்த விரும்பினார். ஆனால் அதை சீனாதான் நிராகரித்தது. எல்லையில் பதற்றத்தை சீனாவே ஏற்படுத்துகிறது. சீன-இந்தியப் போர் என்பது அழிவுதான். உலகின் முதல் இரண்டு பெரிய மக்கள் தொகைக் கொண்ட, அண்டை நாடுகளின் போர் மனித இனத்தின் அழிவாக அமையலாம். சீனா இந்தியாவுடன் போருக்குத் தயார் என்றால் அது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுடனும் போருக்குத் தயார் என்பதாகத்தான் பொருள்படும். எனினும் சீனாவிற்குள் நடக்கும் அரசியல் நமக்குத் தெரியாது. ஸீ ஜின் பிங்கின் ஆயுட்கால அதிபர் பதவி எதனால் ஏற்பட்டது என்பது இதுவரைத் தெரியாது. சீனாவின் வல்லரசு ஆசை எந்த அரசியல் காரணத்தினால் இயக்கப்படுகிறது என்பதும் தெரியாது. இந்நிலையில் இப்படி கடன் கொடுத்து காலனியாதிக்க விரிவாக்கத்தைத் தொடர்ந்து சீனா செய்யும். ஆயினும் அதன் இறுதி உலகப்போராக முடியுமா என்பதே இன்றுள்ளக் கேள்வி.
ரமேஷ் பாபு