மோடி பங்கேற்கும் இணையவழி நிகழ்ச்சி: ரஜினிக்கு அழைப்பு!
நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் புதிய கட்சி தொடங்கவுள்ள நிலையில், பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வானவில் பண்பாட்டு மையம் சார்பில் ‘பன்னாட்டு பாரதி திருவிழா- 2020’ இணையவழியில் (யூ-டியூப்) டிச.11ம் தேதி முதல் டிச.20-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.பாரதியார் பிறந்த நாளான டிச.11-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு பாரதி திருவிழா தொடங்கவுள்ளது. அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு இந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் பிரதமா் மோடி பங்கேற்று, பாரதி ஆய்வறிஞா் சீனி.விசுவநாதனுக்கு பாரதி விருது வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
அதைத்தொடா்ந்து, மாலை 6 மணிக்கு இசைக்கவி ரமணன் நடிக்கும் பாரதி யாா்? நிகழ்ச்சி நடைபெறும். இதைத் தொடா்ந்து டிச.12-ம் தேதி முதல் டிச.20-ம் தேதி வரை அனைத்துலக விநாடி வினா போட்டி, பாரதி பல்சுவை நிகழ்ச்சி, யோகாவில் பாரதி, என்றென்றும் பாரதி, பத்திரிகையாளா் பாரதி, பாரதியின் ஆன்மிகச் சுடா், பாரதியின் புதுமைப் பெண்- மரபும், புரட்சியும் என்ற பல்வேறு தலைப்புகளில் நாடக, நாட்டிய, சிறப்புச் சொற்பொழிவுகள், நூல் வெளியீடு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.இந்த நிகழ்ச்சிகளில் பொற்றாமரை அமைப்பின் தலைவா் இல.கணேசன், சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.நடராஜ், உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.
இந்த நிலையில், வானவில் பண்பாட்டு மையம் நடத்தும் விழாவில் ரஜினி பங்கேற்க தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் ரஜினியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். இன்று காலை சென்னை போயஸ் கார்டனில் ரஜினியை சந்தித்த தொழிலதிபர் நல்லி குப்புசாமி, மரியாதை நிமித்தமாக நேரில் பன்னாட்டு பாரதி திருவிழாவில் பங்கேற்க அழைத்துள்ளார்.