பெண்ணையாறு & மேகதாது அணைகள் கட்ட அனுமதி கொடுக்காதீங்க!- எடப்பாடி கோரிக்கை!

பெண்ணையாறு & மேகதாது அணைகள் கட்ட அனுமதி கொடுக்காதீங்க!- எடப்பாடி கோரிக்கை!

தமிழ்நாட்டின் ஜீவாதாரம் காவிரி. விவசாயத்துக்கு மட்டுமல்ல, குடிநீருக்கும், காவிரி தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே நமாமி கங்கை திட்டத்தை விசேஷ திட்டமாக மத்திய அரசு செயல்படுத்தி வருவதைப் போல, ‘நடந்தாய் வாழி காவேரி’ திட்டத்தையும் செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும். இதை தேசிய சிறப்பு திட்டமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்திடம் இன்று வலியுறுத்தினார்.

தமிழகத்தில் நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதன் சாத்தியக் கூறுகள் குறித்து மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துடன் முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி வாயிலாக இன்று ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலகத்தில் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்பாசன திட்டங்கள் மற்றும் குடிநீர் திட்டங்கள் குறித்து கஜேந்திர சிங் செகாவத்துடன் அவர் கலந்துரையாடினார்.மேலும், தமிழகத்தில் நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதன் சாத்தியக் கூறுகள், காவிரி –- கோதாவரி நதிகளை இணைப்பது தொடர்பாகவும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தலைமைச் செயலாளர் க. சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டின் ஜீவாதாரமாக இருந்து வரும் காவிரி, மாநிலத்தின் விவசாயம், குடிநீர் தேவைக்கும் ஆதாரமாக இருந்து வருகிறது. ஆகவே நமாமி கங்கை திட்டத்தை சிறப்பு திட்டமாக மத்திய அரசு ஏற்றிருப்பதைப் போல நடந்தாய் வாழி காவிரி திட்டத்தையும் தேசிய திட்டமாக ஏற்று செயல்படுத்த வேண்டும். அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும்.

நமாமி கங்கை திட்டத்தைப் போலவே, அதே வழியில் அமுல் நடத்துவதற்கு காவிரி ஆறு சீரமைப்பு மாசு கேட்டை அடியோடு நீக்கி புனர்வாழ்வு திட்டம் ஒன்றை நான் ஏற்கனவே அறிவித்திருக்கிறேன். ரூபாய் 10,700 கோடி செலவிலான இத்திட்டத்துக்கு ‘வாப்காஸ்’ அமைப்பு திட்ட அறிக்கையை தயாரித்திருக்கிறது என்பதை மத்திய அமைச்சரிடம் முதல்வர் எடுத்துக் கூறினார்.

உலக வங்கி ஆதரவில் அடல் புஜால் யோஜனா திட்டத்தை 7 மாநிலங்களில் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு தண்ணீர் பற்றாக்குறை மாநிலம் என்ற நிலையிலும் இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு கொண்டு வரப்படவில்லை. ஆகவே நடப்பு ஆண்டில் இத்திட்டத்தில் தமிழ்நாடு சேர்க்கப்பட வேண்டும் என்று முதல்வர் கேட்டுக் கொண்டார்.
கோதாவரி காவிரி ஆறு இணைப்பு, காவிரி – குண்டாறு இணைப்பு குறித்தும் மத்திய அமைச்சரிடம் முதல்வர் விவரித்தார்.

ஒரு அணை எந்த மாநிலத்தில் இருக்கிறதோ, அந்த மாநிலத்திடமே அணையை நிர்வகிக்கும் முழு பொறுப்பும் ஒப்படைக்கப்பட வேண்டும். இந்நிலையில் அணை பாதுகாப்பு மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக் கொண்டார்.

பெண்ணையாற்றின் குறுக்கே அணை கட்டவும் அனுமதி அளிக்க கூடாது, இதேபோல காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டுவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார்.

கோதாவரி – காவிரி ஆறு இணைப்பு திட்டத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு 200 டி.எம்.சி. தண்ணீர் தரப்பட வேண்டும் என்று பிரதமருக்கு கடிதங்கள் எழுதியிருப்பதையும் இன்றைய கூட்டத்தில் மத்திய அமைச்சரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுத்துக் கூறினார்.

ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் மே மாதத்தில் கிராமப்புறங்களில் எத்தனை எத்தனை குடியிருப்புகள் என்ற விவரம் திரட்டப்பட்டு அது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் 34 லட்சம் குடியிருப்புகளுக்கு குழாய் இணைப்பு கொடுப்பதென உத்தேசிக்கப்பட்டுள்ளது. 2021–ம் ஆண்டுக்கு ரூ.2375 கோடி ஒதுக்கீட்டில் மாவட்டங்களுக்கு ரூ.2265 கோடியை ஒதுக்கீடு செய்திருக்கிறோம். எஞ்சியிருக்கும் 14 லட்சம் குடியிருப்புகளுக்கு பல்வேறு திட்டங்களின் நிதியைக் கொண்டு இணைப்பு கொடுத்து விடுவோம். ஏற்கனவே 4 லட்சம் இணைப்புகள் கொடுத்தாகி விட்டது. அடுத்த ஆண்டு (2021) மார்ச் மாதத்துக்குள் எஞ்சிய இணைப்புகள் கொடுக்கப்பட்டுவிடும் என்றும் அவர் மத்திய அமைச்சரிடம் கூறினார்.

பெண்ணையாறு குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டி வருகிறது. இது அமுலில் இருக்கும் ஒப்பந்தங்களுக்கு விரோதமானதாகும். இது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு ஒரு வழக்கு தொடர்ந்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி, மத்திய நீர் கமிஷன் மூலம் சமரசக்குழுக்கள் கூடி விவாதித்தது. இருந்தும் இந்தக் கூட்டங்களில் எந்த ஒரு முன்னேற்றமும் காணப்படவில்லை. இந்நிலையில் ஒரு ட்ரிப்யூனலை (நடுவர் மன்றம்) ஏற்படுத்த மத்தியஅரசை கேட்டுக் கொண்டுள்ளோம். இது விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுத்தால் பாராட்டுக்குரியது என்றும் மத்திய அமைச்சரிடம் முதல்வர் அறிவுறுத்தினார்.

error: Content is protected !!