ஸ்டெலைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவு செல்லும்!- ஐகோர்ட் தீர்ப்பு!

ஸ்டெலைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவு செல்லும்!- ஐகோர்ட் தீர்ப்பு!

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவு செல்லும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் நச்சு புகையால் பொதுமக்களுக்கு நோய்கள் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை வலியுறுத்தி கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ந் தேதி பொதுமக்கள் நடத்திய மிகப்பெரிய போராட்டம், வன்முறையாக மாறியது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக பலியாகினர். இதையடுத்து அதே ஆண்டு மே மாதம் 28-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு ‘சீல்’ வைத்தது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

ஆனால், தமிழக அரசு எடுத்த முடிவு சரிதான் என்றும், ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுபுகையால் பொதுமக்களுக்கு நோய்கள் வருகிறது. அதனால் அந்த ஆலையை திறக்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் தூத்துக்குடியை சேர்ந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாத்திமா, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு வணிகர் சங்கப்பேரவை மாநில இளைஞர் அணி அமைப்பாளர் தெர்மல் சொ.ராஜா, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ராஜூ, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ஜூனன், தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் வக்கீல் அரிராகவன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை எல்லாம் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்தனர். பல மாதங்கள் இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இந்த வழக்கு விசாரணையின் போது, தமிழ்நாடு அரசு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், தமிழக அரசு சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அப்போது அரசு தரப்பின் இறுதி வாதத்தில், தூத்துக்குடி சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்க ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதை தவிர அரசுக்கு வேறு வழியில்லை.

தூத்துக்குடி மக்களுக்கு சுத்தமான குடிநீர், காற்று வழங்குவது அரசின் கடமை என்ற அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பின்னர் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் மற்றும் காற்றின் தரம் உயர்ந்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தொடர்ந்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளை பின்பற்றாத காரணத்தால் தான் மூடப்பட்டது. மேலும் ஆலைத் தொடங்கி தற்போது வரை 20 ஆயிரம் கோடி வரை லாபம் ஈட்டிய பின்னரும் ஆலையை மூடியதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்குகளின் தீர்ப்பை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் இன்று காலை 10.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிறப்பித்தனர். 815 பக்க தீர்ப்பை வாசித்தனர். தீர்ப்பில் ஆலையைத் திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து ஆலையைத் திறக்க விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என தெரிவித்தனர். ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவு செல்லும் என்றும் தெரிவித்தனர்.

ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யும் வரை உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையையும் நீதிபதிகள் நிராகரித்தனர். ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை தூத்துக்குடியை சேர்ந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் பட்டாசு வெடித்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

error: Content is protected !!