சுதந்திர தினவிழா: மத்திய அரசு புதிய வழிக்காட்டுதல் வெளியீடு!

சுதந்திர தினவிழா: மத்திய அரசு புதிய வழிக்காட்டுதல் வெளியீடு!

ஆகஸ்ட் 15– சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. அந்த வகையில் 15–ந் தேதியன்று காலை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசீயக்கொடி ஏற்றி உரையாற்றும் சுதந்திர தினவிழாவில் 250 பேர் மட்டுமே அழைக்கப்படுகிறார்கள். (ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சம் 900லிருந்து 1000 வரை அழைப்பாளர்கள் அழைக்கப்படுவது உண்டு)

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்குள் நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கட்ட நடவடிக்கை களை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா காலத்தில் சுதந்திர தின கொண்டாட்டம் எப்படி இருக்க வேண்டும் என மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:-–

சுதந்திர தினத்தின் போது பெரிய அளவிற்கு மக்கள் கூடுவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும்.

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுதந்திர தினத்தை கொண்டாட அறிவுறுத்த வேண்டும்.

கொரோனா பரவல் காரணமாக சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல் உள்ளிட்டவை வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் இணைந்து இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் இணையத்தில் நேரலை செய்யப்படும்.

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்வில் ராணுவம் மற்றும் டெல்லி காவல்துறையின் அணிவகுப்பு நடைபெறும். 21 குண்டுகள் முழங்க தேசியக்கொடி ஏற்றப்பட்டு பிரதமர் உரையாற்றுவார்.

அதன்பின்னர் தேசிய கீதம் இசைக்கப்படும். காலை 9 மணியளவில் மாநிலத் தலைநகரில் முதல்வர் கொடியேற்றுவார். காவல்துறை மற்றும் பாதுகாப்புப்படையினரின் அணிவகுப்பு உள்ளிட்டவை நடைபெறும்.

அதேபோன்று, மாவட்ட அளவில் அமைச்சர், ஆணையர், மாஜிஸ்திரேட் இவர்களில் யாரேனும் ஒருவரின் தலைமையில் விழா நடைபெறும். மாவட்ட அளவிலான காவல்துறை, என்.சி.சி மாணவர்கள் அணிவகுப்பு என வழக்கம்போல நிகழ்வுகள் நடைபெறும்.

ஆனால் இம்முறை அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த காலத்தில் பள்ளிச் சிறுவர்கள் – சிறுமிகள் மூவர்ணக் கொடியை பிரதிபலிக்கும் விதத்தில் வண்ண வண்ண உடைகளில் பங்கேற்பார்கள். இம்முறை அப்படியில்லை. சிறுவர் – சிறுமிகள் பங்கேற்க மாட்டார்கள்.

முழுக்கவசப் பாதுகாப்போடு தான் போலீசார் பணியில் இருப்பார்கள். சமூக இடைவெளியோடு தேசீய மாணவர் படை மாணவ மாணவிகள் மட்டுமே பங்கேற்பார்கள். ஏராளமான இடங்களில் கிருமி நாசினி தெளிப்பு முனையங்கள் இருக்கும்.

நாட்டில் மாநிலங்கள், மாவட்டங்கள், யூனியன் பிரதேசங்கள், பஞ்சாயத்துகள் என விழா நடைபெறும் அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது.

விழாவில் கலந்துகொள்ளும் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம். கொரோனா முன்கள பணியாளர்களை கவுரவிக்க வேண்டும் மற்றும் கொரோனாவில் இருந்து மீண்டவர்களையும் கவுரவிக்கும் விதமாக விழாவிற்கு அழைக்க வேண்டும். கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், சுகாதாரத் துறை பணியாளர்கள் உள்ளிட்டோரை விழாவுக்கு அழைத்து கௌரவிக்கலாம். அதே போன்று கொரோனாவில் இருந்து மீண்டவர்களையும் கவுரவிக்கும் விதமாக விழாவிற்கு அழைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகை விழாவில்…

பிற்பகலில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் விழாவில் கொரோனா முன்களப்பணியாளர்கள், டாக்டர்களை கவுரவிக்கும் விதத்தில் அவர்களுக்கு சிறப்பு அழைப்பு அனுப்பப்படும் என்றும் செய்தி வெளியாகி இருக்கிறதுய்.

Related Posts

error: Content is protected !!