சீனாவிலிருந்து கரோனா வைரஸ் பரவும் ஆபத்து நிறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா!

சீன நாட்டின் ஹீபெய் மாகாணத்திலுள்ள வுஹான் நகரில் இருந்து பரவியதாக அறியப்படும் கரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக் கணக்கானோர் அந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஷாங்காய், பெய்ஜிங் உள்ளிட்ட சீனாவின் முக்கியப் பகுதிகளிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த வைரஸ் தொற்று, உயிரைப் பறிக்கின்ற அளவுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதால் அந்நாட்டு மக்கள் மட்டுமன்றி பிற நாட்டு மக்களும் அச்சத்தில் உள்ளனர். இப்படி உலகை மிரட்டும் சீனா விலிருந்து கரோனா வைரஸ் பரவும் அதிக ஆபத்து நிறைந்த 30 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ளதாக ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்–்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று இந்த எண்ணிக்கை 132ஐ எட்டியது. வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப் பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை எட்டியுள்ளது. இந்த வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில், சீனாவுக்கான விமான சேவையை உலக நாடுகள் ரத்து செய்து வருகின்றன. இதனிடையே கரோனா வைரஸ் பாதித்துள்ள சீனாவில் இருந்து விமானம் மூலம் அதிக பயணிகள் வரும் நாடுகளின் புள்ளி விவரங்களை அடிப்படையாக வைத்து, கரோனா வைரஸ் பரவும் அதிக ஆபத்து நிறைந்த 30 நாடுகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
சவுதாம்டன் பல்கலைக்கழகம் தயாரித்திருக்கும் இந்த பட்டியலில், கரோனா வைரஸ் பரவும் ஆபத்து நிறைந்த நாடுகள் மற்றும் முக்கிய நகரங்களின் பட்டியலில் 23வது இடத்தில் இந்தியா உள்ளது.
முதல் இடத்தில் தாய்லாந்தும், 2வது இடத்தில் ஜப்பானும், 3வது இடத்தில் ஹாங்காங்கும் உள்ளன.
அதிக பயணிகளின் வருகை மட்டுமல்லாமல், கடந்த முறை இந்த நோய் பரவலின் போது, அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் மற்றும் நகரங்களையும் இந்த பட்டியல் தயாரிக்க அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.