சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று காலை தனது மகன் திருமணத்தை தென்சென்னை மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற முன்னாள் செயலாளர் எஸ்.பவானிசங்கர் நடத்தினார்.

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும், அண்ணா தி.மு.க. ஆட்சி மன்ற குழு உறுப்பினருமான அ.தமிழ்மகன் உசேன், அண்ணா தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.கோகுலஇந்திரா ஆகியோர் இந்த திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

தென்சென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற முன்னாள் செயலாளரும், முன்னாள் கவுன்சிலரும், சிந்தாமணி கூட்டுறவு சிறப்பு அங்காடி இயக்குனருமான எஸ். பவானிசங்கர் – வாசுகி பவானிசங்கர் மகன் எஸ்.பி.சாம்பசிவராமன் என்கிற சதீஷ் – ஆர்.தீபிகா திருமணம் இன்று காலை ஜெயலலிதா நினைவிடத்தில் மிக சிறப்பாக நடந்தது.

ஜெயலலிதா மீது மிகுந்த பாசமும், அன்பும் கொண்ட தீவிர உண்மையான விசுவாசி பவானிசங்கர். தனது மகன் திருமணத்தை ஜெயலலிதா நினைவிடத்தில் நடத்த முடிவு செய்தார். அதற்காக விசேஷ அனுமதியை பெற்றார்.

இன்று காலை மணமக்கள் பட்டுசேலை, பட்டு வேட்டி அணிந்து வந்தார்கள். விதவிதமான பழங்கள், இனிப்புகள் கொண்ட வரிசை தட்டுகளை பெண்கள் கொண்டு வந்தார்கள். அனைத்தும் நினைவிடம் முன்பு வரிசையாக வைக்கப்பட்டன. திருமாங்கல்யமும் அங்கு வைத்து பூஜிக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் நினைவிடம் ஏராளமான வண்ண வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மலர்களால் இரட்டை இலை அமைக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதா படமும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

மேளதாளம் – நாதஸ்வரம் முழங்க மணமகள் கழுத்தில் மணமகன் மங்கல நாணை அணிவித்தார். அனைவரும் அட்சதை தூவி மணமக்களை வாழ்த்தினார்கள்.

ஜெயலலிதா நினைவிடத்தில் மணமக்கள் விழுந்து வணங்கினார்கள்.

அம்மாவே இந்த திருமணத்தை நடத்தி வைத்ததாக எனக்கு மனதிருப்தியும், மகிழ்ச்சியும் ஏற்பட்டது என பவானிசங்கர் தெரிவித்தார்.

error: Content is protected !!