தமிழ் குரல் / AI Voice
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, புதிய தலைமை நீதிபதி பதவிக்கு ரஞ்சன் கோகோயின் பெயரை மத்திய அரசிடம் பரிந்துரை செய்துள்ள நிலையில் புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் வரும் அக்டோபர் 3 ஆம் தேதி பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
சுப்ரீம் கோர்ட்டின் இப்போதைய தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் வரும் அக்டோபர் 2ஆம் தேதியுடன் முடிவடைகிறது. பணியில் இருந்து ஓய்வுபெறும் தலைமை நீதிபதி, தனக்கு அடுத்து அந்த பதவிக்கு தகுதியானவரின் பெயரை பணிமூப்பு அடிப்படையில் பரிந்துரை செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
இது குறித்து இந்திய பார் கவுன்சில் தலைவர் மானன் குமார் மிஸ்ரா கூறுகையில்,”உச்ச நீதிமன்றத்துக்கு அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரை செய்யுமாறு இப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு ஒருமாதம் முன்பு கடிதம் அனுப்பினோம். இதில் சந்தேகத்துக்கு இடமில்லாமல் மரபுகள் பின்பற்றப்படும்” என்றார்.
சுப்ரீம் கோர்ட் பார் அசோசியேஷன் தலைவர் விகாஸ் சிங் கூறுகையில்,”100 சதவீதம் ரஞ்சன் கோகோயின் பெயரை தீபக் மிஸ்ரா பரிந்துரைப்பார்” என்று தெரிவித்திருந்தது போல் நடந்த நிலையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டால், வரும் அக்டோபர் 3ஆம் தேதி ரஞ்சன் கோகாய் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்பார். அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்துவைப்பார் என்று தெரியவந்துள்ளது.
ரஞ்சன் கோகோய் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். கடந்த 2012ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பொறுப்பேற்றார். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வழக்குகளை விசாரணைக்கு ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சமாக செயல்படுகிறார் என்று கடந்த ஜனவரி மாதம் போர்க்கொடி உயர்த்திய நீதிபதிகளில் ரஞ்சன் கோகோயும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

