5 நாள் வேலை:வங்கி ஊழியர்களின் போராட்டம் சரியா?

5 நாள் வேலை:வங்கி ஊழியர்களின் போராட்டம் சரியா?

வேலைப்பளு அதிகம், மன அழுத்தம் ஜாஸ்தி” – வாரத்தில் இரண்டு நாள் விடுமுறை கேட்டு வங்கி ஊழியர்கள் நடத்தும் நாடகம் அரங்கேறத் தொடங்கியுள்ளது. உண்மையில், இப்போது இவர்கள் பார்க்கும் வேலைக்கு வாரத்தில் மூன்று நாள் அலுவலகம் வந்தாலே அதிகம். சில தனியார் வங்கிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் ‘வாடிக்கையாளர்களை எப்படித் துரத்துவது?’ என்பதில் முனைவர் பட்டமே வாங்கலாம் போலிருக்கிறது. அந்த அளவுக்குச் சேவையில் அலட்சியம், அதிகாரத் திமிர் என வங்கி வளாகங்கள் சாமானியர்களின் வதை முகாம்களாக மாறி வருகின்றன.

கிழிந்த ஏடிஎம்… கிண்டல் செய்யும் ஊழியர்கள்!

டிஜிட்டல் இந்தியா பேசும் காலத்தில், தெருவுக்குத் தெரு இருக்கும் ஏடிஎம் (ATM) மெஷின்கள் பாதி நேரம் ‘அவுட் ஆஃப் ஆர்டர்’ (Out of Order). பணம் எடுக்கப் போனால் கார்டு உள்ளே போகாது; உள்ளே போனால் பணம் வராது. இது குறித்துக் கேட்க வங்கிக்குள் போனால், “அது எங்க கண்ட்ரோல் இல்லை, பிரைவேட் கம்பெனி பாத்துக்குவாங்க” என்று கூலாகப் பதில் வரும். வெரிஃபிகேஷன், ஏடிஎம் பராமரிப்பு என அனைத்தையும் ஒப்பந்த நிறுவனங்களிடம் தாரை வார்த்துவிட்டு, உள்ளே ஏசி-யில் அமர்ந்து சீட்டைத் தேய்ப்பதற்கு எதற்கு இத்தனை சலுகைகள்?

இந்தியன் வங்கியின் “ஆக்டிவேஷன்” அலட்சியம்!

கிரெடிட் கார்டு வாங்குவதாவது போகட்டும், இந்தியன் வங்கி போன்ற இடங்களில் ஒரு டெபிட் கார்டை (Debit Card) ஆக்டிவேட் செய்யக்கூட ஊழியர்கள் உதவ மறுப்பது எந்த ஊர் நியாயம்? “மெஷின்ல போய் பண்ணுங்க”, “ஆன்லைன்ல பாருங்க” என விரட்டுவதே இவர்களின் முழுநேரப் பணி. தகுதியுள்ள வாடிக்கையாளருக்குக் கூட கார்டு கொடுக்காமல், வீட்டுக்கும் வராமல் ‘வெரிஃபிகேஷன் ஃபெயில்’ என ரிப்போர்ட் எழுதும் இவர்களின் ‘சோம்பேறித்தனமான’Verification Team-ஐக் கலைப்பதே புண்ணியம்.

லஞ்சமும்… சொகுசு வாழ்க்கையும்!

கைநிறைய சம்பளம், அடிமாட்டு விலையில் வீட்டுக் கடன், வருடாந்திரச் சுற்றுலாப் பயணம் என மக்கள் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழும் இவர்களில் பலருக்கு, ஒரு லோன் அப்ரூவல் செய்ய ‘கவனிப்பு’ இல்லாமல் கை நகர்வதில்லை.

ஏற்கனவே சனிக்கிழமை வந்து நகை அடகு வைக்கக் காத்திருக்கும் ஏழைகளை, “இன்னைக்கு வராதே” என விரட்டும் இவர்கள், இனி இரண்டு நாள் விடுமுறை எடுத்தால், நாட்டின் பொருளாதாரம் என்னவாகும்? மற்ற துறைகளில் லஞ்சம் வாங்கி கொழுப்பவர்களைப் போலவே, இவர்களும் ஐந்து நாள் வேலை கேட்டு அடம் பிடிப்பது அராஜகத்தின் உச்சம்.

வாடிக்கையாளர்களை மனிதர்களாகக் கூட மதிக்கத் தெரியாத இந்த வங்கி ஊழியர்களுக்கு, ‘விடுமுறை’ கேட்பதற்கு முன்னால் ‘வேலை செய்ய’ தகுதி இருக்கிறதா என்பதை அரசு முதலில் பரிசீலிக்க வேண்டும். மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு மக்களுக்கே சலுகை காட்ட மறுக்கும் இந்த மனநிலை மாறாதவரை, இவர்களுக்கு ஐந்து நாள் வேலை என்பது வெறும் “அலுவலகச் சுற்றுலா” தான்!

பார்த்திபன்

Related Posts

error: Content is protected !!