தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உட்பட 131 பேருக்குபத்ம விருதுகள் அறிவிப்பு!

தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உட்பட 131 பேருக்குபத்ம விருதுகள் அறிவிப்பு!

நாட்டின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, 2026-ம் ஆண்டிற்கான ‘பத்ம விருதுகளை’ மத்திய அரசு அறிவித்துள்ளது. பாரத ரத்னா விருதுக்கு அடுத்தபடியாக, பல்வேறு துறைகளில் மிகச்சிறந்த சேவை புரிந்தவர்களைக் கௌரவிக்கும் உயரிய விருதுகளாக இவை கருதப்படுகின்றன. இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள பட்டியலில், தமிழகத்தை சேர்ந்த 14 பேர் பத்மஶ்ரீ விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டு தமிழ் மண்ணிற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

பத்ம விருதுகளின் பின்னணி மற்றும் தேர்வு முறை

1954-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த விருதுகள், கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல், பொது விவகாரங்கள் எனப் பல துறைகளில் ‘தனித்துவமான சாதனை’ புரிந்தவர்களுக்கு வழங்கப்படுகின்றன. இனம், தொழில், பதவி அல்லது பாலினம் என எந்தப் பாகுபாடின்றி தகுதியானவர்கள் இதற்காகத் தேர்வு செய்யப்படுகின்றனர்.

பிரதமர் தலைமையில் அமைக்கப்படும் பத்ம விருதுகள் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த விருதுகள் இறுதி செய்யப்படுகின்றன. இதில் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், பொதுமக்களே தங்களுக்குத் தெரிந்த தகுதியான சாதனையாளர்களை இந்த விருதுகளுக்குப் பரிந்துரைக்க முடியும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்குக் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்கிச் சிறப்பிப்பார்.

குறிப்பு: மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தவிர, இதர அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனப் பணியாளர்கள் இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியில்லை.

பத்ம விருதுகளின் படிநிலைகள்:

  1. பத்ம விபூஷண்: இந்தியாவின் இரண்டாவது உயரிய விருது.

  2. பத்ம பூஷண்: மூன்றாவது உயரிய விருது.

  3. பத்மஸ்ரீ: நான்காவது உயரிய விருது.

2026 பத்ம விருதுகள் விபரம்:

5 பேருக்கு பத்மவிபூஷண், 13 பேருக்கு பத்மபூஷண், 113 பேருக்கு பத்மஸ்ரீ என மொத்தம் 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 19 பேர் பெண்கள். 6 பேர் வெளிநாட்டினர் அல்லது வெளிநாடு வாழ் இந்தியர்கள். 16 பேருக்கு மறைவுக்குபிந்தைய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பத்ம விபூஷண்:

இந்தி நடிகர் தர்மேந்திரா (மறைவு), உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ், வயலின் கலைஞர் என்.ராஜம், பி.நாராயணன் (இலக்கியம், கல்வி), கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் (மறைவு) ஆகிய 5 பேர் பத்ம விபூஷன் விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.

 பத்ம பூஷண்:

பாடகி அல்கா யக்னிக், பகத் சிங் கோஷ்யாரி, மருத்துவர் கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசாமி, நடிகர் மம்முட்டி, டாக்டர் நோரி தத்தாத்ரேயுடு, பியூஷ் பாண்டே (மறைவு), எஸ்கேஎம் நிறுவனர் மயிலானந்தன், சதாவதனி ஆர்.கணேஷ், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் (மறைவு), தொழிலதிபர் உதய் கோட்டக், வி.கே.மல்ஹோத்ரா (மறைவு), வெள்ளப்பள்ளி நடேசன், டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் ஆகிய 13 பேர் பத்ம பூஷண் விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.

பத்மஸ்ரீ:

நடிகர் மாதவன், மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், இந்தி நடிகர் சதிஷ் ஷா (மறைவு), கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, ஹாக்கி வீராங்கனை சவிதா பூனியா, புதுச்சேரியைச் சேர்ந்த சிலம்பக் கலைஞர் கே.பழனிவேல் உட்பட 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 14 பேருக்கு..

தமிழகத்தைச் சேர்ந்த 2 பேருக்கு பத்ம விபூஷண், 11 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு பத்மஸ்ரீ விருதை 2 பேர் பங்கிட்டுக் கொள்கின்றனர். அந்த வகையில், தமிழகத்தைச் சேர்ந்த மொத்தம் 14 பேர் பத்ம விருதுகளைப் பெறுகின்றனர்.

பத்ம பூஷண்:

கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசாமி (மருத்துவம்), எஸ்கேஎம். மயிலானந்தன் (சமூக சேவை).

பத்மஸ்ரீ:

கர்னாடக இசைப் பாடகிகள் ரஞ்சனி – காயத்ரி சகோதரிகள் (கலை), முன்னாள் அமைச்சர் எச்.வி. ஹண்டே (மருத்துவம்), கே.ராமசாமி (அறிவியல், பொறியியல்), முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கே.விஜயகுமார் (குடிமைப்பணி), ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன் (கலை), புண்ணியமூர்த்தி நடேசன் (மருத்துவம்), ஆர்.கிருஷ்ணன் (கலை – மறைவு), ராஜாஸ்தபதி காளியப்ப கவுண்டர் (கலை), எழுத்தாளர் சிவசங்கரி (இலக்கியம், கல்வி), மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவத்சலம் (கலை), சென்னை ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி (அறிவியல், பொறியியல்) ஆகியோர் விருது பெறுகின்றனர்.

பத்ம விருதுகள் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும். விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கி கவுரவிப்பார்.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Related Posts

error: Content is protected !!