உத்தராகண்ட் சுரங்கப்பாதை உள்ளே சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு! -வீடியோ

உத்தராகண்ட் சுரங்கப்பாதை உள்ளே சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு! -வீடியோ

த்தராகண்ட் மாநிலத்தில் உத்தர்காசி மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதையில் கடந்த நவம்பர் 12-ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டு, அதனுள் 41 கட்டுமானத் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். கடந்த 17 நாட்களாக சிக்கி தவித்து வந்தவர்களை காப்பாற்றும் பணி இன்று இறுதிக்கட்டத்தை நெருங்கி மன நிறைவுடன் முடிந்தது.

முன்னதாக ஆகர் இயந்திரம் பழுது, பிளேடுகள் உடைந்து சிக்கியது, சேதமடைந்த உபகரணங்களை சேகரித்தல், எலி வளை டெக்னிக் பயன்படுத்தல், மலை மீது செங்குத்தாக துளையிடுதல், கைகளால் மண்ணை தோண்டி எடுத்தல் என தடைகளை தாண்டி பல்வேறு முயற்சிகளை எடுத்தனர்.அதுமட்டுமின்றி தொழிலாளர்கள் உள்ளே மன ரீதியாக, உடல் ரீதியாக நலமுடன் இருக்கும் வகையில் உதவிகள் வழங்கப்பட்டன. முதலில் நட்ஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களும், பின்னர் சமைத்த உணவுகளும் அளிக்கப்பட்டன.இதற்கு 6 இஞ்ச் பைப் பெரிதும் கைகொடுத்தது. ஆக்சிஜன் எந்த ஒரு நிலையிலும் தடைபடாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மன ரீதியாக சஞ்சலம் அடையக் கூடாது என்று மனநல மருத்துவர்கள் மூலம் அவ்வப்போது நம்பிக்கை அளிக்கப்பட்டது. உறவினர்களிடம் பேச வைக்கப்பட்டது. வாக்கி டாக்கி மூலம் தொடர்ச்சியாக தகவல் தொடர்பில் இருந்தனர்.சுரங்கப்பாதையில் நடக்கவும், ஓய்வெடுக்கவும் இரண்டு கிலோமீட்டர் அளவில் இடைவெளி இருந்தது. அவர்களுக்குச் சிறிய குழாய் மூலம் மன அழுத்த எதிர்ப்புக்கான சில மருந்துகளும் அனுப்பப்பட்டன.

அதே சமயம், கடைசி 2 மீட்டர் தோண்டும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. ஆம்புலன்ஸ்கள் சுரங்கத்திற்குள் உள்ளே சென்று ஒத்திகை பார்க்கப்பட்டது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்ளே இருந்து ட்ராலி மூலம் தொழிலாளர்களை மீட்க ஒத்திகை பார்த்தனர். வெளியில் தற்காலிக மருத்துவமனை, டேராடூன் மருத்துவமனை, எய்ம்ஸ் மருத்துவமனை ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டன.சுரங்கத்திற்கு உள்ளேயும், வெளியேயும் மருத்துவர்கள் குழு, முதலுதவி சிகிச்சை அளிக்கும் குழு உள்ளிட்டோர் தயாராக இருந்தனர். விமானப் படை விமானமும் தயாராக வைக்கப்பட்டது. சுரங்கத்தில் இருந்து பைப் மூலம் ட்ராலி வழியாக தொழிலாளர்கள் ஒவ்வொருவராக வெளியே வந்ததும் ஆம்புலன்ஸ் மூலம் விமானப் படை விமானத்தில் ஏற்றப்பட்டு நேராக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.

இன்று மாலை வந்ததும் மீட்பு பணிகளில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அடுத்த சில மணி நேரங்கள் தான் என்று மீட்பு குழுவினர் தெரிவித்தனர். இந்நிலையில் தொழிலாளர்களை மீட்கும் பணி இரவு 7.50 மணிக்கு தொடங்கி ஒவ்வொருவராக மீட்கப்பட்டனர். முதலில் மீட்கப்பட்டவரை மீட்புக்குழுவினர் கைக்கொடுத்து வரவேற்றனர். இதன் பின்னர் படிப்படியாக தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட தொழிலாளர்களை முதல்வர் புஷ்கர் சிங் தாமி சந்தித்தார். இதையடுத்து, அவர்கள் உடனே ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்கள்.

வெளியே வந்தவர்கள் அனைவரும் எந்தவித சோர்வும் இன்றி நடந்தே உற்சாகமாக வந்ததை பார்க்க முடிந்தது. உடனடியாக முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்படுவது தான் அடுத்தகட்ட திட்டம். இதன் தொடர்ச்சியாக மனநல ஆலோசனைகளும் வழங்கப்படும். முழு உடல் நலன் பெற்றதும் சொந்த ஊருக்கு செல்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!