உங்களை ஏழையாக மாற்றும் 16 பழக்கங்கள்!
பொருளிழப்புப் பழக்கங்கள் பல இங்கே அருமையாகப் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இப்பழக்கங்கள் உறுதியாக ஒருவரை ஏழையாக்கும். ஒன்றுமே இல்லாத ஏழையாக்கப் போவதில்லை என்றாலும், ஏழிலக்கம் சேர்ந்திருக்கவேண்டிய இடத்தில் ஆறிலக்கத்திற்கே அடிபிடியாக மாற்றிவிடும் பழக்கங்கள் இவை. என்னை நான் மீள்பார்வையிட ஒரு வாய்ப்பாகக் கருதினேன்.

1. புகைப்பழக்கம் – எப்போதுமில்லை, அந்த நாற்றமும் ஒவ்வாது. வெண்புகைக்குழலிலிருந்து இசைச்சுருட்டுக்கு மாறும் ஒரு நிலையை அப்பழக்கத்தினர் எப்போதாவது அடைந்தேயாகவேண்டும். அதுதான் ஏழ்மை.
2. குடிப்பழக்கம் – அறவேயில்லை. எப்போதும் குடிக்கு எதிரானவன். குடிப்பவர்களைக் கடுமையாகக் கண்டிப்பேன். தந்தையினது குடிப்பழக்கத்தினால் விளைந்த அனைத்துத் தீமைகளையும் எதிர்கொண்ட மகன்.
3. விலையுயர்ந்த குளம்பி – தேடிச் சென்று விலைகொடுத்துப் பருகும் வழக்கமே இல்லை. நம்முடைய தேநீர்ப் பழக்கம் நடையோரக் கடைகளோடு முடிந்துவிடுகிறது.
4. கடையுணவு – கடையுணவுமீது முற்காலத்தில் சிறுவிருப்பம் இருந்தது. இன்றைய கடையுணவுகட்கும் சுவைக்கும் தொடர்பேயில்லை. கடையில் மட்டுமே பெரிதாக வார்த்து எடுக்க முடியுமென்பதால் முறுகற்பெருந்தோசை (ரோஸ்ட்) விரும்பியுண்பேன். அது பெரிய விலைப்பொருளும் இல்லை. அதுவும் கடையில் உண்டாகவேண்டிய கட்டாயமுள்ள நாளில் மட்டும்தான்.
5. வெளியூர்ப் பயணங்களில் நீர்க்குவளை பட்டியல் பொருள். கிடைக்குமிடங்களில் நிரப்பிக்கொள்ளவேண்டியது.
6. விளையாட்டு மதிப்பெண்கள் : அஃது என்ன என்று எனக்குத் தெரியாது. நான் கடைசியாக விளையாடிய திரைவிளையாட்டு தலைவர் நகமுடையார் (Captain Claw).
7. சூதாட்டம் – நடராசா திரையரங்கினில் ‘நீதானா அந்தக் குயில்’ படம் பார்க்கச் சென்றோம். வழியோரத்தில் பிதாமகன் சூரியாபோல் கட்டையுருட்டிய கும்பல் வலிந்து அழைத்தது. அவா தூண்டப்பட்டது. கைத்தொகை வைத்து விளையாடியதில் தொகை போனது. முகத்தைத் தொங்கப்போட்டுக்கொண்டு திரும்பி வந்தோம். இன்றுவரை ‘நீதானா அந்தக் குயில்’ படத்தைப் பார்க்கமுடியவில்லை.
8. விற்பேர் உடைகள் : எப்போதும் நாட்டமில்லை. உடையின் நோக்கம் உடல்மறைத்தலும் உடுத்துவதற்கு இலகுவாய் இருத்தலும்தான். ஆனால், இந்தக் கடைகளில்தான் வாங்கவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பேன். அது சிறுகடையாயினும் சரி.
9. புதிய ஐப்பேசி : ஐ வகைப் பேசிகளோடு இன்னும் உறவு ஏற்படாமைக்குக் காரணமே அவற்றின் விலைதான். நன்கு உழைக்கக்கூடிய மலிவான கைப்பேசியைக் கண்டறியத் தெரியும். இப்போது வைத்துக்கொண்டுள்ள பேசிகள் ஐந்தாண்டுகள் பழையவை. என்னுடைய மேடைக்கணினி பதின்மூன்றாண்டுப் பழையது. இன்னும் நன்றாக உழைக்கிறது. நான் ஏன் மாற்றவேண்டும் ?
10. திரைப்பட வலையொளித்தளங்கள் : அவ்வப்போது எட்டிப் பார்ப்பதோடு சரி. ஏதேனும் ஒரு தளம் மட்டும் உயிர்ப்போடிருக்கும். பிறவற்றை ஒரு திங்களுக்கு மட்டும் பெறச்சேர்வேன். காலமானதும் புதுப்பிப்பதில்லை.
11. காலந்தாழ்ந்த கடனடைப்பு : இதுவரைக்கும் இல்லை. கடனட்டையைப் பயன்பாட்டுக் கட்டாயம் கருதி வாங்கியிருக்கிறேன். நேரடியாகக் கணக்கிலிருந்து எடுத்துக்கொள்ளும்.
12. வாடகை வண்டிகள் : அறவே இல்லை. இவ்வகையில்மட்டும் சொந்த வண்டிக்கும் செலவு கூடுதல்தான். இதனைத் தவிர்க்க இயலவில்லை.
13. குலுக்கல் சீட்டுகள் : முற்றிலும் இல்லை. அதிர்ஷ்டம் என்ற பெயரில் நாளிதழ்கூட வெளியாகிய அந்நாள்கள் நினைவுக்கு வருகின்றன. கூடவே தமிழகக் கேரள எல்லைப்புறக் குலுக்கல் சீட்டுக் கடைகள்.
14. ஆபாசத்திற்குச் செலவு செய்வது : இது ஏதோ வளர்ந்த நாட்டு வழிமுறைபோல் தெரிகிறது. நமக்குப் பொருந்தாது.
15. தள்ளுபடிகளை மறப்பது : வாங்குவதே தள்ளுபடி பார்த்துத்தான். ஆனால், தள்ளுபடிக்காகக் காத்திருந்து வாங்கும் பழக்கம் இல்லை. ஆனால், விலையை ஒப்பிடுவது மனப்பழக்கம் ஆகியிருக்கிறது.
16. அடிக்கடி இணையத்தில் வாங்குவது : இந்தப் பழக்கம் எனக்கு இருக்கிறது. நேரக்களிப்பிற்காக இணையக்கடைகளில் மேயப் போகும்போது பிடித்துப் போட்டு விடுகிறார்கள். இதனைக் குறைத்துக் கொள்ளவேண்டும்


