150 ஆண்டு கால கிறிஸ்தவ விவாகரத்து சட்டத்தில் திருத்தம்!?
இந்தியர்களின் திருமண நிலை, விவாகரத்து குறித்த கணக்கெடுப்பு ஒன்று கடந்த மாதம் வெளியானது. அதில் உள்ள சில சுவாரசியமான விஷயங்கள் தெரிய வந்தன. அதாவது இந்தியாவில் ஆண்களை விட பெண்களே விவாகரத்தில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்து மதத்தில் 68% பேரும், முஸ்லீம் மதத்தில் 23.3% பேரும் விவாகரத்து செய்து கொள்கின்றனர். முஸ்லீம் மதத்தில் விவாகரத்து செய்வோரில் 80% பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் நகரவாசிகளை விட கிராமப்புற மக்களே விவகாரத்து செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனராம். உதாரணமாக நகரவாசிகளில் 5.03 லட்சம் பேர் விவாகரத்து செய்தால் கிராமப்புறங்களில் 8.5 லட்சம் விவகாரத்து செய்கின்றனராம். இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் தான் விவாகரத்து பெற்றவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். கிட்டத்தட்ட இந்த மாநிலத்தில் சுமார் 2.09 லட்சம் விவாகரத்து பெற்றவர்கள் வசித்து வருகின்றனர். இந்த 2.09 லட்சம் பேரில் 1.5 லட்சம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே முஸ்லீம்களின் தலாக் நடைமுறைக்கும், பலதார மணத்துக்கும் தடை விதிக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கோரியுள்ளது. அதற்கு பல்வேறு தரப்பில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ள நிலையில் நூற்றி ஐம்பது ஆண்டு கால கிறிஸ்தவ விவாகரத்து சட்டம் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரில் திருத்தம் செய்யப்படவுள்ளது. இந்து, பார்சி திருமண மற்றும் விவகாரத்து சட்டத்தில், தம்பதியர் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்ய விரும்பினால், விவகாரத்து தாக்கல் செய்யும் முன் ஒரு ஆண்டு காலம் பிரிந்திருக்க வேண்டும் என உள்ளது. ஆனால் 150 ஆண்டு கால கிறிஸ்தவ விவாகரத்து சட்டத்தில் 2 ஆண்டு காலம் பிரிந்திருக்க வேண்டும் என உள்ளது. இதனால் விவாகரத்து செய்ய விரும்புபவர்கள் 2 ஆண்டு காலம் காத்திருக்க வேண்டியுள்ளது.
மற்ற மதத்தினருக்கு உள்ளது போல், பிரிந்திருக்கும் காலத்தை ஒராண்டாக குறைக்க வேண்டும் என கிறிஸ்தவ மதத்தினர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். இது தொடர்பாகவும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து அரசிடம் கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட், விவாகரத்து விதிமுறையில் பாகுபாடு ஏன்? வேண்டிய திருத்தங்களை செய்யும்படி கடந்தாண்டு ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது. அதன்படி கடந்த 1869ம் ஆண்டு கிறிஸ்தவ விவாகரத்து சட்டத்தில் திருத்தம் கொண்டு வர சட்ட அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த சட்ட திருத்தம் குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்து நிறைவேற்றப்படவுள்ளது.
இது தவிர விவாகரத்து சட்டத்தில் மற்றொரு திருத்தத்தையும் செய்ய சட்ட அமைச்சகம் விருப்பம் தெரிவித்துள்ளது. தற்போதுள்ள விதிமுறைப்படி தம்பதியர் இருவரும் இந்தியாவில் இருந்தால் மட்டுமே விவாகரத்துக்கு விண்ணப்பிக்க முடியும். இனிமேல் யாராவது ஒருவர் இந்தியாவில் இருந்தால் அவர் வசிக்கும் இடத்தில் உள்ள நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும் வகையில் திருத்தம் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது


