கனிமொழி, ஜோதிமணி உள்பட 13 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 4-ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று 11-ம் நாளாக அவை கூடியது. அப்போது, நாடாளுமன்ற மக்களவையில் நேற்று நிகழ்ந்த பாதுகாப்பு அத்துமீறல் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று இண்டியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால், அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. உறுப்பினர்களை சமாதானப்படுத்த சபாநாயகர் மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தை அடுத்து, அவை பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் அவை கூடியதும், நேற்று நடந்த பாதுகாப்பு அத்துமீறல் குறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிக்கை வாசித்தார். அப்போது, ”நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. உறுப்பினர்களின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. எனவே, இது குறித்து அரசு கவலை கொள்கிறது. சம்பவம் நடந்த உடன் அவைத் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தை சபாநாயகர் நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு பரிந்துறைகள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் சில பரிந்துரைகள் ஏற்கனவே அமலில் இருக்கின்றன. நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்த விவகாரம் குறித்து உறுப்பினர்கள் அனைவரும் ஒரே குரலில் பேச வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. இதை யாரும் அரசியலாக்கக் கூடாது. கடந்த காலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நாடாளுமன்றத்தில் நடந்துள்ளன. 1974ம் ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதி நாடாளுமன்றத்தின் பார்வையாளர் மாடத்தில் இருந்து ரத்தன் சந்திர குப்தா என்பவர் உரக்க குரல் எழுப்பினார். அவரிடம் 2 துப்பாக்கிகள், ஒரு வெடிகுண்டு, துண்டு அறிக்கைகள் ஆகியவை இருந்தன. இதேபோல், அதே ஆண்டு ஜூலை 26ம் தேதி பிப்ளப் பாசு என்பவர் பார்வையாளர் மாடத்துக்கு வெடிபொருட்களைக் கொண்டு வந்தார். அதே ஆண்டு நவம்பர் 26ம் தேதி சத்யதீப் சிங் என்பவர் பார்வையாளர் மாடத்துக்கு வெடி பொருட்களைக் கொண்டு வந்தார். 1999-ம் ஆண்டு அக்டோபர் 9 மற்றும் 10 ஆகிய இரண்டு தேதிகளில் இருவர் மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் இருந்து கீழே குதித்துள்ளனர்.
நேற்றைய சம்பவங்களை கடந்தகால சம்பவங்களோடு நாங்கள் ஒப்பிடவில்லை. ஆனால், நடந்துள்ளன என்பதை தெரிவிக்கிறேன். பார்வையாளர் மாடத்தில் இருந்து இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன. மக்களவையின் பாதுகாப்பு சபாநாயகரின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. சம்பவம் நடந்ததும் உள்துறை செயலாளர் தலைமையில் உயர்மட்ட விசாரணை நடத்த சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். விசாரணை தொடங்கிவிட்டது. எனவே, இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என பிரகலாத் ஜோஷி விளக்கம் அளித்தார்.
அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்கக் கோரி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். சிலர் பதாகைகளைக் காட்டி வலியுறுத்தினர். இதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ் எம்பிக்கள் டி.என். பிரதாபன், ஹிபி எடன், எஸ்.ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், டீன் குரியகோஸ் ஆகிய 5 எம்பிக்கள் அவை நடவடிக்கைக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டதால் அவர்கள் 5 பேரையும் எஞ்சிய தொடர் வரை இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை கொண்டு வருகிறேன் என பிரகலாத் ஜோஷி குறிப்பிட்டார்.
இந்த தீர்மானத்தை சபாநாயகர் இருக்கையில் இருந்த பர்த்ருஹரி மாதாப், குரல் வாக்கெடுப்புக்கு விட்டார். பின்னர் குரல் வாக்கெடுப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக பர்த்ருஹரி மாதாப் அறிவித்தார். காங்கிரஸ் எம்பிக்கள் 5 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவையில் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அவை நடவடிக்கையை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா.
அதே சமயம் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அத்துமீறல் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்கள் மீது உபா (UAPA) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனிநபர் அல்லது அமைப்புகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த யுஏபிஏ சட்டம் (UAPA – Unlawful Activities Prevention Act) கடந்த 1967-ல் கொண்டுவரப்பட்டது. நாட்டின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் எதிராக நடைபெறும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கான அதிகாரத்தை இந்தச் சட்டம் வழங்குகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தில் கைதான 6 பேர் மீதும் டெல்லி போலீஸார் இந்தக் கடுமையான சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர் . மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரகலாத் ஜோஷி , அனுராக் தாகூர் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் உடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் . இதில், நாடளுமன்ற பாதுகாப்பு குறித்து முக்கிய அம்சங்கள் பற்றி விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.