13 நாட்கள்:10 லட்சம் விசிட்டர்கள்:10 கோடி ரூபாய் புத்தகங்கள்!- சென்னை புத்தகக் கண்காட்சி

13 நாட்கள்:10 லட்சம் விசிட்டர்கள்:10 கோடி ரூபாய் புத்தகங்கள்!- சென்னை புத்தகக் கண்காட்சி

சென்னை நந்தனம் ஓய்.எம்.சி.ஏ, உடற்கல்வியியல் கல்லூரியில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் புத்தகத் திருவிழா கடந்த 10-ந்தேதி தொடங்கி நேற்று (புதன்கிழமை) நிறைவடைந்தது. 13 நாட்கள் நடந்த புத்தக திருவிழாவை 10 லட்சம் பேர் பார்வையிட்டு, 5 லட்சம் புத்தகங்களை ரூ.10 கோடி மதிப்பில் வாங்கி சென்றுள்ளது குறிப்பிடத்தக்க்து..
jan 23 - Chennai-Book-Fair-2014-
சென்னை நந்தனம் ஓய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் புத்தகத் திருவிழா கடந்த 10 ஆம் தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்தது. 13 நாட்கள் நடைபெற்ற இந்த புத்தக திருவிழாவில் நேற்று நடந்த நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு சைவ சித்தாந்த நூல் பதிப்பக உரிமையாளர் முத்துக்குமாரசுவாமி தலைமை தாங்கினார். விழாவில் 25 ஆண்டுகள் பதிப்பகத்துறையில் பணியாற்றும் 36 பேருக்கு விருதுகளை, ஐகோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் வழங்கினார்.

அப்போது அவர்,”புத்தகம் படிப்பதற்கு 3 வழிகளை கல்கி கூறி உள்ளார். இரவல் வாங்கி புத்தகம் படிப்பது, நூலகத்தில் பணம் செலுத்தி உறுப்பினராகி கொண்டு படிப்பது, புத்தகங்களை திருடி படிப்பது ஆகிய 3 வழிகளை கூறி உள்ளார். இதுதவிர 4-வது வழியாக காசுகொடுத்து வாங்கி புத்தகம் படிப்பது, இது தமிழர்களுக்கு தெரியாது என்று கல்கி கூறி உள்ளார்.

புத்தக திருவிழாவில் விற்பனையான புத்தகத்தை வைத்து பார்க்கும் போது, கல்கி தற்போது இருந்தால் அவருடைய கருத்தை மாற்றி இருப்பார். 5-வதாக இது போன்ற புத்தக திருவிழாவில் கலந்து கொள்வதன் மூலம் நம்மிடம் இல்லாத புத்தகங்களை வாங்கியும் படிக்க முடியும்.

வரலாற்று நிகழ்வுகளை காட்டும் காலபெட்டகமாகவும், சமூக நிகழ்வுகளை பதிவு செய்யும் ஆவணமாகவும் புத்தகங்கள் திகழ்கின்றன. அத்துடன் புத்தகம் படிப்பவர்களுக்கு ஏதாவது எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். புத்தகங்கள் சமூகத்தை பிரதிபலிக்கும் பெட்டகமாகவும் உள்ளது. இணையதளங்களும், வலைதளங்களும் அதிகரிப்பதன் மூலம் படைப்பாளர்கள் அதிகரித்துக் கொண்டே போகிறார்கள்.

அனைவரிடமும் ஒரு படைப்பாளி ஒளிந்து கொண்டிருக்கிறான். அவனை வெளியே கொண்டு வர புத்தகம் வாங்க வேண்டும். அதன் மூலம் தான் படைக்கவும், எழுதவும் முடியும். இதன் மூலம் பிறர் நம்மை படிப்பார்கள். காதலை பார்க்கும் போதும் கூட புத்தகமாகவே தான் பார்க்கும் மரபு நம்மிடம் உள்ளது.

புத்தக திருவிழாவில் அதிக புத்தகம் வாங்குவதன் மூலம் படைப்பாளர்களும், வாசிப்பவர்களும் அதிகரித்து உள்ளனர். படிப்பதன் மூலம் அறியாமை கூட அகன்று விடுகிறது. இந்த ஆண்டு 777 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. அடுத்த ஆண்டு 1,111 அரங்குகள் அமைக்கப்படும், அதனை பார்க்க வருபவர்களும் 111 போட்டுவிட்டு போக மாட்டார்கள். ”என்று அவர் பேசினார்.