100% ஜாலி கேரண்டி: கிளீன் ‘யு’ சான்றிதழுடன் வரும் ‘மிஸ்டர்.பாரத்’!

100% ஜாலி கேரண்டி: கிளீன் ‘யு’ சான்றிதழுடன் வரும் ‘மிஸ்டர்.பாரத்’!

திரையுலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்து வரும் தயாரிப்பு நிறுவனம் பேஷன் ஸ்டுடியோஸ். தரமான கதைகளைத் தேர்ந்தெடுத்து, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் தயாரிப்பாளர் சுதன் சுந்தரத்தின் அடுத்த நம்பிக்கைக்குரிய வரவுதான் ‘மிஸ்டர்.பாரத்’ திரைப்படம். அறிமுக இயக்குநர் நிரஞ்சன் இயக்கியிருக்கும் இப்படத்தில், பாரத் நாயகனாக அறிமுகமாகிறார். ‘டபுள் ஆக்குபன்ஸி’ புகழ் சம்யுக்தா விஸ்வந்த் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பால சரவணன், நிதி பிரதீப், ஆர்.சுந்தரராஜன், ஆதித்யா கதிர், சிபி சக்கரவர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரிலீசுக்கு முன்பே ரூ.11 கோடி வியாபாரம்: திரையுலகில் ஹாட் டாபிக்

அண்மைக்காலமாக தமிழ் சினிமாவில் புதுமுகங்கள் நடித்தாலும், திரைக்கதை பலமாக இருந்தால் மக்கள் கொண்டாடித் தீர்க்கிறார்கள். அந்த வரிசையில், ‘மிஸ்டர்.பாரத்’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே கோலிவுட்டில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. பொதுவாகப் புதுமுகப் படங்களுக்கு ரிலீசுக்கு முன் வியாபாரம் நடப்பது கடினம். ஆனால், இப்படத்தைப் பார்த்த விநியோகஸ்தர் ஒருவர், தயாரிப்பாளர் சுதன் கேட்ட தொகைக்கு, அதாவது ரூ.11 கோடி கொடுத்து ‘எம்.ஜி’ (Minimum Guarantee) அடிப்படையில் முழுவதுமாக வாங்கியுள்ளார். படம் அவுட்புட் மிகச்சிறப்பாக வந்திருப்பதாலேயே இந்த அசாத்திய வியாபாரம் சாத்தியமாகியுள்ளது என்பதால், திரையுலகினர் மத்தியில் இப்படத்தின் மீது பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

காதல் சொல்லத் தெரியாத நாயகனின் ஜாலி கதை

படம் குறித்து இயக்குநர் நிரஞ்சன் பேசுகையில், “இது முழுக்க முழுக்க ஒரு கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட கதை. காதலித்துதான் திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படும் நாயகனுக்கு, பெண்களிடம் காதலைச் சரியாக வெளிப்படுத்தத் தெரியாது. அதே சமயம், பெண்கள் அவரிடம் காதலைச் சொல்ல வரும்போது, அதை அவராலும் புரிந்து கொள்ள முடியாது. எந்த ஒரு விஷயத்திற்கும் பெரிதாக அலட்டிக்கொள்ளாத ஒரு ஜாலியான இளைஞனின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அக்மார்க் நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறோம். நகைச்சுவைக்காக யாரையும் உடல் ரீதியாகக் கேலி செய்யாமல், மிக நாகரிகமாகக் காட்சிகளைக் கையாண்டுள்ளோம்” என்றார்.

கட்டிங் இல்லாத ‘யு’ சான்றிதழ்: 100% ஃபேமிலி என்டர்டெய்னர்

தொடர்ந்து பேசிய இயக்குநர், “இப்படத்தில் புகைப்பிடிக்கும் காட்சியோ, மது அருந்தும் காட்சியோ என எந்தவொரு முகம் சுளிக்கும் காட்சிகளும் இல்லை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்துப் பார்க்கும் வகையில் படம் ஜாலியாக இருக்கும். அதனால்தான் சென்சாரில் எந்தவிதமான கட்டுகளும் (Cuts) கொடுக்காமல் படத்திற்கு முழுமையான ‘யு’ (U) சான்றிதழ் கொடுத்துள்ளனர்” எனக் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

நண்பர்களின் குறும்படக் கனவு டூ வெள்ளித்திரை

நாயகனாக அறிமுகமாகும் பாரத் கூறுகையில், “நானும் இயக்குநர் நிரஞ்சனும் கல்லூரி காலத்திலிருந்தே நண்பர்கள். அப்போது பல குறும்படங்களை இணைந்து எடுத்துள்ளோம். இந்த வித்தியாசமான கதையைக் கூறும்போது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்படத்தின் மூலம் நான், இசையமைப்பாளர், நாயகி என மொத்தம் 6 பேர் அறிமுகமாகிறார்கள். நல்ல கதை இருந்தால் மக்கள் நிச்சயம் வெற்றி பெற வைப்பார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. குடும்பத்தோடு திரையரங்கிற்கு வந்து தைரியமாக, மகிழ்ச்சியாகப் பார்க்கக்கூடிய சிறந்த அனுபவமாக மிஸ்டர்.பாரத் இருக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

நிஜ வாழ்க்கை கேரக்டரில் சம்யுக்தா விஸ்வநாத்

படம் குறித்து நாயகி சம்யுக்தா விஸ்வநாத் பேசுகையில், “இணையத்தில் ட்ரெண்டான ‘கச்சி சேரா’ அல்பம் பாடலைப் பார்த்துவிட்டுத்தான் இயக்குநர் எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்தார். என்னுடைய முதல் படம் இதுதான் என்றாலும், ‘டபுள் ஆக்குபன்ஸி’ வெப் தொடர் முதலில் ரிலீசாகிவிட்டது. அதில் காட்டப்பட்ட மாடர்ன் ஆடைகளுக்கும் என் நிஜ வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை.

ஆனால், ‘மிஸ்டர்.பாரத்’ படத்தில் நான் நிஜ வாழ்வில் எப்படி இருப்பேனோ, அதேபோன்ற ஒரு எனர்ஜியான பெண்ணாக, முற்றிலும் மாறுபட்ட லுக்கில் நடித்துள்ளேன். காதலைப் புரிந்துகொள்ளாத வித்தியாசமான ஹீரோவை எதிர்கொள்ளும் முக்கியக் கதாபாத்திரம் என்னுடையது. படக்குழுவினர் அனைவரும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர். கவலைகளை மறந்து மக்கள் ரசிக்கும் படமாக இது இருக்கும்” என்றார்.

ரிஸ்க் இல்லாத லாபம்: தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் நெகிழ்ச்சி

படத்தின் வியாபாரம் குறித்து தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் பேசுகையில், “பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பு என்றாலே நல்ல கதையாக இருக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. தற்போதைய சூழலில் தமிழ் சினிமாவில் ரிலீசுக்கு முன் எம்.ஜி (Minimum Guarantee) அடிப்படையில் பிசினஸ் நடப்பது மிகவும் அரிது. ஆனால், புதுமுகப் படம் என்ற போதிலும் அவுட்புட்டைப் பார்த்த விநியோகஸ்தர்கள், உடனே ரூ.11 கோடிக்கு இப்படத்தை முழுமையாக வாங்கிக் கொண்டனர். படத்தின் தரம் மீதான நம்பிக்கைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி இது” எனக் குறிப்பிட்டார்.

பலம் சேர்க்கும் தொழில்நுட்பக் கூட்டணி

இப்படத்திற்கு ஓம் நாராயண் ஒளிப்பதிவு செய்ய, பிரணவ் முனிராஜ் இசையமைத்துள்ளார். திவாகர் டென்னிஸ் படத்தொகுப்பையும், பவன கோவர்தன் கலையமைப்பையும் கவனித்துள்ளனர். அசார் நடனக் காட்சிகளை வடிவமைக்க, கனல் வி.கண்ணன் மற்றும் சரவணன் குகன் சண்டைப்பயிற்சி இயக்குநர்களாகப் பணியாற்றியுள்ளனர். ஏற்கனவே வெளியான இப்படத்தின் இரண்டு பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ‘மிஸ்டர்.பாரத்’ விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தரமான தயாரிப்பு, நாகரிகமான நகைச்சுவை, ரிலீசுக்கு முன்பே லாபகரமான வியாபாரம் எனப் பாசிட்டிவ் எனர்ஜியுடன் திரைக்கு வரத் தயாராகி வருகிறது ‘மிஸ்டர்.பாரத்’.